நம் தமிழை நுகர்ந்து வாழ்வோம்..
எள்ளும் வெல்லமும் ஒன்று சேர,
சொல்லும் சுவையில் எச்சில் ஊற,
அள்ளும் இனிமை அதைவிட தமிழில்,
செல்லும் உள்ளம், அது சென்ற வழியில்..
அள்ளக் குறையா தமிழமிழ்தென்பேன்,
சொல்லப் புரியா இன்சுவையென்பேன்,
சொல்தன் சுவையோ சொக்க வைக்க,
சல்லடை கொண்டென்னை வடித்து வைக்கும்..
"ழகர" மொழியைச் சிறப்பென கொண்டு,
சிகரச் சிறப்பை சீரென பெற்றாய்,
மகர மயக்கம் தூவி விடும் எம்மொழியை,
நுகரத் துடிப்பேன் எந்நாளும் பொழுதும்..
கவி தேடும் எம்போலவர்க்கு,
புவியுலகம் பார் செழிக்கச் செய்யும்,
ரவி ஒருவன் உள்ளது போல,
செவி திகட்டச் செய்யும் தமிழன்னை நீயே..
எழிற்றமிழ் பொழிலில் உழன்றவன் நானே,
சொற்றமிழ் மொழியில் சொக்கியவன் தானே,
நற்றமிழ் எழில் கொண்டு நாலுலகை அறிந்தேனே,
கற்றமிழை வைத்து முக்காலமும் கவி வடிப்பேனே..
தங்கத் தமிழ் தேரோட்டம் வர,
என் அங்கமெங்கும் கங்கை ஓட,
மங்கும் தமிழ் என்றுரைப்போர்க்கு,
காலம் கடந்து
தங்கும் தமிழ் ஒன்றே சாட்சி..
மெல்லச் சாகும் தமிழினி என்பர்,
மாள்பவர் கூறும் கூற்றும் அதுவே,
துள்ளித் திரியும் எந்தமிழென்றும்,
ஆள்பவன் இறைவன் சொல்லுவதும் அதுவே..