எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் உள்ள வித்தியாசம்
கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.
பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.
கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர். எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.
இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை. ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.
அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார். இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.
பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.
ஆதாரம் : கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்
நன்றி: கண்ணதாசன் வலைப்பக்கம்