கல்வி - ஒரு பார்வை

கல்வி - ஒரு பார்வை

கற்கால மனிதன் கணினி கால மனிதனாக மாற இந்த கல்வி தான் காரணம். ஆரம்ப காலத்தில், கல்வி ஒழுக்கத்தை கற்றுத்தரவே உருவாக்கப்பட்டது. அரசன் மகனோ, ஆண்டி மகனோ கல்வி வேண்டுமாயின் அரசன்-ஆண்டி என்கிற முகமூடியை கழற்றினால் மட்டுமே குருகுலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டான். அங்கே பாடங்கள் வாழ்க்கை முறையின் வாயிலாக கற்பிக்கப்பட்டது. அப்போதெல்லாம் பாடத்திட்டங்கள் இல்லை. எழுத்து வடிவிலான மதிப்பீட்டு முறைகள் இல்லை. மேலாக, கல்விக்கட்டணங்கள் இல்லை. அவரவர் வலிமைக்கு தக்கவாறு உதவிகள் செய்யலாம். அதுவும் பொருளாக - பணமாக இல்லை.

இன்றைய கல்விமுறை அதிலிருந்து அப்படியே மாறுபட்டு நிற்கிறது. அடிமைத்தனத்திலிருந்து விடுபட பயன்பட்ட கல்வி இன்று எல்லோரும் அடிமைகளாக்க பயன்படுத்தப்படுகிறது. உயர்கல்வி என்பது பெரிய கல்லூரியில் - அதிக பணம் செலுத்தி படிப்பது என்றான பின்பு கல்வியை காப்பாற்றுவது சற்று கடினம் தான். நாம் தொடர்ச்சியாக அரசுகளின் மீது பழிபோடும் முயற்சியில் இருக்கிறோம். ஆனால் உண்மையில் நாமே இதில் குற்றவாளி.

சங்ககாலம் தொட்டு இன்றுவரை பணம், பொருள் சேர்ப்பது பொதுவாகவே நடந்து வருகிறது. இதில் பிழை யாதெனில், அப்பணத்தை எப்படி சேர்க்கிறோம் என்பதே. கல்வி எனக்கு சுய அறிவையும், மற்றவர்களோடு இனிமையாக பழகுகிற பண்பையும், தன்னம்பிக்கையையும், சுய மரியாதையையும் வழங்க வேண்டுமே அன்றி, என்னை எவனெவனுக்கோ அடிமையாக்க முயற்சிப்பது முட்டாள் தனம்.

இதில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர்களின் மீது சுமத்துவதற்கு என்னிடம் மிக அதிகமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

1. நீங்கள் உங்களின் குழந்தைகளை குழந்தைகளாக பார்க்கிறீர்களா? முதலீடாக பார்க்கிறீர்களா?
2. உங்களின் குழந்தையை வளர்க்கிற பொறுப்பு உங்களுடையது தானே. அதை உங்களின் அடிமையாக பார்ப்பது ஏன்?
3. கல்வி நிறுவனங்கள் தான் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன என்றால், அவர்கள் எதிர்காலத்தில் நீங்கள் இல்லாமல் தானே போவீர்கள்?
4. ஆங்கிலம் அறிவா? மொழியா?
5. நீங்கள் செல்லமாக வளர்க்கும் குழந்தை எதற்கு எவனோ ஒரு வெளிநாட்டுக்காரனிடம் வேலை செய்யவேண்டும்?
6. நீங்கள் கூட திட்டாத உங்களின் குழந்தையை எவன் எவனோ திட்டுவதற்கு அனுமதிக்கிறீர்களே... உங்களின் எதிர்பார்ப்பு குழந்தைகளின் சுயமரியாதையா? அவர்கள் சம்பாதிக்கும் பணமா?
7. பணத்திற்காக பிள்ளைகளா? பாசத்திற்காக பிள்ளைகளா?
8. உங்களின் விருப்பங்களை அவர்களின் மீது திணிப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது...?
10. ஒரு பள்ளி விடுதியில் சேர்த்து, 20 மணிநேரம் இடைவிடாமல் படித்து, நிறைய மதிப்பெண்கள் பெற்று, பெரிய வேலையில் சேர்ந்து, நிறைய சம்பாதித்து...... இது கூண்டுக்குள் மிருகங்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதை விட கொடுமையானது அல்லவா?
11. குழந்தைகளின் எதிர்காலம் என்பது உங்களை பொருத்ததா? அவர்களை பொருத்ததா?
12. உங்கள் இருவரில் யார் அடுத்த தலைமுறை? அடுத்த தலைமுறை பற்றி முடிவு எடுக்கும் உரிமை யாருக்கு இருக்கிறது?

இப்படி எண்ணற்ற கேள்விகள் இன்றளவும் விடையின்றியே கிடக்கிறது. இந்த அடிப்படை மாறாத வரை நிச்சயம் கல்விமுறைகள் மாற வாய்ப்பு இல்லை.

இளைய தலைமுறையினராவது விழிப்படைய வேண்டும். உன் கல்வி உன்னை சுயமரியாதை உள்ளவனாக மாற்ற வேண்டும். மாறாக, நீ அடிமையாகிவிட கூடாது.
நீ எங்கு, எவனிடத்தில் வேலை செய்கிறாய் என்பதை விட, என்ன வேலை செய்கிறாய் என்பது முக்கியமானது.

நாம் ஆளப்பிறந்தவர்கள். அடுத்தவரிடம் அடிமையாக வாழப்பிறந்தவர்கள் அல்ல.

தன்னம்பிக்கை தராத கல்வியை கற்பது தற்கொலைக்கு சமம்.

எழுதியவர் : (22-May-13, 11:46 am)
பார்வை : 590

மேலே