அன்புள்ள அப்பாவுக்கு
![](https://eluthu.com/images/loading.gif)
அன்புக்கோர் ஆலயம்,
என் தந்தை தேவாலயம்!
புனிதமும் புத்தாக்கமும்
பூத்துக் குலுங்கும் பூங்காவனம்!
என்னை செதுக்கிய சிற்பியே,
செழிப்பாய் வளர்ந்திட உரமிட்ட உழவனே!
என்னில் வாழும் இறைவனே!
என்னை கரு முதல் உரு வரை
செதுக்கி உருவமைத்தாய் !
கண்ணுக்குள் இமைப் போல்
உன்னுள் சுமந்தாய்....!
தோல்விக் கண்டு துவண்டிடும் போது,
என்னை தாங்கி பிடிக்கும் ,
தூணானாய்...!
என் அன்பில்
நீண்டு...
சீன மதி சுவரானாய்!
அறியாத வயதில் பயம் ஆட்கொள்ளும்போது,
என்னை தட்டிக் கொடுத்தாய்,..
பயத்தை எட்டி உதைத்தாய்!
சந்தோசம் என்னை சங்கமிக்கும் போது,
அம்மாவை தேடும் என் விழிகள் ,
துக்கம் என்னை தொலைக்கும் போது,
நீ வேண்டுமென அடம்கொள்ளும் !
மலைப்போன்ற துயரம்,
பனிப்போல மறையும் !
உன் அரவணைப்பில் நானிருந்தால் ...
நான் தோலுயர வளர்ந்தாலும் எனை,
ஆயிரம் சேனைகள்
தாங்கும் ஆலமரம் நீ !
நான் சிறப்புற வாழ,
ஆசைகள் பல துறந்தாய்!
உன்னில் கற்றுக் கொண்டேன்....
உறவை நேசிக்க,
உழைப்பை சுவாசிக்க,
நேர்மையை பூசிக்க,
தியாகத்தை யாசிக்க,
அப்பா........
என்னை கருவறையிலிருந்து,
புறம் தள்ள வலிப்பட்டவள் தாய்தான்!
ஆனால்,
இறுதிவரை எங்கள் இருவரையும்
கரைக் சேர்த்தவன் நீதான் !
ஏட்டில் எழுதி மாளாது
உனதன்பு ....
உன்னோடு வாழ்ந்த காலம்,
மீண்டும் மலராத வசந்த காலம்!
பாசத்தின் உசந்த காலம்!
தந்தையர் தினத்தில் மின்னும்
துருவ நட்சத்திரமாய் வாழ்க நீ..!