உத்தரகாண்டில் ஊழித்தாண்டவம்
உத்தரகாண்டில்
நாம் காணும்
பேரிடரழிவு
காட்டித்தரும்
பாடங்கள் பல.
எவ்வளவு பேர்
எங்கிருந்து வருகிறார்
எங்கே போகிறார்
எங்கே தங்குவார்
என்ன செய்கிறார்
ஒரு விவரமும் இல்லாமல்
ஒரு வசதியும் செய்யாமல்
கல்லா கட்டுவதிலே
குறியாய் இருக்கும்
அரசு இயந்திரம்.
ஒழுங்கில்லா
உள்ளூர் நிர்வாகம்.
பேரிடரில் சிக்கி
பெரும்பாடு படுவோர்
பசிதாகம் போக்க
பெருங்கொள்ளையடிக்கும்
பேய்கள்.
ஊணுறக்கமின்றி
உயிருக்குப் போராடுவோரை
ஈவிரக்கமின்றி
கற்பழிக்க முயலும்
கொடும்பாவிகள்.
விவரமின்றி
வீண் பேச்சும்
வெட்டிச் சவாலும்
விடும் அரசியல்வாதிகள்.
நடப்பதையெல்லாம்
வேடிக்கை பார்த்தும்
உதவிக்கரம் நீட்டாமல்
வெற்று வேதாந்தம்
பேசித்திரியும்
மனம் வரண்ட மனிதர்கள்.
இயற்கை கோரதாண்டவமாடி
கொத்துக்கொத்தாய்
மனிதர்களைக் கொன்றழிக்கும்
இந்நேரம்
சாவு எண்ணிக்கை குறித்து
கோடிக்கணக்கில் சூதாட்டம்
நடைபெறுவதாய் நம்பலாம்.
நடப்பைக் காணச்சகியாமல்
சேற்றில் புதையுண்டனவோ
சாமிகளும்?
ஏனிப்படி நடக்கிறது
இந்நாட்டில்?
எங்குமிருப்பதை
ஏன் காணச்
சென்றீர் அங்கே?
எப்பசி தீர்க்க
எப்பிணி போக்கப்
போனீர்கள் அங்கே?
உல்லாசச் சுற்றுலாவும்
பக்திப் பிரயாணமும்
பல்லாயிரக் கணக்கில்
ஒரே நேரத்தில் நிகழ்த்த
உரிய இடங்களில்லையே
அவ்வூர்கள்?
நம்
ஒட்டுமொத்த மனசாட்சியும்
உலுக்கப் படவில்லையே
இன்னும்?
நேரங்காலம் பாராது
கடமையாற்றி
கூற்றுவன் வாய்விழுந்த
பல்லாயிரவரை
பத்திரமாய் மீட்கும்
படைவீரர்கள் மட்டுமே
சாகா மனிதத்தின்
சான்றாய்த் தெரிகின்றார்.
அவர்கள்
ஒவ்வொருவர் காலிலும்
ஓராயிரம் முறை
விழுந்தெழுந்தாலும்
அவர்தம் அருங்கரங்களில்
ஆயிரமாயிரம் முத்தமிட்டாலும்
தீருமோ
நம் பெருங்கடன்?
கற்பதற்குப் பல பாடம்
காட்டித் தந்திருக்கிறது
இந்நிகழ்வு.
கற்றுத் தேரவும்
இயற்கையைப் பேணி
நல்மனிதராய் வாழவும்
இனியும் நேரமிருக்கிறது.
மனமிருக்கிறதா
சக மனிதர்களே?