மழலையின் முத்தம்

மூன்று வயதுப் பெண் குழந்தை
முத்தம் தருவதற்கு-என்னிடம்
லஞ்சம் கேட்கின்றாள்
பொம்மைகள் வாங்கித்தா-என
உத்தரவு போடுகிறாள் !

அதுசரி
அரசாளும் பெண்ணுக்கு
அடிமைத் தமிழ்மகன்கள்
வாழ்கின்ற தேசத்தில்-என்
சிற்றரசி கட்டளையை,
எச்சில் தேன்கலந்து
தமிழ் பேசும் தேவதையின்
உத்தரவை மறுப்பேனா ?

நான்
அலைந்து வாங்கிவந்த
பொம்மைக் கொடுத்தவுடன்-எனைக்
கட்டிக் கொண்ட மகள்
சற்றும் பொறுக்கவில்லை
முத்தம் கொடுத்துவிட்டு
இலவச இணைப்பாக
விலையில்லா வலியாக
கன்னம் கடித்துவிட்டாள்-மெல்லப்
பற்கள் பதியவிட்டு
சிரிப்பை அவிழ்த்துவிட்டு
ஓடிச் சென்றுவிட்டாள்!

இந்தச்
சின்னப்பூ உதிரும்
சப்த சிரிப்பொலியில்-அட
என்ன கீர்த்தனைகள்
எதற்கு சிம்பொனிகள்
எனக்கிவை
எல்லாம் அபஸ்வரங்கள்!

எழுதியவர் : ஹரிராஜா மாணிக்கவேல் (13-Jul-13, 7:32 pm)
பார்வை : 133

மேலே