ஒப்பாரி - ஆத்தாளுக்கு

சுட்ட பணியாரம்
சூடு எறங்கலயே
தொவச்ச சீலத்துணி
ஈரம் காயலயே

படிப்பு ஏறவில்ல
பசிகூட எடுக்கவில்ல
பாசத்த ஊட்டிவிட்டு - அடி
பாதியில போகலாமோ

அடுச்சு வளத்தவளே
ஆக்கி போட்டவளே
அனாதயா விட்டுபுட்டு
ஆத்தா போகலாமோ

வந்தவுகளுக்கெல்லாம்
வடுச்சு போட்டவளே
ஒன்னாக ஊருசனம் வந்துருக்கு
ஒறங்கி கெடக்குறியே

தோட்ட பூவரசத்துல
தொட்டிகட்டி போட்டவளே
ஓகோனு வளந்த மரம்
ஒனக்காக வளந்த மரம்
படுத்துவிட்ட ஒனத் தூக்க
பாட(டை) செய்ய வந்ததடியோ

பங்குனியில வச்ச தென்ன(னை)
பாள(ளை) போட்டதடி
குரும்ப வைக்குமுன்ன
வீடு வந்து சேந்ததடியோ

பொழுசாயும் நேரமாச்சு
பொட்ட கோழியெல்லாம் வந்தாச்சு
பஞ்சார கூடுயெங்க - ஆத்தா
பதறி துடிக்குதடியோ

செவல மாடு வந்து
செந்தண்ணி வடிக்குதடி
ஒழவு மாடு வந்து
ஒக்காந்து அழுகுதடியோ

கால் வயித்து கஞ்சிக்கு
காடுமேடெல்லாம் ஒழச்சவளே
கர(ரை)யான் தீனிக்கு
கட்டையில போகுறியோ

காஞ்ச பருத்திமார
கட்டுக்கட்டி வந்தவளே
மழ(ழை)யில நனையவிட்டு
மகனவிட்டு போகுறியோ

நட்ட நாத்தெல்லாம்
நல்லா வளந்துருச்சு
நாதியத்து விட்டுபுட்டு
நந்தவனம் போகுறியோ

ஆத்தா நீ வளத்த
அரலி பூத்திருச்சு
அழுக விட்டுபுட்டு
ஆத்தா போகுறியோ

அவரக்கொடி பூத்திருக்கு
அழயாத மஞ்சலோட
ஆத்தா விட்டுபுட்டு
அழவிட்டு போகுறியே

பட்டினி கெடந்தாலும்
பாசத்தால வயித்த நெறச்சவளே
தனியா தவிக்கவிட்டு
தாயே போகுறியோ

நட்ட கொடி பூத்துருச்சு
நட்டுக்கல்லா நானிருக்க
நாலுபக்க சொவரெல்லாம்
நாதியத்து போயிருச்சே

எழுதியவர் : வா.சி. ப.ம. த.ம.சரவணகுமார் (20-Jun-13, 10:17 am)
பார்வை : 112

மேலே