மார்தட்டிக் கொள்வேன்... இந்திய இராணுவன் என்று

நாட்டின் நடுவன் நலமாய் வாழ,
காட்டில் நாங்கள் கரைபுரண்டோட,
வீட்டின் பாசத்தை விறைக்கச் செய்து,
வாழும் உயிரை வாடகைக்குக் கொடுத்தோம்..

வென்புழுதிச் சாம்பல், வறண்ட காடுகள்,
செங்குருதி சரம் கோர்த்து பிரண்ட உடல் மேடுகள்,
ஆகுருதி உடல் கொண்டு வந்தாரை வெல்ல,
நாடு கருதி கொண்டோம் வீட்டின் மறதி..

போகுமுயிர் போனாலென்ன,
பாதுகாத்து என்ன பயன்,
செல்லும் வழியில்
எதிரி சிரம் பறித்துச் செல்வோம்,
வெல்லும் நம் நாட்டுக்கு
அர்பணித்துச் செல்வோம்..

நாற்புறமும் நாடெதிர்க்கும் கூட்டம்,
அவர் நாடிகளைக் கிழிப்பதிலே எங்கள் நாட்டம்,
நீதியில்லை நெறியில்லை
நட்ட நடுஞ் சாமத்திலே,
நிசப்த்தமெனும் சேதியில்லை
எங்கள் வாழ்நாளிலே..

பெற்ற அன்னை பரிதவிக்க,
உற்ற பெண்ணோ உணர்வு பதைக்க,
நெற்றிப் பொட்டில் வீரத் திலகமிட்டு,
நாட்டுப் பற்றுடைய ஆத்திகனானோம்..

பெற்ற பிள்ளை தவழ்ந்திருக்க,
பாதி வயது முடிந்திருக்க,
நாட்டுப் பணி எங்களை நகர்த்தி வைக்க,
நாடிச் செல்வோம் போரின் முனையை..

கொடியை நிலைநாட்ட,
கோடி முறை உயிரிழப்போம்,
விதியை வாழ வைத்து,
வீழ்ந்து வெல்லத் தயங்க மாட்டோம்..

போரில்,
தோழனவன் கறியாடாய் அங்கே,
தோள் கொடுக்க நேரமில்லை..
கண்களில் நீரும் கசிந்தோட,
அந்தக் கன நேரமும் கடந்து போனதே..

உதிரமென்ன உயிருமென்ன,
ஊனிலுள்ள சதையுமென்ன,
ஊதும் காற்றில் உரக்கச் சொல்வோம்,
உணர்வுகள் மறந்து- நாட்டுக்கு
உயிர் கொடுப்போம்..!!,

எழுதியவர் : பிரதீப் (5-Jun-13, 4:09 pm)
பார்வை : 216

மேலே