சுவாசமே காதலாக...! தொகுப்பு - 9
அது ஒரு நெடிய இரவு ஆனால் கணத்தில் கழிந்துதான் போய் விட்டது. நினைவுகளில் தான் அதன் நீட்சியும் நிகழ்வுகளும் வானில் மிதக்கும் மேகமாய், நீரில் நீந்தும் மீன்களாய் என்னுள் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கடத்தலிலும் மீண்டும் மீண்டும் இழுத்து பிடித்து நிறுத்தி மீண்டும் மீண்டும் காண்கிறேன் உன்னோடு கழிந்த அந்த கனவு இராத்திரியை...!!!!
நீயும் நானும் தொட்டு விடும் தூரத்தில் இருந்தும் தொடுதலை புறம்தள்ளி மெல்லிய வெளிச்சத்தில் வார்த்தைளாலேயே தழுவிக் கொண்ட அற்புத கணம்..! உனக்கு பிடித்த இசை அறை எங்கும் பரவியிருக்க எனக்குப் பிடித்த வானத்தை ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டு உன்னோடு பேசிக் கொண்டிருந்த ஒரு நீண்ட இரவு அது..!
எதற்கோ சிரித்தாய், எதற்கோ அழுதாய், எதற்கோ ஆச்சர்யப்பட்டாய், எதற்கோ கோபப்பட்டாய், எதற்கோ அமைதியானாய் ரசிப்பின் உச்சத்தில் லயித்துக் கிடந்த என் அற்புத உணர்வுகளின் சங்கமத்தில் எனக்குள் கிளர்ந்த உணர்வுகளை நான் காதலென்றேன் இல்லை இல்லை கடவுளென்றாய் நீ!
நீண்டுக் கொண்டிருந்த அந்த இரவினை அலட்சியமாய் ஆக்கிரமித்த உன் அழகினை வார்த்தைகளுக்குள் கொண்டுவர முடியாமல் தடுமாற்றமாய் ஏதேதோ உளறி கடைசியில் என் பெயரே நான் மறந்தது நினைவிருக்கிறதா?
விடியாமல் இருந்தாலென்ன...? என்றாய். நீ விலகாமல் இருப்பாயா...? என்றேன் நான்...!உன் கண்களால் என் கண்கள் ஒத்தி சத்தியமாய் விலகேன் என்ற பின் புன்னகையாய் படர்ந்த என் காதல் வார்த்தைகளாய் கருக் கொண்டு ஒரு கவிதையாய் இதோ.. இதோ... ஜனித்தே விடுவேன் என்று என்னை மிரட்டியதை உணர்ந்தேதான் வெள்ளை பேப்பரையும் பேனாவையும் ஒரு பிரசவம் பார்க்கும் தாதி போல என்னிடம் வைத்தாயா?
கிறுக்கலாய் என் காதல் போதையை பேதை உன் முன்பு ஒரு காகிதத்தில் கவிதையாய் அரங்கேற்றுக் கொண்டிருதேன்.நீ ரசிப்பாய் காகிதத்தை கவிதைக்காய் பார்த்தாய். நான் காதலாய் உன் கலைந்த கேசத்தை பார்த்தேன். இரவு எப்போதும் அழகானது ஆழமானது அதை இன்னும் அலங்கரித்து எனை மூர்ச்சையாக்காமல் விடமாட்டேன் என்ற கங்கணம் கட்டிக் கொண்டு உன் அருகாமை என்னிடம் போட்டியிட்டு கொண்டிருந்தது.
வாழ்க்கையில் எல்லாமே அழகுதான். ஆமாம் அத்துமீறல்கள் இல்லாமல் சூழலுடன் பொருந்தியிருத்தல் அழகுதானே. அவசரங்கள் கொண்ட மனிதர்கள் வேகத்தில் மோகத்தில் தொலைத்த அழுக்குகளைப் போட்டு நிரப்பி வைக்க இன்னொரு பூமி வேண்டுமே பெண்ணே....! காமத்தை துடைத்து விட்டு காதலோடு கழிந்து கொண்டிருந்ததுதானே அந்த இரவின் புனிதம்...!
