சேராக் காதலே போ .......................!

அருகிலே
அரிதாரம் பூசி நட(ன)மாடும்
அவஸ்தைகள் காணா உயிர்த்தோழனே
அபகரித்த என் பொழுதுகளை தீண்டிவிடாதே !
அம்பாரியில்
அம்மணி நான் பயணிக்கும்
அநித்திய களிறொன்றின் மணியோசை
அபரிமிதமாய் முன்னே வருவதோ தீட்டானது !
ராஜ வேடிக்கை
ராகங்கள் முழக்கி வர
சற்று முறைத்து முகம்சுளித்துவிடு
சங்கேத மொழியுணர்த்தும் அலைகள் ஓயட்டும் !
மருங்கில்
மனம் சேமித்த சொப்பனங்கள்
கார்மேகங்களாய் திரளக் கண்சிமிட்டாதே
கட்டுக்கடங்காது பெய்யெனப் பெய்துவிடும் !
கதிரையிட்டுக்
கட்டளையிடும் காதலோ
மண்டியிடக் கேட்கும் செவிமடுக்காதே
மரபுக்கவிதைகள் மரபு மீற அனுமதியாதே !
இக்கடற்கரையில்
இறையப்பட்ட காதல்கழிவுகள்
சீழ்பிடித்து அழுகிவிடக் கூடுமோ
சீதளமாய் தொடரும் நிசப்த பந்தத்தில் !
சீராட்டும்
சீலனைக் கண்டவளின்
இரண்டகநிலைத் திணறலை
இத்தினம் கண்டுவிட்ட யுகம் மறக்குமோ ?!
சேரா இதயங்கள்
சேய்மையில் சேயாகக் கண்டு
தாய்மையை உணர்ந்திட மறுக்கிறேன்
தட்டுப்படும் பொய் நிழல்கள் நிஜம் அறியுமோ ?!
தளம்பலுடன்
தற்காத்துக்கொள்ளும் உணர்வில்
சேற்றை இறைத்து களித்தல் பாவமென
சேர்ந்திடாக் காதலுடன் விடைபெறுவோம் !