உயில் ..!
உதிரும் மலருக்கு
சாமரம் வீசும்
கெளரிமான்களாய் என் வாரிசுகள் ...!
வாழும்பொழுது
பர்சை
மொய்த்த விழிகள்
இன்று
என் பெருவிரலையே
அடிக்கடி மொய்க்கிறது ....!
சேற்றிலும் சந்தனத்திலும்
இன்பத்திலும் துன்பத்திலும்
உழன்று வந்த என் நிழலும்
இன்னும் மாசுபடாமல்
என்னைப்போலவே
என்னுடனே குறுகிக்கிடக்கிறது....!
கொல்லைப்புறத்தில்
வாலிபத்தில் நட்ட
தென்னை மர நிழலில்
தென்றலின் தாலட்டுதலுடன்
இளைப்பாறுகிறது இந்த முதுமை .....!
இறந்தபின்
அமுலுக்கு வரும்
உயிலுக்காக
வேசமிட்டு வழியும் வாரிசுகளிடம்
இனி இழப்பதற்க்கு
யாதுமில்லை
கை பெருவிரல் ரேகையை தவிர ...!
நாளை
கிழிபடுவோம்
என தெறிந்தும்
நம்பிக்கையோடு காட்சியளிக்கும்
நாட்காட்டிபோல்
நம்பிக்கையோடு காத்துக்கிடக்கிறது
என் விழிகள் .....!

