கண்ணம்மாவும் கஞ்சியும் ..
பள்ளிக்கூட இறுதி மணியும் அடித்தாகிவிட்டது.
பசித்த வயிறுடன் புத்தக பையை தன் நெஞ்சில் அணைத்தபடி விறுவிறு என வீடு நோக்கி நடக்கலானாள் கண்ணம்மா.
வரும்வழியில் வழமைபோல வீதியின் அருகில் உள்ள புளிய மரத்தின் கீழ் வீழ்ந்து கிடந்த ஒரு புளியம்பழத்தை எடுத்து பையுனுள் வைத்துகொண்டாள்.
வீட்டின் அருகில் வந்தவுடன் குறுக்காக வந்த அடுத்த வீட்டு சுந்தரி மாமி,
"கண்ணம்மா நான் கந்தாசாமி அண்ணன் வயலுக்கு நெல்கதிர் பொறக்க போகபோறன் அம்மாவிட்ட சொல்லுடா சீக்கிரம் வரட்டாம் என்று" என சொல்லிவிட்டு சென்றாள்.
"சரி மாமி" என சொல்லிவிட்டு வீட்டுக்குள் வந்த கண்ணம்மா, முகத்தை அலம்பிவிட்டு கஞ்சிப் பானையை திறந்து பார்த்தாள் வெறுமையாக இருந்தது உள்ளே ஒன்றும் இல்லை. கோபத்துடன் "அம்மா.. அம்மா" என கத்தியவாறு உள்ளே சென்றாள்.
அங்கே அவளின் அம்மா படுத்த படுக்கையாக கிடந்தாள்.
"ஐயோ..! அம்மா.. என்னாச்சு உனக்கு..?!" என தவிதவித்த குரலில்,அருகில் சென்று அமர்ந்து வினாவினாள்.
"ஒண்ணுமில்லடா புள்ள.. கொஞ்சம் தலைவலிடா.. புள்ளே வயலுக்கும் போகலடா..கஞ்சும் காச்சல குறுணல் வேறு முடிஞ்சு புள்ள.. அத்தைகிட்ட போய் எதாச்சும் திண்ணுடா" என்றாள்.
"இல்லாமா பசியில்ல நீ ஏதாச்சும் மருந்து போட்டாயா..?" என கேட்டாள்.
"அது உண்ணும் வேணாம்டா படுத்து எழும்பினா சரியாபோகும், நீ போய் ஏதாவது திண்ணுட்டு வா புள்ள.. கைல காசுவேற இல்ல கடைக்கு போக" என முணுமுணுத்தாள் அம்மா.
"வேணாம் நீ தூங்கு நான் உனக்கு சுடுதண்ணி வைக்கேன்" என கூறிவிட்டு கண்ணம்மா புத்தக பையுனுள் பொறுக்கி போட்ட புளியம்பழத்தை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு, சுடுதண்ணி வைக்க தயாரானாள்.
"துளசி வாரய போவோம்" என சுந்தரி மாமி வெளியே அம்மாவை கூப்பிடும் சத்தம் கேட்டதும்,
வெளியே வந்து "அம்மாவுக்கு சரியான தலைவலி மாமி.. படுக்குறா..!" என சொன்னாள் கண்ணம்மா.
"சரி புள்ள அப்ப நான் போறான்" என சொல்லிக்கொண்டு சென்றாள் சுந்தரி.
சாப்பிட்ட புளியம்பழத்தை அப்படியே போட்டுவிட்டு, கூரையின் மேலே கிடந்த பையை எடுத்துக்கொண்டு சுந்தரி பின்னால் நடந்தாள் கண்ணம்மா.
திரும்பி பார்த்த சுந்தரி "எங்க புள்ள நீ வாராய்.?" எனக்கேட்க.
"இல்ல மாமி அம்மாவால முடியல, கஞ்சி வேற வைக்கல.. அதான் நான் வந்து கதிர பொறுக்கி கஞ்சி வைக்கபோறன்" என்றாள்.
"வேணாம் கண்ணம்மா, துளசிக்கு தெரிந்தால் கவலைப்படும் உன்ன படிக்க வைக்க எம்புட்டு கஷ்டப்படுது" என சொன்னாள் துளசி.
"இல்ல மாமி.. அது சாப்பிடாம படுக்குது, அத்தைகிட்ட போய் ஏதாச்சும் வாங்க எனக்கு புடிக்கல அவ ஒரே ஒருமாதிரியா பேசுறா.. அதான் நான் வாறன் அம்மாகிட்ட சொல்லவேணாம்"என்றாள் கண்ணம்மா.
"சரி சரி வா" என சிரித்துக்கொண்டே கண்ணம்மாவை கூட்டிச்சென்றாள் சுந்தரி.
பொறுக்கிய கதிரை இருவரும் நெல்லாக மாற்றி குத்தி இடித்துகொண்டு வீடுவந்து சேர மாலையாகிவிட்டது.
வீட்டுக்கு வந்த சுந்தரி... அம்மா இன்னும் எழுந்திருக்கவில்லை என்பதை தெரிந்துகொண்டு தான் கொண்டுவந்த அரிசியில் கஞ்சி வைத்து உடனே அம்மாவை எழுப்பி..
"அம்மா எழும்பு அம்மோவ்... இந்தா கஞ்சி குடி" என கொடுத்தாள்.
எழும்பிய துளசி "ஏதுபுள்ள கஞ்சி..?" எனக் கேட்டாள்.
"அத்தைகிட்ட அரிசி வாங்கி வந்து நான்தான் வச்சேன்" என்றாள் கண்ணம்மா.
அம்மா குடிப்பதை அருகில் இருந்து பார்த்துவிட்டு, அவ குச்சி முடிச்சதும் மீதி கஞ்சிய எடுத்து வச்சுவிட்டு உடம்பு பூராவும் கதிருபட்ட சுனை கடிக்கிறது என உணர்ந்த கண்ணம்மா குளிக்க வெளியே கிணற்றடிக்கு போனாள்.
"ஐயோ சரியா பசிக்குதே" என மனதுக்குள் சொல்லியவாறே கடகட என குளித்துவிட்டு மீதி காஞ்சிய குடிக்க உள்ளே நுழைந்தாள் கண்ணம்மா.
எதிரே பாய்ந்து வந்த பூனை கண்ணம்மாவிற்கும் கஞ்சிக்கும் இடையிலான தூரத்தை மீண்டும் தள்ளி போட்டுவிட்டு சென்றது. உள்ளே சென்ற கண்ணம்மா கஞ்சிப்பானை சிதறிக்கிடப்பதை பார்த்துவிட்டு, சிரித்தவாறே கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு அவசரத்தில் எங்கேயோ வைத்து சென்றுவிட்ட மீதி புளியம்பழத்தை தேடத் தொடங்கினாள்.
-முற்றும்-
யாவும் கற்பனை,
நா.நிரோஷ்.