தண்ணீர் தண்ணீர்...!
தண்ணீர் நம் உடலுக்கு மிக அத்தியாவசியமான ஒன்று, ஒருவர் ஒரு நாளில் எவ்வளவு தண்ணீர் பருக முடியுமோ அவ்வளவு தண்ணீர் பருக வேண்டும், சராசரியாக மூன்றிலிருந்து நான்கு லிட்டர் வரை அவசியம் பருக வேண்டும் என்ற தகவலை ஆசிரியர்கள் மூலமாகவும், வீட்டின் பெரியவர்கள் மூலமாகவும் தெரிந்து வைத்திருந்தேன்.
ஆனாலும் அதிகமாக வியர்க்கும் எனக்கு அந்த சமயத்தில் மட்டுமே அதிகமாக தண்ணீர் தேவைப்பட்டது. ஓய்வு நேரங்களில் அதிகமாக அதன் பயன்பாடு குறைந்தே இருந்தது. ஒரே சீரான அளவிலான தண்ணீரை நான் எப்பொழுதும் உட்கொண்டதில்லை.
தண்ணீர் பற்றிய தகவலை நான் தேட ஆரம்பித்தது ஒரு கட்டாய சூழ்நிலையில் தான்.
ஏதோ சில பல காரணங்களால் என் உடல் எடை அதிகரித்து கொண்டிருந்தது. தண்ணீர் அதிகம் குடிக்காததினால் தான் இந்த பிரச்சனை என வீட்டில் உள்ளோர் கூறவே, அதுவரை தண்ணீர் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் தாகமெடுத்தால் மட்டுமே நீர் அருந்தி வந்த நான் அதனை அதிகமாக குடிக்க ஆரம்பித்தேன்.
கொஞ்ச நாட்களிலேயே எனக்கு காலில் நீர் கோர்க்க ஆரம்பித்தது. தலைவலி பாடாய் படுத்தியது. உடலின் எடை இன்னும் அதிகாரித்ததோடு மூச்சு விடவே சிரமமாயிற்று. வீட்டில் உள்ளவர்களோ முருங்கை இலையும், பார்லி தண்ணீரும் கொடுத்து குடிக்க வைத்தனர். பிரச்சனை மேலும் அதிகமாயிற்று.
என் மனதில் தானாகவே நான் அருந்தும் நீரில் அளவின் மேல் சந்தேகம் வர, அவற்றை அதிகமாக பருகுவதை நிறுத்தினேன். கொஞ்ச நாட்களிலேயே கால்களில் நீர் கோர்ப்பது நின்றது. தலைவலியும் படிப்படியாக குறைந்தது.
உடலின் எடை கூடி கொண்டே சென்றாலும், இத்தகைய பிரச்சனையிலிருந்து நான் ஒருவழியாக மீண்டு வந்தேன். பின்னர் தான் இந்த தண்ணீர் பற்றிய தகவலை இணைய தளத்தில் தேட ஆரம்பித்தேன். தண்ணீர் பற்றிய என் தேடல் எனக்கு பலவிதமான ஆச்சர்ய தகவலை அளித்தது.
தண்ணீரின் பயன்கள் பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்து வைத்திருக்கலாம், ஆனால் அவற்றினால் வரும் பிரச்சனைகள் பற்றி நம்மில் பெரும்பான்மையோருக்கு தெரிவதில்லை. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலில் நீண்ட நாட்கள் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்துப் பார்க்கலாம்.
1. உடலின் மொத்த இரத்தத்தின் அளவு அதிகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவு இரத்தம் மட்டுமே சுழற்சி முறையில் சுழலும் சூழ்நிலையின் இத்தகைய இரத்த அதிகரிப்பு இதயம் மற்றும் இரத்த வால்வுகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
2. நாம் குடிக்கும் தண்ணீரை சுத்திகரிக்கும் வேலையை செய்வது கிட்னியே. அதிகளவு உட்க்கொள்ளப்படும் தண்ணீரால் கிட்னி ஓய்வில்லாமல் சுத்திகரிக்கும் பணிக்கு தள்ளப்படுகிறது. இதனால் அது தளர்ச்சி அடைவதுடன் அதன் மெல்லிய அறிப்பான்கள் (glomeruli) அழுத்தம் காரணமாக சேதமடைகின்றன.
