காதல் சொதப்பல்...
எல்லா மரங்களுக்கும் நான் சிநேகமானேன்!
காற்று கவிதைகளை பசியாறி! வேர்களுக்கு
சொடுக்கெடுத்து! நிழல் மஞ்சத்தில் துயில்
உரித்தேன் ! அவள் வரவை நோக்கி...
விநாடிகளை விதைத்து நிமிடங்களை நாற்றங்காலில்
வளர்த்து! மணிக் கதிர்களை அறுவடை
செய்து! அடுத்த மகசூலுக்கு ஆயத்தமாகிறேன்!
பூங்காவின் புல்வெளியில் விரல்கள் விவசாயியானது!
காத்திருப்பில் காதலர்கள் நேரக் குருட்டு
நோயில் நிரந்தர நோயாளி ஆகிப்
போகிறார்கள்...!
தார்ச் சாலையில் நெக்குருகிப் போன
புன்னை மரங்களின் சிணுங்களில் சிலிர்த்து
நிமிர்ந்தேன்! தோகை இல்லா மயிலங்கே!
தொட்டுவிடும் தூரத்தில் நிறப்பிரிகை அடையா
நிர்மூலமாக்கும் நிதர்சன வானவில் அங்கே!
தேய்ந்து கொண்டிருக்கும் பூமிப் பந்தில்
தேயாத பால்நிலவு தளிர் நடையில்...
என் பின் மண்டையில் பிரளயம்!
இதயக் கூட்டுக்குள் இடிகளின் கூப்பாடு!
உச்சந்தலையில் உதறல்கள் ! விரல்களில் வழியும்
வியர்வையில் விதிர் விதிர்த்து போனேன்....
இடை வெளிகளை விற்று விட்டு
வசந்தம் ஓன்று வரிகட்டி வருகிறது;
காற்று வாங்க! அரையடியில் அகன்றுபோகும்
அந்த அழகு குவியலில் அடடா!
அசந்து போய் அமரனாகிறேன்...
ச்சே...
இன்றும் சொதப்பி விட்டேனா?
காய்ந்து கொண்டிருக்கும் சிவப்பு ரோஜாவையும்
காதல் வரிகளை அவளுக்காக சுமந்து
கொண்டிருக்கும் என் படிக்கப் படாத
கடிதத்துடன் நகருகிறேன் நாளைய
உதயத்துக்கு நம்பிக்கையுடன்...!!!!

