அவள் அழகில்லை
அவள் ஒரு அழகியில்லை, ஆனாலும் அவளின் குணம் எவரிடமும் காணவியலாது. எல்லொரையும் மதிப்பவள். பழகினவர்களுக்கு எல்லாம் அவளை மிகவும் பிடிக்கும். உடனேயே நண்பர்களாகிடுவர். எல்லொர்க்கும் உதவிடும் மனம். இப்படித்தான் ஒருமுறை பெட்டிக்கடை நடத்தும் அந்த ஏரியா பையனுக்கு பஸ்ஸில் ஏரினபொழுது வழுக்கி விழுந்தவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கூட்டி கொண்டுசேர்த்து முதலுதவினாள். அவன் இன்றுவரையிலும் அவளைக்காணும் பொழுதெல்லாம் வணங்கிக்கொண்டிருக்கிறான் அன்புப்பெருக்குடன். யாரிடமும் கோபம் கொள்வதேயில்லை. பெண்ணெனில் அழுகையின்றி எவரையும் காணவியலாது, ஆனால் அவள் எதற்காகவும் அழுததில்லை. துக்கமும் கோபமும் வந்தால் புத்தகத்தினுள் மூழ்கிடுவாள். பேசுவதைத் தவிர்த்திடுவாள். சுத்தம், அமைதி, நேரம்தவறாமை, உண்மை, கருணை இவைகள்தான் அவளின் மொத்த உருவம்.
அவளின் அக்காக்கள் இருவரும் மிகவும் அழகானவள்கள். 12த் முடித்தவுடன் திருமணம் முடிந்தது. மாப்பிள்ளைகள் கொத்திச் சென்றுவிட்டனர். பெரியவர் பிகாம் முடித்து நெல்லூர் ஸ்டேட்பாங்க்கில் வேலை. ரெண்டாமவர், அஷோக் லேலாண்டில் சர்வீஸ் எஞ்சினியர். இருவருக்கும் நல்ல சம்பளம். அவளுக்குத்தான் இதுவரையிலும் 6 வரன்கள் தட்டிப்போய் இருந்து இருக்கின்றன. அழகில்லை, நிறம் கம்மி, ஒல்லிக்குச்சு என்று ஏதேதோ முட்டாள்தனமான காரணங்கள். வயது 27 ஆகிவிட்டது. எம்காம் படித்திருந்தும் பார்டைம் வேலைதான் கிடைத்தது. 12த்துக்கு டியூஷனும் சொல்லித்தருகிறாள். ஏதோ வருமானம்.
அம்மாவும் அப்பாவும் எதிர்வீட்டில் வாடகைக்கு இருந்தவனை வலியவலிய சென்று வீட்டுக்குவந்து சாப்பிட அழைத்தும், மாலையில் காப்பிபோட்டுக் குடுத்தும், பலவாறு அவனுக்கு உதவி அவனை மாப்பிள்ளையாக்கிடத் துடித்தார்கள். அவளின் அழகின்மையைவேறு அவனிடம் சொல்லிக் கெஞ்சிப்பார்த்தார்கள். அவன் அழகாகத்தான் இருந்தான். ஆனாலும் அப்பாவும் அம்மாவும் இப்படி அவனிடம் நடந்துகொள்வது அவளுக்குப் பிடிக்கவில்லை. இந்த சமயம் அவன் தன் சொந்தஊருக்கே மாற்றல் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டான். அவனுக்கு செய்தவைகள் அத்தனையும் வீண். அம்மாவுக்கும் அப்பாவுக்கும்தான் அதை ஜீரணிக்க முடியவில்லை. மேலும் இப்பொழுதெல்லாம் அவள் வீட்டினுள் நின்றாலும் நடந்தாலும்கூட குற்றம் காண்கின்றார்கள். சில அம்மாவின் வார்த்தைகள் வருத்தம் ஏற்படுத்தின. பெண்ணுக்குத் திருமணம் தள்ளிப்போவதென்ன பெரிய கொலைக்குற்றமா என்ன. ஏற்கனவே அவளைப்பார்க்க வந்த மாப்பிள்ளைகளில் ஒருவன் வேறு எங்கும் பெண் அமையாததால் மறுபடியும் வந்து அவளை சரியென்றான்போலும். பெற்றோர் சந்தோஷம் கொண்டனர். ஆனால் அவள் முடியாதென்றாள். வீடு போர்க்களம் ஆகிவிட்டிருந்தது. அம்மாவும் அப்பாவும் அவளுடன் இப்பொழுது பேசுவதையே நிறுத்திக்கொண்டுவிட்டனர். அவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது, ஒரு பெண்ணின் மனக்கஷ்டம் பற்றி. அழகில்லாதது என்ன குற்றமா? அவர்களிருவரும் சேர்ந்து கொடுத்ததுதானே இந்த அவலட்சணம். அதுகூட அவர்களுக்குப் புரியவில்லை.
ஒரு முடிவு செய்தாள். நேராக அந்த பெட்டிக்கடை பையனிடம் சென்றாள். “ என்னைத் திருமணம் செய்துகொள்வாயா ” என்று குனிந்தவாறு கேட்டாள். அவன் ஒன்றும் பேசவில்லை, வீட்டிற்குச் செல்லுமாறு அறிவுருத்தினான். அடுத்தநாள் அவன் தன் குடும்பத்துப் பெரியவர்களுடன் வீட்டிற்குவந்து மணம்பேசி மணமுடித்துக்கொண்டான். பெற்றோர் பாரம் குறைந்ததாக சந்தொஷம் கொண்டனர்.