மனம் திறக்கிறேன் - இப்படியும் நடக்கும் நெட்டிக்கச் செய்யும் சம்பவங்கள்

மனம் திறக்கிறேன் - இப்படியும் நடக்கும்
(நெட்டிக்கச் செய்யும் சம்பவங்கள்)

உருவங்கள் கண்களிலிருந்து தப்பிடும் மயிற்கூச்செறியும்
அமாவாஸ்யை நடு நாள்

புறத்தே வெட்டிவைத்த
தென்னங்கீற்றுகளும் ,,கயிற்றுக்
கெட்டிலிருந்து விடுபட முயன்று தோற்று போகும்
அளவிலான கொடுங்காற்று

பரந்து நீண்டிருக்கும் தாழ்வாரத்தின் (விராந்தாவின்) மயான அமைதி எதையோ சொல்ல வருவதைப் போல் ஒரு தோணல் ,,காரைக் கன்றுகளும் துயிலின்றி அலைமோதி கொண்டிருக்கும் அபரிவிதமான எச்சரிக்கை நிசி,,

முன்வாசல் அரைக் கதவுகளும் ,,அடைக்கப் படாத ஜன்னல் கதவுகளும் புத்திளமைப் பெற்று கட்டுப்பாடிழந்து அடித்துத் துள்ளிக் கொண்டிருக்கிறது,,அதுவரைக்
கேட்டிடாத அறிய சப்தங்களுடன்

காம்பவுண்ட் மதில் சுவருக்கப்பால்
கூண்டிலடைக்கப் பட்ட நாயும் கூச்சலிட்டு நிறுத்திட மனமில்லாமல் குரைத்து சதா குரலை வருத்தியபடி செய்கையில் மும்முரமாய்

அதன் கண்களில் ஏதோ தென்பட்டுவிட்ட தொனி
மாறாமல்

கூட சேர்ந்து கும்மாளம் போட்டிடும்
வீதி நாய்களும் ஊளையிட்டுத்திரிந்திடும் பனிப்
பெய்து ஓய்ந்த ஆர் இருள்

தெருமுனையில் வீற்றிருக்கும் சாலையோர
மின்கம்பமும் சாய்ந்தபடிக் கிடக்கிறது அகோர
காற்றினால்,,,

அணைந்தெரிந்த படியே இருந்த அவ்விளக்கின் உயிர்
முழுமையாக அணைக்கப் பட்டிருந்த நேரம் நடு இரவு
இரண்டு மணி,,,,

உறக்கமில்லாமல் ஸ்காட்ச் பாட்டிலினோடு
குடாங் கரம் சிகரெட்டின் புகைச்சல் நடனம்
சங்கமித்திடும் வடக்கிழக்குப் பருவக்காற்றின்
வாசம் தொட்டு மறைந்த ஜனவரி மாத இடைநாள்

மின் விளக்குகளும் மின் விசிறிகளும் காலநிலைக்கு
இரைபட்ட நிலையில் விரிசல் கண்டிருந்த என்
தோட்டத்து பங்களா

அணைக்க மறந்திட்ட சிகரெட், விரல்களில் தஞ்சம்
கொண்டுவிட்டதை மறந்தவனாய், தேநீர் மேசையை
ஆட்கொண்டிருக்கும் அழகிய "ஆப்தமித்ரா "பெண்படம்
பதிந்தக் கண்ணாடிக் குவளையில் எஞ்சிய மிச்சில்
மதுபானமதை அருந்திடத் தவறியவனாய் அரை
உறக்கத்தில் ஹால் சோபாவிலே அங்கம் புதைந்திருந்தேன்,,,,

பத்து நிமிடங்களையும் கடந்திருக்காது என் விழிகளை கொள்ளைகொண்ட போதை உறக்கம் ,,

அம்மானுஷ்ய இருட்டில் விளங்காக் கனவுதனை
பிரித்தெடுக்கும் வண்ணம் காலிங் பெல்லின்
தொடரோசை

மயக்கத்திலிருந்து விடுப்பட்டவனாய் சட்டென
எழுந்தவன்

ஆர்வத்துடன் கைவிரலை கவ்வக் காத்திருக்கும்
சிகரெட் துண்டின் மீதி ஆயுளை ஆஷ்டிரையில்
கசக்கி முடித்தவனாய் ,,,தேநீர் மேசையை சரி
செய்து விட்ட நள்ளிரவு 2:30 மணி

நாய்கள் உட்பட எல்லாமே கூச்சலிட்ட வண்ணம்தான்
இருக்கிறது

கதவிடுக்கினூடே அமைக்கப்பட்ட மெல்லிய காந்த விசை பூதக் கண்ணாடியில் வந்திருப்பது யாரெனப் பார்த்தவன் சுதாரித்துக் கொண்டேன் ஆம் வந்திருப்பது என் தந்தைதான்

கதவுகள் திறக்கப்பட்ட கணம் அவர் முகத்தில்
என்றுமில்லாத பிரகாசம் என்னை அணைத்தபடி
உள்ளே நுழைந்தவரிடம் நான் கேட்க விழைந்தேன்