சப்தமில்லா அந்த இரவில் பூமி சுழற்சியின் சூட்சுமத்தில் ஜனித்த உயிர்கள் எல்லாம் உறக்கத்தில் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்த போது உன்னோடான இருப்பில் வாழ்க்கையை அளந்து கொண்டிருந்தேன் நான். காமமென்ற பூட்டினை போட்டு பூட்டி காதலை சிறை வைத்து விட்டு நிம்மதியை தேடும் மானுடர்களிடமிருந்து எப்படி பூக்கும் மனிதம்? மோகத்திற்காக காதலை ஒரு புழுவைப் போன்று தூண்டிலில் சொருகி காமமென்னும் மீனை தேடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு உயிரோடு கிடைக்கும் காமத்தையும் காப்பாற்றத் தெரியாது, காதலையும் சீராட்டத் தெரியாது...!
எதார்த்தமாய் சப்தமின்றி நீ வார்த்தைகளை இறைத்து கொண்டிருந்தாய்.. நான் தானியம் பொறுக்கும் குருவியாய் செவிகளுக்குள் உன் வார்த்தைகளை வாங்கி மூளையில் சேமித்துக் கொண்டிருந்தேன். உன்னை பிடிப்பதற்கு என்ன காரணமாயிருக்கும் என்று யோசித்திருக்கிறேன் பல முறை ஆனால் அந்த கேள்வியின் முடிச்சவிழ்ந்த அந்த இராத்திரியில் நான் ஸ்தம்பித்துதான் போனேன்...!
புறத்தில் அழகாயிருக்கும் ஒரு அபத்தத்தை உடன் வைத்திருப்பது ஆபத்தென்று அறியாதவனில்லை நான் ஆனாலும் பெரும்பாலும் மனித மூளைகள் கூட்டிக் கழித்து நேசிப்பது புற அழகினையும் அந்த அழகின் மூலம் அடைய நினைக்கும் காமத்தினையும்...
ஆனால்..
புறம் ஒரு காரணமாய் இருக்கலாம் ஆனால் அகம் தெளிவான ஒரு துணையிடம் இருந்து விட்டால் ஒரு ஆணிடமிருந்து பெண்ணும், பெண்ணிடமிருந்து ஆணும் அறிய வேண்டியவை ஏராளம். மூளையை சிறையிலிட்டு ஓராயிரம் கற்பிதங்கள் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு எல்லாமே அபத்தம்... ஆனால் உடல் தாண்டிய, உருவம் தாண்டிய சூட்சும உணர்வுகளை தேடிப் பிடித்து தன்னுள் நிறைத்துக் கொள்ளும் சூட்சுமங்கள் அறிந்தவர்கள் மிகக் குறைவு...
நான் யோசித்துக் கொண்டே இருந்தேன்....எதார்த்தமாய் நீ கேள்வி கேட்டாய்? உன் காதல் கவிதைகளில் பெரும்பாலும் இருக்கும் பெண் யாரென்று...? கேள்விக்கான பதிலை எடுத்து வர ஆழ் மனதிற்குள் சீறிப் பாய்ந்தேன்..! அந்த கணத்தில் என்னை நான் மறந்து, புறம் மறந்து பதிலைக் கைக் கொண்டு சலனமில்லா பதிலாய் நானே மாறிப் போனேன்....!
