அரிசி
கிச்சடி, ஆர்க்காடு, வாடன் சம்பா, பூவன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, புழுதிபெரட்டி, தூயமல்லி, குள்ளக்கால் என்று பல வகை நெல் வகைகள் 1950-60-ம் ஆண்டுகளில் இருந்தன.
அதன்பின் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளில் பல்வேறு புதுவகையான நெல் வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஐ.ஆர்.8, ஐ.ஆர்.10 என்று பல வகைகள். மானாவாரி நிலத்தில் விளையும் நெல் விதைகள் ஒரிசா மாநில கட்டாக் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
அப்படிப்பட்ட பாரம்பரிய வகை பழைய நெல் விதைகள் இன்றைக்குக் காணாமல் போய்விட்டன. அரிசி என்ற சொல்லே "ரைஸ்' என ஆங்கிலத்தில் மருவி உள்ளது. மாவீரர்
அலெக் ஸாண்டர் மூலமாக அரிசி பயிரிடும் முறை மேலை நாடுகளுக்குச் சென்றது. உணவுத் தொழிலைத் திட்டமிட்டு முதன்முதலில் உலகில் நடத்தியது தமிழர்கள்தான் என்று மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார்.
பெரும்பாணாற்றுப் படையில், 2-ம் நூற்றாண்டில் ஏர் மற்றும் பயிர்த் தொழில் பற்றிப் பாடப்பட்டுள்ளது. ஒற்றை நாற்று நடவு முறை மிகவும் பழமையானது. அது தமிழர்களின் அடையாளமாகும். மட்கும் எருவைப் பயன்படுத்தியதை அகநானூறு குறிப்பிடுகின்றது. பீகாரில் பயிர் செய்யப்படும் பெளியா நெல், வெள்ளம் பாய்ந்தாலும் தாக்குப்பிடித்து வளரக் கூடியது. ஜார்க்கண்டில் மேட்டு நிலங்களில் கோடா நெல் வகை வறட்சிக் காலங்களிலும் விளையும். உத்தரப் பிரதேசத்தின் ஆற்றுப் படுகைகளில் போரா வகை நெல் பயிரிடப்படுகிறது
. ஒரிசாவில் விளையும் கோரா பூட், காளி மூரி போன்றவை விலங்குகளிடமிருந்து தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வகையாகும். இது போன்றே துல்லபூடியா வகை நெல், வெள்ளத்தில் பல நாட்கள் மூழ்கிக் கிடந்தாலும் பின்னர் தழைத்து வளரக்கூடிய தன்மை கொண்டதாகும். கர்ஹைனி, துன்சி மாசா, மைனா பாங்கி, காளிமோரி போன்ற பாரம்பரியமிக்க நெல் வகைகள் இந்தியாவில் பல மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகின்றன.
வறட்சிக்கும் வெள்ளத்துக்கும் ஈடுகொடுக்கும் நெல் விதைகள் ஒரு காலத்தில் நம் நாட்டில் இருந்தன. ஒரு பக்கத்தில் அதிக உற்பத்தி கிடைக்கின்றது என்பதற்காகக் கலப்பு வகை நெல்லை விவசாயிகள் பயிரிட்டாலும், சில இடங்களில் விவசாயிகள் பண்டைய கால அபரிமிதமான நெல் வகைகளைப் பாதுகாத்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த நெல் வகைகள் இன்றைக்கும் பாதுகாக்கப்படுகின்றன. பாரம்பரிய விதைகள் நிலத்தின் தன்மையையும் நீராதாரத்தையும் கொண்டு பயிர் செய்யப்படுகின்றன
. பாரம்பரிய விதைகளைப் பயன்படுத்தும்பொழுது விவசாயிகள் விதைக்காக அலைய வேண்டியது இல்லை. இந்த வகை விதைகள் தட்பவெப்ப நிலையையும் பாதுகாத்துக் கொள்ளும். இரசாயன பூச்சிக் கொல்லிகள் இதற்குத் தேவையில்லை. இந்த நெல் வகைகளில் உள்ள கார்போ ஹைட்ரேட் எளிதில் கரையும். இதனால் எளிதில் ஜீரணமடையும். ஆனால் கலப்பு ரக, புதுரக விதைகளால் நிலத்தின் வளம் பாதிக்கப்படுகின்றது. இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றைக் கொண்டே கலப்பு ரக விதைப் பயிர்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.
உற்பத்திதான் அதிகமாக இருக்குமே தவிர, இந்த நெல்லிலிருந்து வரும் அரிசியில் சுவை இருப்பதில்லை. மேலும் கலப்பு ரக விதைகளைப் பயிரிடுவதற்கு அதிக உழைப்பைக் கொடுக்க வேண்டியுள்ளது. கலப்பு ரக நெல் விதைகளுக்கு ஆர்வம் காட்டுவது போன்று, பாரம்பரிய நெல் விதைகளின் உற்பத்தியிலும் ஆர்வம் காட்ட வேண்டிய முனைப்பும், அவசியமும் எதிர்காலத்தில் நிச்சயம் வரும்
நன்றி; அமர்க்களம்

