ஏன் தெரிந்தே அழிகின்றீர்

முன்பெல்லாம் குடித்தவர்கள்
எவர் முன்பும் வர நேர்ந்தால்
தலை குனிந்து உடல் சுருங்கி
தயக்கத்துடன் மறைவார்.

இப்போ குடித்தவர் கூத்தாட
தள்ளாடி புரண்டு விழ
தயக்கத்துடன் தாண்டிச்செல்ல
பயப்படுது ஊருஜனம்.

ஊருக்கு வெளியே தலைமறைவாய்
விற்றது போய் - இப்போ
ஊர் முழுக்க கடை திறந்து
உற்சாக விற்பனை.

அரசு விற்பதற்கு
வேறெதுவும் கிட்டலையோ
விஷம் விற்றுப் பொருளீட்டல்
எவ்விதம் முறையோ?

பல்லாயிரங் கோடி
வருமானம் வருகுதென்று
கல்மனத்தோடு
கனஜோராய் விற்கிறாரோ?

அப்பணம் கொண்டு
அடுக்கடுக்காய் இலவசமும்
விலையில்லாப் பொருளும் தர
வாங்கக் கூசலையோ
வாங்குவோர் நெஞ்சம்?

உற்சாக பானமென்று
ஊர் முழுக்கக் குடித்தழியும்
கோரம் தாங்கலையே - நாடு
போகும் வழி சரியில்லையே.

சின்னஞ்சிறுவரெலாம்
குடித்துச் சீரழியும்
வன்கொடுமை
என்றொழியும்?

குடித்து குடல்வெந்து
கூடிய சீக்கிரமே
நோயாளிக் கூட்டமொன்று
பெருகி அழியும் - பின்
மருகி என்ன பயன்?

அய்யோ எதற்காக
அனுதினமும் குடித்தழிகிறீர்
குடி குடிகெடுக்கும் என்று
படித்தபடி குடிக்கிறீர்
எவர் குடி அழியுதென்று
விவரமாய்ச் சொல்லணுமோ?

உற்றமும் சுற்றமும்
உம்மை நம்பி வந்தவரும்
பிள்ளைகளும் மற்றோரும்
கதறியழுது காலில் விழுந்தாலும்

என்ன கிடைக்குதென்று
ஏகமாய்க் குடிக்கிறீர்
உயிரோடிருக்கும்போதே
உமக்குப் பாடை கட்டுகிறீர்?

உம்மை நம்பி வீடிருக்க
நாடிருக்க - இந்நஞ்சை
தேடிக்குடித்து ஏன்
தெரிந்தே அழிகிறீர்?

வாழப்பிடிக்கலையோ
வாழ்வென்ன வேடிக்கையோ
தோழரே உம்கை பிடித்து
தொழுது கேட்கின்றேன்

விட்டுவிடும் குடியை
வாழ்க்கை வீணே முடியுமுன்பு
உம் குடிவாழும் ஊர் வாழ்த்தும்
என் வாழ்த்தும் என்றுமுமக்கு.

அரசையும் இங்கே
அவசரமாய் வேண்டுகிறேன்.
குடித்தழியும் குடிகளிடம்
கரிசனம் காட்டுங்கள்.
கூடிய சீக்கிரம் குடிவிற்பனைக்கு
மூடுவிழா நடத்திடுங்கள்.

வருமானம் கூட்டிட
வேறுவழி தேடுங்கள்.
வரிகளைக் கூட்டினாலும்
இலவசத்தை நிறுத்தினாலும்
நல்லரசு நடத்துவதாய்
நாடு சொல்லிடும்.

எழுதியவர் : இல.சுவாமிநாதன் (22-Jul-13, 6:53 pm)
சேர்த்தது : L Swaminathan
பார்வை : 59

மேலே