' எமது கவிதைகளின் கரு காதலாய் இருக்கும் பட்சத்தில் அதற்கு எப்போது ஒரு பெண் அவசியம் இல்லை. கவிதை சமைக்க காதெலென்ற ஒற்றை உணர்வு ஊற்றாய் எம்முள் பிரவாகமெடுக்க பாலினத்தின் தேவைகள் எல்லாம் அற்றுப் போய் எம்முள் இருக்கும் எப்போதும் விலகாப் பெண்ணை உற்று நோக்கியே யாம் கவிதைகள் படைக்கிறோம். பெண்ணின் இயல்பில்லா ஆண் மகனுமில்லை....ஆணின் இயல்பில்லா பெண்மகளும் இல்லை.
ஏதோ ஒரு காலத்தில் எமது அறிவுகள் குளத்துக்குள் நீச்சலடிக்கும் மீன் குஞ்சாய் பரிணாமம் கொண்டிருந்த சமயத்து எமக்கு பெண்ணென்ற பொருளே மையமாய் இருந்திருக்கலாம். பேரறிவுக் கடலுக்குள் யாம் வந்து விழுந்த கணத்தில் பாலினம் பார்த்து கவி செய்யும் வழக்கம் அவ்வப்போது பழக்கத்தின் காரணமாய் வந்து போனாலும் மிகையாய் யாம் செய்யும் கவிகளுக்கு யாமே கரு...! எம்மில் இருக்கும் பெண்மையே உரு.....!
விவரங்கள் அற்ற மானுடர்களுக்கு எப்போதும் பெண்ணொன்று வேண்டும் மையமாய்; அந்த கருவினை சுவராகக் கொண்டு சித்திரம் வரைதல் தவறென்றும் பகிரல் ஆகாது. அது ஒரு நிலை. உயரம் தாண்டும் பந்தயத்தில் எட்டவொண்ணா உயரங்களை தாண்டியவனுக்கு அது ஒரு கலை. யாம் கடந்து விட்டோம். எம்மில் நிறைந்து விட்டோம்...!
கவிசெய்ய பெண்ணென்று ஒன்று இனி எமக்குத் தனித்து தேவையில்லை....எம்முள்ளும், எமைச் சுற்றியும் நிறைந்து கிடக்கும் பிராணனின் போக்கில் எமது மூளைகளிலிருந்து ஜனிக்கிறது காதல்...இதற்கு எதற்கு புறத்தில் எனக்கு ஒரு தேடல்?
யாம் எம்மையும் எமக்குள் இருக்கும் காதலையும் பெண்ணாய் சித்தரித்து கற்பனை என்னும் எதார்த்தத்தில் தான் செய்கிறோம் கவிதைகள்...."
மொழியாய் வடிவம் கொண்ட விடையை வாங்கிச் சிரித்துக் கொண்ட காதல் பெண்ணே உன்னையும் என்னுள் இருந்துதானே படைத்தேன்...? இந்த நீண்ட இரவை கழித்தேன் என்று நான் கூறி முடிக்கையில் சூரியன் வருவதற்கு சில நாழிகைகளே இருந்தது....
என்னோடே இருப்பேன்; எனை விட்டு விலகேன் என்ற வார்த்தைகள் பகின்ற நீ சூட்சுமமாய் என்னுள் போய் ஒளிந்து கொண்டாய்.....! நானே நீயானாய், நீயே நானானேன்...காதலும், நானும், சூழலும் ஒன்றாய்ப் போனோம்....!
இப்போதெல்லாம் எப்போது அழைத்தாலும் சொடுக்கும் நேரத்தில் நீ வருவாய்... காதலாய் எனை நிறைப்பாய்...! என் கவிதைகளுக்குள் நித்தியமாய், பெண்ணாய் உன்னை கற்பித்துக் கொள்வதில் எம்மைத் தாண்டிய வாசிப்பாளர்களுக்கு எளிதாய் புரிய வைக்கும் யுத்தியை மறைத்து வைத்திருக்கிறேனன்றி வேறு என்ன தான் தேவையிருக்கிறது எனக்கு...?
சுவாசமே எமக்குள் காதலாகிறது....! காதலே எம்மை சுவாசிக்கிறது...!
(இன்னும் சுவாசிப்போம்....)