நீளும் இரவுகள்…....

விழித்திருக்கும் இரவுகள்
நீளும் தருணங்களில்
எண்ணிக் கழித்திருக்க
கம்பிகள் இல்லாத
சிறைக் கதவுகளினூடே,
இலவம் பஞ்சு உதிர்ந்து போன
மரங்களின்
சிறுசிறு கிளைகள் ஒடித்துத் தைத்த
மெத்தையின் மேல்
வியர்வை விட்டொழிக்க வரும்
கணவனும்
நேரத்தே வருவதில்லை
அவன் தட்டுகையில்
பெரும் குரலெடுக்கும் கதவுகள்,
அதற்கு முன்னும்
அவ்வப்போது
பிரம்மையாய் குரலெடுத்துத்
திடுக்கிட வைக்கும்......
வந்தபின்
என்னையும் தின்ற களைப்பில்
அவனும்
பின், கதவுகளும் தூங்கிப் போனபின்
திடுக்கிடாமலே விழித்திருப்பேன்
எதற்கென்று தெரியாமலே…!

எழுதியவர் : ஆண்டன் பெனி (26-Jun-13, 10:15 am)
பார்வை : 237

மேலே