கனவுகள் கலையட்டும்
அம்மா. . .
அன்று பாடிய தாலாட்டை
இன்றும் பாடு!
என்
கணங்களின் யுகங்களை
கனவுத் தூளியில்
தூங்கச் செய்த
அந்தத் தாலாட்டை
இன்றும் பாடு !
வாரணமாயிரம் சூழ
இந்திரன் போலொரு
இராஜகுமாரன் வந்தென்
கைத்தலம் பற்றுவான்;
வைரமணி மாலைகள் வீழ
முத்துப்பந்தலின் கீழ்
என் திருமணம் நிகழும்;
கைகள் சிவக்க
தந்தையும் தமையனும்
வரிசைகள் வழங்க
ஊர் மக்கள் வாழ்த்தொலி
விண்ணைப் பிளக்கும்;
என் தாலிக்கு சீர் சேர்க்க
வெள்ளிமணி பூட்டிய வண்டியில்
வண்டி நிறைய சீர்களோடு
தாய்மாமன் வருவான்;
என் குழந்தைக்குத்
தங்கத்தில் தொட்டில் தருவான்
என்றெல்லாம் பாடினாயே. . .
உன் பாட்டில் கேட்டதைப் போல்
இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும்
நான் கண்டதில்லையே அம்மா . . .
அந்தப் பிஞ்சு வயதில்
என் கண்களுக்கு
கனவுகளை மட்டுமே
சொல்லிக்கொடுத்துவிட்டாயே !
இன்று. . .
முதிர்கன்னி என்கிறார்கள்.
கண்ணீர் கோடுகள்
சிறைக் கம்பிகளாகிவிட்டன.
உடலைப்போலவே
உள்ளமும் சோர்ந்துவிட்டது.
அம்மா. . .
அன்று பாடிய தாலாட்டை
இன்றும் பாடு !
ஆனால் . . .
இன்னொரு தலைமுறையை
கனவுகளிலேயே
காலந்தள்ள விடாமல்
நீ வாழ்ந்ததைப் பாடு !
யதார்த்த வாழ்க்கையைப் பாடு !