இவ்வாறு தேவையில்லாமல் அதிகளவு அழுத்தங்களால் இதய வால்வுகள் மற்றும் கிட்னிகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு நாம் அறியாமலே நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
இனி மிக குறைந்த கால அளவுக்குள் அதிகளவு தண்ணீரை கட்டாயப்படுத்தி திணித்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பார்க்கலாம்:
1. அதிக அளவு தண்ணீரின் அழுத்தத்தால் கிட்னி தேவைக்கதிகமான தண்ணீரை வெளியேற்றுவதில் திணறுகிறது.
2. அதிகளவு தண்ணீரால் உடலின் இரத்த ஓட்டம் நீர்த்து போகிறது. இதனால் இரத்தத்திலும் உடலின் செல்களிலும் உள்ள “எலக்ட்ரோலைட்” களின் சமநிலை பாதிக்கப்பட்டு, அதனை சரி செய்யும் முயற்சியில் இரத்தத்தில் உள்ள தண்ணீர் உடலின் செல்களுக்கு தாவுகிறது. இதனால் செல்கள் வீங்க துவங்குகின்றன.
3. இத்தகைய “செல்” வீக்கம் மூளை செல்களில் அதிகரித்தால், கடினமான ஓடுகளுக்குள் இருக்கும் மூளை வீங்கி, அழுத்தப்படுகிறது.
4. இதில் குறுகிய காலத்தில் நாம் எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோம் என்பதை பொறுத்து பாதிப்புகள் வேறுபடுகிறது. தலைவலியில் ஆரம்பித்து, மூச்சு திணறல் வரை கொண்டு போய் விடுகிறது.
ஏதோ ஒரு உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வயிற்று பகுதி ஸ்கேன் செய்ய வேண்டியது வந்தால் வயிறு நிறைய தண்ணீர் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். நம்மில் பெரும்பான்மையோர் செய்யும் தவறு என்னவென்றால் ஸ்கேன் செய்யும் சற்று முன்னர் அதிக அளவு தண்ணீரை கட்டாயபடுத்தி வயிற்றுக்குள் திணிப்பது தான். அவ்வாறு செய்யாமல், ஸ்கேன் செய்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பே கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை உட்கொண்டு ஸ்கேன் செய்வதற்கு தயாராக வேண்டும். இதனால் பெருமளவு வயிற்றில் அழுத்தம் ஏற்படாமலும் உடனடி சிறுநீர் கழித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் இல்லாமலும் இருக்கும்.
சரி, தண்ணீரால் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதென்றால், நமக்கு தேவையான அளவு தண்ணீர் எவ்வளவு என நாம் எப்படி தெரிந்து கொள்வது?
அது நம் ஒவ்வொருவருடைய கீழ்க்கண்ட தனிப்பட்ட சூழ்நிலைகளை பொறுத்தது.
1. உணவு பழக்கவழக்கம்
2. உடற்பயிற்சி முறைகள்
3. சுற்றுப்புற சூழல்
நார்ச்சத்து அதிகமுள்ள இயற்கை உணவான காய்கறிகள், பழங்கள், வேக வைத்த பட்டாணி வகைகள் ஆகியவற்றை உட்கொண்டால் அதிக அளவு தண்ணீர் உடலுக்கு தேவைப்படுவதில்லை. அதேநேரம், காரசாரமான மசால் நிறைந்த உணவு வகைகளை உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டியுள்ளது.
உடல் பயிற்சியினாலோ இல்லை வேறு காரணங்களினாலோ வியர்வை அதிகளவு வெளியேறும் போது அதிகளவு தண்ணீர் தேவைபடுகிறது.
குளிர் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அதிக தண்ணீர் தேவையில்லை, மாறாக வெப்ப மண்டல மக்களின் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கிறது.
மொத்தத்தில், நமது தாகத்தை பொறுத்து நீர் அருந்துவதே சிறந்தது. உடலின் தேவையை அறியாமல் தண்ணீரை கட்டாயப்படுத்தி உட்கொள்ளும் போது தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஆனாலும் தாகமே இல்லை என்ற நிலை கூட ஆபத்தானது தான். அதனால், இத்தகைய “தண்ணீர் திணித்தலை” நம் குழந்தைகளுக்கு அளிக்காமல், அதைப்பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டியது அவசியமான ஒன்று.
“செயற்கை உணவினை தவிர்ப்போம்
இயற்கை உணவினை ஏற்போம்”