" சிறந்த படைப்புகள் " நாள் - 08/06/2013 ***ஆவாரம் பூ****
வணக்கம்....
08/06/2013 அன்று வெளியான படைப்புகளுள் சிறந்த கவிதைகளை தேர்வு செய்து நடுவர் அளித்துள்ளார்...
அவை...
1.ஏழைக்கிழவனின் ஓலைக்குடிசை- : Nanjappan
2.சிவந்த கைகள் - : கவிஜி
3.இறையெனப்படுவது யாதெனில்.. : சரவணா
4.தமிழால் இணைந்தோம் (?) : கிரிகாசன்
5.போருக்குப் போகாத மகனும் அரசின்
பார்வையால் - முத்து நாடன்
*************************************************************************
1.ஏழைக்கிழவனின் ஓலைக்குடிசை
***********************************
ஏழைக்கிழவனின் ஓலைக்குடிசை
பாலை நிலத்தில் வாழைக்குடிசை
காற்று வாங்க மேட்டுத்திண்ணை
காற்று வீசும் வீட்டுத்தென்னை
மண்பானை நீர் குளிர
குடிப்பது பரமசுகம்
திண் பனை குளிர் நுங்கூர
தின்பது கோடிசுகம்
குளிர் தாங்கும் ஓலைக்கீற்று
வெயில் பொழுதில் தென்றலூற்று
உழவுத்தொழில்
மரபுத்தொழில்
கரவுத்தொழில்
நிறைவுத்தொழில்
மாட்டுவண்டி இரட்டை
கூட்டு வண்டி
காட்டை நன்றே பதமாக்கும்
வீட்டை அண்டி
பொழுதானா நல் தூக்கம்
எழுந்தானா பானை உணவாக்கம்
கலியோடு கம்மங்கூட்டு
புளியோடு கொள்ளுச்சாரு
உழைத்து உருமாறிய உடல்
தளைத்து தானே மாறிய திடல்
மாலைப் பொழுதில் மயக்கும் இசை
வேலைப் பளுவை போக்கும் இசை
பச்சைக்காய்கறிகள்
நச்சற்ற உரம்
இச்சைக் காய் கனிகள்
ஒப்பற்ற வரம்
சிகரத்து ஏழைக்கிழவன்
சுவரற்ற குடிசை முன்
நகரத்து வாழ்
நரகத்து ஊழ்
எழுதியவர் : Nanjappan
நாள் : 8-Jun-13, 11:24 pm
சேர்த்தது : நஞ்சப்பன்
===============================================
2.சிவந்த கைகள்
****************************
எறும்பாய் இருப்பினும்
செவ் வெறும்பாய்
இருக்கவே
சிந்திக்கிறேன்....
இரும்பாய் இருப்பினும்
இணுங்கி போகும்
இயக்கத்தின் சிவப்பு மையாகவே
சிரிக்கிறேன்.....
எந்த ஆயுதம் !
ஏன் எடுக்க....?
நீயே சொல்கிறாய்....
வெந்தாலும் தணியாத
வாழ்க்கையில்
சிவந்தே நிற்கிறோம்....
காடு தொடர்ந்து
கற்பு வரை
அழிக்க துணிந்தது
ஏகாதிபத்தியம்....
ஆரண்யம் காத்து
ஆண்டவனையும் காக்க
தூசு தட்டி கூரானது
சத்தியம்.....
எவன் பாடம் இது...
அச்சுப் பிழையில்
ஏழை- பணக்காரன்...
ஆத்திரம் வருகுது...
கிழிந்த பக்கம்
எப்போதும் ஏழையுடையது.....
புலி விரட்டிய
பெண் குலத்துக்கு
சனி விரட்ட தெரியவில்லை...
சரித்திரம் படைக்க
தெரிந்தவனுக்கு
சாத்திரம் உடைக்க தெரியவில்லை....
சாதி இல்லை
என்பவர்கள்
எந்த படிவத்திலும்
இனி எழுதாதீர்கள்......
சாக்கடை அள்ளுபவனை
சாமி தேடும்
மறவாதீர்கள்.....
இனியொரு விதி செய்ய
இனியாவது
இணைந்திடுவோம்....
சிவந்து கிடக்கும்
கீழ் வானத்தில்
சிவந்தே கிடக்கட்டும்
சிவப்பு சூரியன்...
அது
சிலிர்த்த மனத்தின்
சிவந்த சினத்தின்
குறியீடு.....
எழுதியவர் : கவிஜி
நாள் : 8-Jun-13, 2:02 pm
சேர்த்தது : கவிஜி
=========================================
3.இறையெனப்படுவது யாதெனில்..
*********************************************
தினமும் பூசிக்கொள்கிறது
கொலையறுப்பு ரத்த
ஒழுகல்களை....
வேல்மலை... நல்மேய்ப்பர்
மெக்கா கோபுர
புகைப்படங்கள் ...!
இறைச்சிக் கூடங்களில்....
பொதுக் கட்டில்கள்
தடுத்துப் பிரிக்கிறது
அவிழ்த்தெறிந்த ஆடைகள்...
தடுப்புக்குள் ஒளிர்கிறது
அமைதியாய் ஒரு
அம்மன்விளக்கு
மல்லிப்பூ வாசனைகளோடு...
