அழியாத கோலங்கள் !

கால் தடுக்கி விழுந்த போதும்
தட்டுத் தடுமாறி
எழுந்து கொண்ட
குழந்தை -
சட்டை மண்ணைத்
தட்டிவிட்டு
"அழுகாதே !
வலிக்குதா ?
சாக்லேட் தருகிறேன் !"என்று
பொம்மையை
அணைத்துக் கொண்ட
ஒரு அற்புத தருணம் !

**********

பைக்கில்
பயணம் செய்தபோது
குறுக்கே
பறந்து சென்ற
பட்டாம் பூச்சிக்கு
குழந்தை
'டாட்டா' காட்டிய
ஒரு மாலைப் பொழுது !

***********

ஓட்டி வந்த
சைக்கிள் விழுந்து கிடக்க
போதையில்
மயங்கிக் கிடக்கும்
தகப்பனின்
சட்டையை
இழுத்தபடி
அழுதிருந்த
குழந்தையைக் காணவைத்த
அந்த முன்னிரவு நேரம் !

இவையாவும்
இன்னும்
என்னுள்
அழியாதிருக்கும்
நினைவுக் கோலங்கள் !

எழுதியவர் : முத்து நாடன் (7-Jun-13, 11:53 pm)
பார்வை : 89

மேலே