குடி
( தன் குடிகார கணவன் திருந்தலையே என்று
மனம் வருந்தும் மனைவியின் புலம்பல் )
பேட்டைக்கு தெக்கால
பேக்கடைக்கு பின்னால
குப்பு குப்புனு கிக்குத்தூக்க
பொத்து பொத்துனு விழுபனே !
சந்தடி சாக்குல சம்சாரம் இடுப்புல
சாவி கொத்த உருவி
சாராய செலவுக்கு
சாமி பணத்தை எடுப்பவனே !
விடிஞ்சாக்கா தெரியும்
விலா எலும்பு முறியும்
ஆம்பளையா பொறந்துப்புட்டு
பொம்பளக்கிட்ட அடிவாங்க வேணுமா ?
கூறைப்பட்டு சேலைவித்து கூழாக்க;
கேழ்வரகு வாங்கியான்னா...
குடிச்சிப்புட்டு வந்து நிக்கிறயே – என்
கூறுகெட்ட ஆம்பளயே !
கொழந்தைங்க மொகத்தப்பாரூ
அதுங்க சோறுதின்னு ஆறுநாளூ
ஆச்சின்னு ஏழாம் நாளூ..
பித்தலை அண்டாவ எடுத்துக்குடுத்தேன்
சந்தையில வித்து வர;
வித்துவந்த காசு எங்கேன்னு கேட்டாக்கா?
ஏழுகிளாசு ஏத்திக்கிட்டேன்னு..
தல்லாடி சொல்லுறீயே
என் சோம்பேறி ஆம்பளயே !
வீட்டு வேலை செஞ்சி
வயித்துப்பொழப்பு நடத்துறேன்
நீ-வாயிக்கு ருசியா கேட்டாக்கா..
நான் என்ன வட்டிக்கா வாங்குறேன் ?
வட்டிக்கு வாங்கினாலும்
வட்டி கட்டி மாலாது;
வாங்குற பணத்துல வருஷம்பூரா
வயிறார சாப்பிடவும் முடியாது!
வட்டி குட்டி போட்டுச்சுன்னா..
வட்டிக்காரன் லத்தியோட வந்துடுவான்
சரியா வட்டி ஏன் கட்டலன்னு..
வயித்துல இருக்குர சோத்தையும்
வாந்தி எடுக்க வச்சுடுவான் !
கோட்டைக்கட்டி வாழ நெனச்சி
கோடி கனவு கண்டதெல்லாம்
மொடா குடிகாரா உன்னால
குட்டிச்சுவரா போச்சுதடா !
துளியும் திருந்தாத ஜென்மமே
நீ இருந்தென்ன லாபமடா ?
திருந்துறேன்னு சத்தியம் பண்ணு
நான் திருச்செந்தூரில் மொட்டையடிக்கேன் !
........................................................................................
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
