பொய்யாதீர் மானிடரே , பொய்த்துவிடும் மன்னுயிரே !

பொய்யாதீர் மானிடரே , பொய்த்துவிடும் மன்னுயிரே !

காதலன் பொய் நினைக்க , காதல் பொய்த்தது
மணவாளன் பொய் உரைக்க , மனையறம் பொய்த்தது
கற்றவன் பொய்ப் பரப்ப , கல்வி பொய்த்தது
மருத்துவன் பொய் செய்ய , மருத்துவம் பொய்த்தது
வணிகன் பொய் விற்க , வாணிபம் பொய்த்தது
உழைப்பவன் பொய் புனைய , செல்வம் பொய்த்தது

அரசன் பொய் ஏற்க , ஆட்சி பொய்த்தது
மன்றத்தில் பொய் நுழைய , நீதி பொய்த்தது
பொய்யே எங்கும் கோலோச்ச , மெய்யே அதற்கு ஏவல்புரிய
எங்கும் பொய் , எதிலும் பொய்
இல்லையே மெய் , என்பதே மெய்
பொறுமை காத்த வானமும் , பொறுக்கவியலாது கண்மூட

பெய்யாது அழித்தது , பெய்தும் அழித்தது
மழை பிழைக்க , பருவம் பொய்த்தது
பருவம் பொய்க்க , மண் பொய்த்தது
மண் பொய்க்க , பயிர் பொய்த்தது
பயிர் பொய்க்க , உயிர் பொய்க்குமே

ஆதலால் மானிடரே ! பொய்யாதீர் !!
பொய் போற்றின் , பொய்த்துவிடும் மன்னுயிரே !

எழுதியவர் : சபா வடிவேலு (4-Jul-13, 10:19 am)
பார்வை : 60

மேலே