ஆழிசூழ் உலகு...!

துரோகச் சாம்பல்கள்
குவிந்து கிடக்கும்
மயானத்திலிருந்து
கேட்கும் அவலக் குரல்கள்
அநீதிகளின் வெற்றியாயிருக்கலாம்...!

நச்சினை விதைத்து
ப்ரியங்களை அறுவடை செய்யும்
நாடகங்களில்
ராஜலங்காரம் செய்யப்படும்
ஓநாய்கள் சிங்கங்களைப் போல
கர்ஜித்து இடும் ஊளைகளுக்கு
நடுவே எரியும்
பிணத்தை தாலாட்ட ஒருவருமில்லை..!

பால்குடிக்கும்
முலைகளை அறுக்கும்
குரோதப் பிசாசுகள்
சொல்லிக் கொண்டிருக்கும்
ஞானக்கதைகளை கேட்டபடியே
சிலுவையிலறையப்படும்
தேவனைக் கடவுள் என்றும்
சொல்லக் கூடும், ஒருவேளை
ஞாபகமாய் அவர் மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்தால்...!

முள் கிரீடங்கள்
சூட்டிக் கொண்டு
வலம் வரும் சாத்தான்களுக்கு
நடத்தப்படும் வழிபாடுகளில்
சிரச்சேதம் செய்யப்படும்
கடவுளர்களின் கடைசி ஆசைகள்
கண்ணீராய் வழிந்தோடி நிறைந்த
இடங்களெல்லாம் கரித்து
நிறைந்து கிடக்கிறது..
ஆழிசூழ் இவ்வுலகு..!

எழுதியவர் : Dheva.S (15-Jul-13, 10:19 am)
பார்வை : 90

மேலே