உறவு வலிகள்
விபத்தில் காயமானேன் 
விரைவிலே குணமடைந்தேன் 
உறவுவழி வந்த சொற்களால்  
மனமுழுக்க காயம் கொண்டேன்  ................
ஆறாத காயமது 
அழியாத தழும்புமது 
மறக்காத சம்பவமாய் 
மடியும்வரை நினைவிலிருக்கும் ..........
மறக்க நினைத்து முடியவில்லை 
மனம் நிறைய வலியின் தொல்லை  
தூக்கமதையும் கொன்றுவிட்டு 
தூரம்போனது எனது சொந்தம் ...........
கண்ணுக்குள் காத்து வளர்த்து 
கைப்பிடிக்குள் அன்பாய் வளர்த்து 
நெஞ்சுக்குள் இருந்த சொந்தம் 
நிலைகுலைய வைத்ததென்னை.........
நேற்றுவரை நெருங்கியவர்கள் 
இன்றுஏனோ தூரம்போக 
மனம் முழுக்க வலியுனர்ந்தேன் 
மனம் நொந்து தினமழுதேன் ...........
காசுபணம் போனபோதும் 
கவலைகொள்ளாத எந்தன் மனம் 
நேசம்செய்த உறவுபோக 
நெஞ்சமது வலியுணர ...........
ஆறுதலுக்கு இருந்த சொந்தம் 
அனாதையாய் விட்டுபோக 
தேடுவதற்கும் ஆளில்லை 
என்னை தேற்றுவதற்கும்  ஆளில்லை .........
பாசமென்னும் பலத்தை இன்று 
பலவீனமாய் உபயோகிக்க 
பணம்குறைந்து போன நான் 
பலவீனமாய் ஆகிவிட்டேன் ............
உற்றநேரத்தில் உதவும் சொந்தம் 
தக்க நேரத்தில் கழட்டிக்கொள்ள 
உண்மைதனை இன்றுணர்ந்தேன் 
உறவுகளிடத்தில் பாடம் கண்டேன் .........
ஆழ புரிந்த சொந்தமின்று 
ஆழ எனக்கு குழிபறிக்க 
கைதூக்க ஆளில்லை 
காலிழுத்து விடுபவர்கள் மத்தியில் ............
பணம் மட்டுமே உலகமென்று 
பழகிப்போன மனித மனங்களில் 
எதிர்பார்ப்பே நிறைந்திருக்கும் 
இல்லாவிட்டால் ஒதுங்கிவிடுவார் ............
உரிமையாய் பழகிய உறவுகளின்று 
வெறுமையாய் போக மனம் வெந்தேன்
இதுவும்கூட இன்னொரு பாடம் 
வாழ்க்கையெனும் பள்ளிகூடத்தில் .............
 
                    

 
                             
                            