அதட்டுகிற அப்பாவுக்கு

----அதட்டுகிற அப்பாவுக்கு ---

மழலை வயதில்
மண் தின்றேன்...
தடுத்தெனுக்கு
தாய்ப் பால் தந்தீர்.

பள்ளி பருவத்தில்
பென்சில் திருடினேன்...
பொறுத்து கொண்டீர்.

பெண்கள் மீது இச்சை கொண்டு
பேரானந்தம் அடைந்தேன்...
பதின் பருவம்
பரவயில்லை என்றீர்.

கல்லூரி வகுப்புகள் புறக்கணித்து
காலை மதியம்
திரையரங்கு புகுந்தேன்...
தெரிந்தும் தெரியாமல் இருந்தீர்.

நடுநிசியில் கதவை தட்டுகிறபோது
மாதம் இருமுறை
மதுபான வாடை என் மீது...
சரி போகட்டும் என்று
சகித்து கொண்டீர்.

யாரோ ஒரு நடிகர் சுவரோட்டியுடன்
ராத்திரி புறப்பட்டேன்...
"பத்திரமா வாப்பா"
பாசம் பொழிந்தீர்.

பட்டதாரி ஆகியும்
பணிக்கு செல்லாமல்
ஊதாரியாக
பொழுதுகள் வீணடித்தேன்...
மூன்று வேளையும்
உணவளித்தீர்.

செருப்பு தைக்கும் சிறுவனை
பள்ளிக்கு சேர்க்க முயற்சித்தேன்...
"உனக்கெதுக்குப்ப இந்த வேல"
அதட்ட ஆரம்பித்தீர்.

இரவெல்லாம் விழித்து
சேகுவேராவை படித்தேன்...
"நேரமாச்சு போய் தூங்கு" என்று
கண்டீத்தீர்.

நம் ஊருக்கு
அடிப்படை வசதிகள்
ஏற்படுத்த கோரி
ஆட்சியருக்கு மனு செய்தேன்...
"வேண்டாத வேலைய பாக்கதா"
வெறுப்பை உமிழ்ந்தீர்.

ஈழத்தில் நடந்த
இனப்படுகொலை கண்டு
நீதி கேட்டு
ஆளுங்கட்சிக்கு எதிராக
கோபத்தில் கொடிபிடித்தேன்...
"தாண்டாதே வாசலை"
தடுத்து நிறுத்தினீர்.

தவறு செய்கிற போதெல்லாம்
என்னை உத்தமனாக
எண்ணிய நீங்கள்...
அநீதி பொறுக்காமல்
ஆவேசப்படும் என்னை
அவமதிப்பது சரியா?

குற்றம் இழைத்தபோது
என்னை நீதிபதியாகவும்
நீதி தேடி அலையும் போது
என்னை குற்றவாளியாகவும்
பாவிக்கும் பார்வையை
இந்த கேடுகெட்ட சமூகம்
உங்களுக்கு தந்திருக்கிறது.

அப்பா என்று உங்களை அழைக்காத
ஆயிரமாயிரம் பிள்ளைகளுக்காக

மகனே என்று என்னை அழைக்காத
ஆயிரமாயிரம் பெற்றோர்களுக்காக

ஊழல் நிறைந்த
இத்தேசத்தை
உலுக்கி எடுக்க வேண்டும்.

என்ன செய்ய
அணிதிரட்டியும்
ஆள் பற்றாகுறை...

வாருங்கள் அப்பா
இந்த மண்ணில் நிகழும்
அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் ஒன்றிணைந்து போராடுவோம்...


---- தமிழ்தாசன் ----

எழுதியவர் : தமிழ்தாசன் (14-May-13, 11:47 am)
பார்வை : 112

மேலே