இந்நேரத்தில் என்னப்பா ,,எப்படி வந்திங்க கார் எங்க
என்ன சொல்லாமே கொள்ளாமே வந்திருக்கிங்க
என்ற இன்னும் இரண்டு மூன்று வினாக்களுக்கும்
பதிலளிக்க மறுத்தவர் என்னைக் கண்டு ,,கல கலவென
இராட்சத சிரிப்பை சிரித்துத் தள்ளியபடியே ,,,

ஒரு வார்த்தை மட்டும் சொன்னார்,,, பின் புற சிட்டவுட்
ஊஞ்சலிலே உட்கார்ந்தவாறு அப்படியொரு ஆதங்க வீச்சு
“அம்மாவுக்கு பிடிக்குமேன்னு 1984 ல நம்ப ஆசாரி
முத்தண்ணனை வச்சு செஞ்சு போட்டது என்றவர் ,,

"என்னமோ தெரியலை தேவா உன்னைப்
பாக்கணுமுன்னே உசுரு கெடந்து அடிச்சது
அதான் வந்துட்டேன்" என்று உரையை
முடித்தவர் ஊஞ்சல் ஆட்டத்தை நிறுத்தியவர்

"கிராமத்து வீட்டுல இருக்குற அம்மா ஓட அறையை
உன்னோடுதுன்னு செஞ்சுட்டே அவளோட போடோவையும்
என்னைப் பார்க்க விடாமே பண்ணிட்டே" என்றவர்

சரி வா ,,மாடியில இருக்கிற அம்மா ரூமை திற
அப்படியே நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பழசைப்
பேசிக்கிட்டே லிக்கர் கன்சியூம் பண்ணலாம் ,,,,
சும்மா ஜாலியா எனக்கு ஒரு கம்பனி குடு என்றார்

என்றுமே என்னிடம் அப்படி கேட்காதவர் ஏனப்படி
கேட்டார் ஒன்றுமே விளங்காதவனாய்

சரிங்கப்பா கீழ் அறை வார்ட்ரோப்லத்தான் எல்லாமே
இருக்கு உங்களுக்கு என்ன வேணும் விஸ்கீயா இல்லை
சாம்பைன் அஹ என்ன வேணும் என்று கேட்ட நொடி

கீழ்த்தள ஹாலில் விட்டுவிட்ட கைப்பேசி
அலறத் தொடங்கியது தொடரழைப்பை எடுக்க விழைந்து
அவரிடம் இதோ நான் வர்றேன் பா இருங்க என்று
சொல்லியவன் அலைப்பேசியை எடுக்க விரைந்தேன்,,,,

தொடரழைப்பு துண்டிக்கப் பட்டது மறுமுனை
எண்ணை சோதித்த பொழுது ,,,என் சகோதரி
கிராமத்து வீட்டிலிருந்து அழைத்திருப்பது தெரிந்தது ,,,

பிறகு நாமே இணைப்பு கொடுத்து பேசலாம்
என எண்ணியவன் என் அறை வார்ட் ரோப் ஐ
திறந்து விஸ்கி மற்றும் சாம்பைன் பாட்டிலை
எடுத்த கணம் மீண்டும் கைப்பேசி அலறியது ,,,,

இம்முனை நான் ஹலோ சொல்லுக்கா
சாயங்காலம் தோட்டத்து வீட்டுல இருந்து
கிளம்பி வந்திடுவேன்கா என்றவனுக்கு
அவளின் சில நேர மோனம் ,,, என்னை என்
மனதோடு கேட்டுக் கொண்டது ,,"அக்கா ஏன்
இப்படி இருக்கிறாள் என"

அவள் மௌனம் உடைத்த அடுத்த சில வினாடி,,
அழத்தொடங்கினாள் அப்படியே மெதுவாக
சொன்னாள் "

சின்னத்தங்கம் அப்பா நம்பளை அநாதையாக்கிட்டு
போயிட்டாருடா " என்ற வார்த்தையில் உறைந்தவனாய் ,,,,
என்னக்கா சொல்றே என்ற கேள்வியோடு
மறுமுனை அவளின் ஹலோ ஹலோ ,,என்கிற
சப்தத்தை உணர மறுத்தவனாய் சுருட்டுப்புகை வெளிவந்தப்படி இருக்கும் மாடியறையை நோக்கியபடியே மெதுவாக நடக்கலானேன் மாடிப்படியில் கால் பதித்தவனாய்

அம்மாவின் அறை திறக்கப் பட்ட படியே இருக்கிறது ,,,
அறையெங்கும் சுருட்டுப்புகை வாசம் ஆக்கிரமித்திருக்கிறது

ஆனால் அவரை மட்டும் காணவில்லை
நேரம் புலரைத் தொட்டிட கதிரவன் காத்திருந்த
இரண்டரை மணி நேரத்திற்கு முன்புள்ள
நேரம் (3:30 மணி )

அனுசரன் (தேவன்)

எழுதியவர் : அனுசரன் (25-May-13, 12:12 am)
பார்வை : 441

மேலே