புறநானூறு பாடல் 9 - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

இப் பெருவழுதியை இப்பாட்டால் நெட்டிமையார் எனும் சான்றோர் சிறப்பிக்கின்றார். நெடுந் தொலைவிலுள்ள பொருளைக் கூர்ந்து நோக்கி அறியும் கண்ணை, நெட்டிமையெனச் சிறப்பித்து நயங்கருதி இவர்க்கு இப்பெயர் உண்டாயிற்று.

இப்பாண்டிய மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி யாகசாலைகள் பல நிறுவி யாகங்கள் செய்தவன் என இவன் பெயரால் அறியலாம். இவனை வாழ்த்தும் நெட்டிமையார் ‘பஃறுளியாற்று மணலினும் பல்லாண்டு வாழ்க’ என வாழ்த்து தலால், இவன் குமரிக்கோடும், பஃறுளியாறும் கடல் கொள்ளப்படுவதற்கு முன்பே நம் தமிழகத்தில் வாழ்ந்தவனென்று அறியப்படுகிறது.

இனி பாடலைப் பார்ப்போம்.

ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென 5

அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவி னெடியோன் 10
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.

பதவுரை:

ஆவும்ஆன் இயற் பார்ப்பன மாக்களும் – பசுக்களும், பசுக்களின் இயல்பையுடைய பார்ப்பன இனத்தவர்களும்

பெண்டிரும் பிணியுடையீரும் பேணி – மகளிரையும், நோயுடையோரையும் பாதுகாத்து

தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் – தென் திசையில் வாழும் அவரவர் குடியில் இறந்தோர்க்குச் செய்ய வேண்டிய பிண்டோதகக் (பிண்டம் – சோறு, உதகம் – நீர்) கிரியை செய்யும்

பொன்போற் புதல்வர்ப் பெறாதீரும் – பொன்போன்ற தங்கமான பிள்ளையைப் பெறாத மணமக்களும்

எம் அம்பு கடி விடுதும் – எம்முடைய அம்பை விரைவாகச் செலுத்தும் போது

நும் அரண் சேர்மின் என – நீங்கள் உங்களுக்குப் பாதுகாப்பான இடம் தேடிச் செல்லுங்கள் என்று

அறத்தாறு நுவலும் பூட்கை – அறநெறியைச் சொல்லும் கொள்கையும்

மறத்தின் – அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான உறுதியான குணமும்

கொல் களிற்று மீமிசைக் கொடி – கொல்லும் தன்மையுள்ள யானை மேலே எடுத்துச் செல்லப்பட்ட வானுயர்ந்த கொடிகள்

விசும்பு நிழற்றும் – ஆகாயத்தையே மறைத்து நிழல் தரும்

செந்நீர்ப் பசும்பொன் – செம்மையான சிறந்த நேர்மையான ஆட்சியில் செய்த சுத்தத் தங்கம்

வயிரியர்க்கு ஈத்த – தன் அரசவையில் மகிழச் செய்யும் கூத்து நடிப்போர்க்கும், நடனக் கலைஞர்களுக்கும் வழங்கிய

முந்நீர் விழவின் நெடியோன் – நிலத்திற்கும், ஆற்று நீர், ஊற்று நீருக்கும் முன் தோன்றிய கடல் தெய்வத்திற்கு உன் முன்னோராகிய நெடியோன் விழா நடத்திய

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே – நல்ல நீரையுடைய பஃருளி என்னும் ஆற்று மணலினும் பல ஆண்டு காலம்

எங்கோ குடுமி வாழிய – எங்கள் அரசர் குடுமி நீடூழி வாழியவே!

பொருளுரை:

பசுக்களும், பசுக்களின் இயல்பையுடைய பார்ப்பன இனத்தவர்களும் மகளிரையும், நோய் உடையோரையும் பாதுகாத்து தென் திசையில் வாழும் அவரவர் குடியில் இறந்தோர்க்குச் செய்ய வேண்டிய பிண்டோதகக் (பிண்டம் – சோறு, உதகம் – நீர்) கிரியை செய்யும் பொன்போன்ற தங்கமான பிள்ளையைப் பெறாத மணமக்களும் எம்முடைய அம்பை விரைவாகச் செலுத்தும் போது நீங்கள் உங்களுக்குப் பாதுகாப்பான இடம் தேடிச் செல்லுங்கள் என்று அறநெறியைச் சொல்லும் கொள்கையுடையவன்.

அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான உறுதியான குணமும் கொல்லும் தன்மையுள்ள யானை மேலே எடுத்துச் செல்லப்பட்ட வானுயர்ந்த கொடிகள் ஆகாயத்தையே மறைத்து நிழல் தரும்படி ஆட்சி செய்பவனாகிய எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க!
.
தனது அரசாட்சியின் செம்மையான சிறந்த நேர்மையான ஆட்சியில் செய்த சுத்தத் தங்கத்தை தன் அரசவையில் மகிழச் செய்யும் கூத்து நடிப்போர்க்கும், நடனக் கலைஞர்களுக்கும் வழங்கியவன் உன் முன்னோன் நெடியோன்.

நிலத்திற்கும், ஆற்று நீர், ஊற்று நீருக்கும் முன் தோன்றிய கடல் தெய்வத்திற்கு குடுமியின் முன்னோராகிய நெடியோன் விழா நடத்திய நல்ல நீரையுடைய பஃருளி என்னும் ஆற்று மணலினும் பல ஆண்டு காலம் எங்கள் அரசன் குடுமி நீடூழி வாழியவே! என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாராட்டிப் பாடியிருக்கிறார்.

விளக்கம்:

ஒரு குடியில் இறந்தோர், தென் திசைக்கண் இருந்து, தம் குடியிற் பிறக்கும் புதல்வர் தம்மை நோக்கிப் படைக்கும் சோறும், நீரும் உண்டு வாழ்வர் என்ற நம்பிக்கைகு இணங்க, புதல்வரைப் பெறாத மணமக்களும் போரிலிருந்து விலகிப் பாதுகாப்பான இடம் செல்லுங்கள் எனப்படுகிறது.

பாண்டியன் நெடியோன் காலத்திருந்த பஃருளியாற்றை நெட்டிமையார் எடுத்துச் சொல்லி அதன் மணலினும் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துவதால், அப்பஃறுளியாறு நெட்டிமையார் காலத்தில் இருந்ததென்றும், இவரும் இவரால் பாடப்பெற்ற பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியும் கடல் கோள் காலத்துக்கு முற்பட்டவர் என்பதும் தெளிவு.

இப்பாடல் பாடாண்திணை ஆகும். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண்திணை.

துறை: இயல்பைக் கூறுதல் இயன் மொழித் துறையாகும். ஆ, ஆப்போல் இயல்புள்ள பார்ப்பார், பெண்டிர், பிணியுடையார், புதல்வர்ப் பெறாத மணமக்கள் ஆகியோர் பாதுகாப்புள்ள இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என்று கூறுதல் இவன் இயல்பு ஆகும்.

’தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த’ என்று செம்மையான உயர்ந்த பொன்னைக் கூத்தர்க்கு அளித்துக் கடல் விழா எடுத்த உன் முன்னோன் நெடியோனின் குறைவில்லாது வளங்கும் வள்ளன்மையைக் கூறுவதால் இப்பாடலின் துறை இயன்மொழி ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-May-13, 10:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 2138

மேலே