உழவனே உழவனே ...!
ஊருக்கு
உழைக்க தெரிந்த
உத்தமனும் நீ... தான்
வாடிய பயிர்களின்
வலியை உணரும்
மருத்துவனும் நீ... தான்
வானம் பார்த்து
வாடிக்கிடக்கும் பயிர்களுக்கு
பாரியின் தேராய்
உன்
உடலையே தாரை வார்க்கும்
வள்ளலும் நீ... தான்
ஊருக்கு உழைத்திடல்
யோகம் என்பது
உனக்கு மட்டும் தானே சொந்தம்
விதை நெல்லுக்காக
தாலியை அடமானம் வைப்பவன் நீ
அறுவடைக்கு பின்
தாலியை மீட்க தானியத்தை
அடமானம் வைப்பவனும் நீ... தானே
இது தானே
உன் வாழ்க்கை சக்கரம் ...?
எருதுகளுக்கு பின்
வயலுக்குள் சுற்றிச்சுற்றி
உழவோட்டி
உன் வாழ்கையும் வறுமைக்கு
பின்னே சுழன்று வருகிறதோ ...?
நீயோ
சோளக்காட்டு பொம்மையாய்
வயலுக்கு காவல் இருக்கிறாய்
உன்
உழைப்பை சுரண்ட
வேஷமிட்ட வியாபாரிகள்
உன்னை சுற்றிச்சுற்றி
காவல் இருக்கிறார்கள் ....!
உன்
உழைப்பின் உற்பத்தியை
அடி மாட்டு விலைக்கு
பேரம் பேசும்
கொள்ளைக்காரர்களும்
பதுக்கிவைக்கும் பகல் வேசதாரிகளும்
உன்னை சுற்றி சுற்றி
மினுமினுத்து வலம் வர
நீயோ ...
விட்டில் பூச்சிகளாய்
வீழ்ந்து மடிந்து கொண்டுள்ளாய் ...!
கதிரவனின் வரவுக்கு முன்
கழனியில் கண் விழிக்கும் உழவனே ...!
விழி விழி ...
நீ ...
விழித்தால் தான்
விடிவு பிறக்கும் ...
பஞ்சு பஞ்சாய்
வெடித்து பரவட்டும்
உன் பசுமை புரட்சி ...
உழவனே ... உழவனே ...
காலம் கனியட்டுமென
காத்திருக்காதே ... உன்
அவநம்பிக்கைகளை களையெடுக்க
இதுவே சரியான தருணம் ...
எழு ... விழி ...
நியாயமான விலைக்காக போராடு ...
உன்
உரிமைகளுக்காக குரல்கொடு
வாழ்ந்தான் விவசாயி
என ...
வரலாறு வாழ்த்தட்டும் ...!