தேவதாசி ஒழிப்புச் சட்டம் - பகுதி -1
கோயில்களில் பெண்களை பொட்டுகட்டுவதை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டுமாய் திருமதி. முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பபட்டிருக்கும் சட்டத்தை சர்கார் நமக்கு அனுப்பி அதன்மீது நமது அபிப்பிராயம் கேட்டுருக்கிறார்கள்.
இதற்காக சர்கார் பொதுமக்களிடம் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப்பிராயம், ஏனெனில், கோயில்களில் கடவுள் பேரால் பெண்களுக்கு பொட்டுகட்டி அவர்களையே பொது மகளீர்களாக்கி நாட்டில் விவசாரித்த்னத்திற்கு செல்வாக்கும் மதிப்பும், சமய சமூக முக்கிய ஸ்தலங்களில் தாராளமாய் இடமும் அளித்து வரும் ஒரு கெட்ட வழக்கம் நமது நாட்டில் வெகுகாலமாய் இருந்து வருகிறது,
அன்றியும் நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்பிற்கே உரியது என்பதாகி, இயற்கையுடன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும்விட்டது, ஒரு நாட்டில் நாகரீகமுள்ள அரசாங்கமாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தையோ, நலத்தையோ, கோரின அரசாங்கமாவது ஒன்று இருந்தால் இந்த இழிவான கெட்டப் பழக்கம் கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் சமூகத்தின் பேராலும் தேசிய வழக்கத்தின் பேராலும், இருந்துவர ஒரு கண நேரமும் விட்டுகொண்டு வந்திருக்காதென்றே சொல்வோம்.
ஆனால் நமது இந்தியாவில் வெள்ளைக்கார ஆட்சி குடிபுகும் நிலை பெறவும், நம் நாட்டுச் சுயநலப் பார்பனர்கள் உளவாளிகளாகவும் உதவியாகவும் இருந்து வந்ததால் அப்பார்பனர்களுக்கு அனுகூலமாக வெள்ளைக்காரர்களும் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருந்ததால் அந்தப் பார்பனர்கள் சொல்கின்றபடியே நடந்து (வெள்ளைக்காரர்கள்) தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் பட்டுவிட்டார்கள், இந்த காரணங்களால் அவர்கள் பார்பனர்களுக்கு விரோதமாய் சீர்திருத்தத் துறையிலாவது, மனிதத்தன்மைத் துறையிலாவது இதுவரை ஒருவித முற்போக்கான காரியமும் செய்யாமலேயே இருக்க வேண்டியவர்களாகிவிட்டார்கள்.
ஆனால் இப்போது கொஞ்ச காலமாய் அப்பார்பனர்களின் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் கண்டுபிடித்து அவர்களது யோக்கியதைகளை அடியோடு வெளியாக்கி சீர்திருத்தங்களை உத்தேசித்து நாமும் வெள்ளைக்காரர்களை மிரட்டக்கூடிய சமயம் மிரட்டியும், ஆதரிக்கக்கூடிய சமயம் ஆதரித்தும் பார்பனர்களின் செல்வாக்கை ஒழித்து நமது சத்தியத்தையும் தீவிர ஆசையையும் காட்ட ஆரம்பித்துவிட்டதால், இப்போது ஏதோ சிறிது அளவுக்காவது சர்கார் சீர்திருத்த துறையில் நமது விருப்பத்திற்கும் இனங்கும்படியான நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலைமையின் பலனேதான் இப்போது நமது கொள்கைகள் சிலது நாட்டில் பிரச்சாரம் செய்யவும் செல்வாக்குப் பெறவும் இடம் ஏற்பட்டதும், சட்டசபையில் இது சமயம் ஒரு முடிவை பெற்றுதீர வேண்டிய அவசியம் ஏற்பட்டு பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு வர நேர்ந்ததுமாகும்.
இப்போது திருமதி டாக்டர் முத்துலட்ச்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபைக்கு அனுப்பப்பட்டு இருக்கும், ''பொட்டுக் கட்டுவதை ஒழிக்கும்'' இந்த மசோதாவானது வெகு காலமாக மக்கள் பிரதநிதி என்பவர்களால் பொதுக்கூட்டங்களிலும் பொதுமாநாடுகளிலும் கண்டித்துப் பேசப்பட்டு இருப்பதுடன் இம்மாதிரியான ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று இந்திய சட்டசபைக் கூட்டங்களிலும் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்பட்டும் வந்திருக்கின்றது, இது சம்பந்தமாக, திருமதி முத்துலட்சுமி அம்மாள் அவர்கள் ஒரு துண்டு பிரசுரம் வெளியிட்டு இருக்கிறார், அதன் சுருக்கமாவது.
*************************************************************************
இதன் தொடர்ச்சியை அடுத்த பகுதியில் பார்க்கவும்.
**************************************************************************
குடி அரசு - தலையங்கம்
நாள் - 23-03-1930
தந்தை பெரியார்.
நன்றி;-
பெரியாரின் எழுத்தும் பேச்சும்; தொகுதி -10
பக்கம் - 104,105,106,107,108