பளிங்குத் தரைகளில்
வெண்கலச் சிலைகளாய்
அபிநயம் பிடிப்பது....
கரகச் செம்புகளோடு
கால்கள் சுழற்றுகிறது
பெருவழி வீதிகளில்.....
கட்டை அளவுகளோடு
தடம் பிறழா மிருதங்க
மெல்லிசையதிர்வுகள்
உதிர்ப்பது....
நெற்றிக்கட்டு வியர்வை
வழிதல்
பறைச் சத்தங்களாய்
மண்ணிசை பொழிகிறது....!
சிறப்புத் தரிசன
வரிசைகளில்
பொட்டலங்களாய்
அடைந்து புழுங்குவது......
மலை மரத்தடி
தொன்னையிலைப் பச்சை
குழுமக் கையேந்தல்களாய்
சிரித்து மணக்கிறது...
இல்லையென்று
எப்படிச்சொல்ல....? எங்கும்
நிறைந்திருக்கிறது
இறை....
பணத் தேடல்களாகவும்
பசி மூலங்களாகவும்......!
எழுதியவர் : சரவணா
நாள் : 8-Jun-13, 1:31 pm
சேர்த்தது : சரவணா
=========================================
4.தமிழால் இணைந்தோம் (?)
**************************************
பனிவிழும் இரவில் படரொளி நிலவில்
பதுமையென் றயலிருந்தாள்
கனிவிழும் தருவின் கலகல ஒலிபோல்
கலந்தொரு மொழியுரைத்தாள்
தனித்திடு முணர்வைத் தறித்ததில் மகிழ்வைத்
தழைத்திட வழி சமைத்தாள்
புனிதமென் மனதுள் புகுவழி அறிந்தாள்
பொறுமையை ஏன் இழந்தாள்
வெளியிடை இரவும் விடிந்தொளி பரவும்
வரை இணைந்துயர் பறந்தோம்
ஒளி நிலவேறி முகில்களில்தாவி
உலகமும் மறந்திருந்தோம்
களிமனங் கூடிக் கதைபலபேசி
கனவுகள்தனை வளர்த்தோம்
நெளிமலர் வாசம் நிரவிய தென்றல்
நிலையதில் அலைந்திருந்தோம்
தெளிமழை முகிலும் திணறிட இடியும்
தரைபட வரும்பொழியும்
துளியுடன் மின்னல் தொடும்-புவியென்னில்
துடிபட உயிர் பிரியும்
ஒளிவர உறவில் எழும் வெளிபெரிதாம்
இரவதின் எதிர்வடிவம்
உளிபட பிரியும் இருவகை கல்லின்
உடைவென நாம்பிரிந்தோம்
நிலவுகள் சுடவும் மலர் தொட வலியும்
நனைபொழி லலைமனமும்
பலவித உணர்வும் படபட முறிவும்
பலியிட நிலை சரிந்தோம்
குலமகள் நினைவில் குறுகிய பார்வை
கொழுந்தெனத் தீபரவ
உலகமும் கொண்ட உயிர்வெறி போலும்
உழன்றிட உளம் துடித்தோம்
வகை யிதுவாக வசந்தமில் வாழ்வை.
வளமுடன் உருவமைக்க
பகைகொண்ட மனதில் பரிவெழும் வகையில்
பயனுறப் புதுமை செய்ய
முகைவிடும் மலராய் மறுபடி மலர்வில்
மனமதை தெளிவெடுக்க
புகையனல் அடங்க புனலெழும் குளிராய்
பெருந்தமிழ் தனில் இணைந்தோம்
தகைமையைக் கொண்ட தமிழெனும் அழகைத்
தருங்கவி தைகள் படித்தோம்
பகைமையும் மறந்து பைந்தமிழ் ஊற்றில்
பலசுகம் கொண்டலர்ந்தோம்
தொகையெனக் கவிகள் துலங்கிடும் கலைகள்
தொடரென தொடத் தொடவே
மிகையென மகிழ்வும் மின்னிடும் ஒளியும்
மெருகெழ கரமிணைந்தோம்
எழுதியவர் : கிரிகாசன்
நாள் : 8-Jun-13, 10:55 am
சேர்த்தது : கிரிகாசன்
====================================
5.போருக்குப் போகாத மகனும் அரசின்
******************************************************
பார்வையால் ...
***********************
தனிமையோடு
மௌனமாய்ப்
பேசிக் கொண்டிருந்தது
தனித்துக் கிடந்த
தார்ச் சாலை !
இருள் அப்பிக் கிடந்த
பின்னிரவின்
வருகைக்குப் பின்னும் -
கைப் பையோடு
ரேஷன் பொருள் வாங்க
காலையில்
சிரிப்புடன்
சைக்கிளில் சென்ற
மகனைக் காணாத
தாய்க் கிழவி
வாசலில் அமர்ந்து
சாலையைப்
பார்த்துக் கொண்டு இருந்தாள்!
நடு வீட்டில்
நடுங்கியபடி
எரிந்துகொண்டு இருந்தது
அரைகுறைத் திரியுடன்
அரிக்கேன் விளக்கு !
எழுதியவர் : முத்து நாடன்
நாள் : 8-Jun-13, 12:27 am
சேர்த்தது :
முத்து நாடன்
=============================================
நன்றி
நடுவர் குழு