தப்புத்தாளங்கள்...!
எதேச்சையாக சானல்களைத் திருப்பிக் கொண்டிருந்த போது ஜெயா டிவியில் தப்புத்தாளங்கள் படம் ஓடிக் கொண்டிருந்தது. ரொம்ப நாளுக்கு முன்னால் அந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. அதுவும் ரஜினியை அழுது வடிந்து கொண்டு திரையில் பார்க்க எந்த ரஜினி ரசிகனுக்குத்தான் பிடிக்கும் சொல்லுங்கள்...? இப்போது பாதிக்கு மேல் படம் ஓடி இருந்தாலும் பரவாயில்லை என்று பாதியிலிருந்து படத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.
வாழ்க்கைக்கு என்று ஒரு ஒழுங்கு கோட்பாட்டினை வரையறுத்து அந்த மாய நெறிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களை கெட்டவர்களாய் பார்க்கும் சமூக மாண்பினை உருவாக்கியது யார் என்று தெரியவில்லை. வாழ்க்கையைத் திரைப்படங்கள் பிரதிபலித்துக் காட்டும் அதே நேரத்தில் வாழ்க்கைக்கான நீதிகளையும் அவைபுகட்ட வேண்டும் என்ற நியதியைத்தான் தமிழ் சினிமா எப்போதும் வரையறுத்து வைத்திருக்கிறது. கதாநாயகனை நல்லவனாகக் காட்டவேண்டும் என்ற காரணத்திற்காகவே வில்லன் தரப்பு நியாயங்களை இயக்குனர்கள் ஒளித்து வைத்து விடுவார்கள். தமிழ் சினிமா ரசிகனின் மனப்பாங்கு கட்டுப்பாடுகளுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டு அறிவு புகட்டிக் கொண்டிருந்த போதுதான் பாலசந்தர் சார் போன்றவர்கள்...
இயக்கவிதி என்பது ஒரே திசையில் பயணிப்பது மட்டும் அல்ல. தேவைப்பட்டால் எதிர் திசையில் பயணிப்பதும் கூட என்று தைரியமாய் சொல்லத் தொடங்கினார்கள்.
உறவுகள் என்பதை நேர்கோட்டில் சிந்தித்து ஒழுக்க நெறிகளை சமைத்து வைத்தவர்களின் புத்திகளை கொஞ்சம் அல்ல நிறையவே சீண்டிப்பார்த்தார் பாலசந்தர் சார். அதனால்தான் தன்னை அடையத் துடிப்பவனை வஞ்சம் தீர்க்க அவன் தந்தையின் கரம் பற்றினாள் அவரின் கதாநாயகி. விருப்பத்தின் பேரில் சுதந்திரமாய் இயங்குதல்தான் வாழ்க்கை என்று நம் சமூகத்திடம் சொன்னால் கலாச்சார கத்தி கொண்டு என் குரல்வளையை அறுக்கத்தான் வருவார்கள். காதல் என்ற பெயரில் செய்யும் அடக்குமுறைகளைத் தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி புதிதாய் ஒருத்தியின் துணையைத் தேடிக் கொண்டவனின் சுதந்திர சுவாசத்தைத்தான் புதுப்புது அர்த்தங்களாக்கி கொடுத்தார் பாலசந்தர் சார்.
திருமணத்துக்குப் பின் வேறு ஒரு நேசம் என்பதை ஒழுக்க நெறியல்ல என்று கற்பித்த நாடக சமூகத்தின் முகத்திரையை தைரியமாய் கிழித்தெறிந்த கதையை திரையில் பார்த்துக் கைதட்டிய எத்தனை பேருக்கு நிஜத்தில் அதை ஏற்றுக் கொள்ள இயலும்? நேர்கோட்டில் பயணிக்கும் உறவுகளின் உணர்வுகள் ஏற்ற இறக்கமாகவோ அல்லது எதிர் திசையிலோ பயணிக்கும் போது அதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. வாழ்க்கை அர்த்தங்கள் கூடியதாய் இருக்கவேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பாய் இருக்கிறது... ஆனால் அது எந்த வித அர்த்தமும் அற்றதாகவே நிஜத்தில் இருக்கிறது.
திருடிப் பிழைக்கும் ஒரு ரெளடியும், பல ஆண்களோடு படுத்து எழுந்திருக்கும் விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணும் இந்த சமூகத்தின் நேர்கோட்டுப் பார்வைக்கு முரணானவர்களாகத் தெரிந்தாலும்...கரடுமுரடான சிக்கலான ஒரு அப்ஸ்ட்ராக்ட் ஓவியத்தில் படர்ந்து கிடக்கும் அத்தனை அழகும் அவர்களது வாழ்க்கைக்குள் ஒளிந்து கிடக்கத்தான் செய்கிறது. தப்புத்தாளங்கள் என்ற பெயரை படத்துக்கு வைத்திருந்தாலும் தாளத்தில் என்ன தப்பு, சரி வேண்டி கிடக்கிறது..? முறையான சங்கீதம் மட்டும்தான் இசை என்று மட்டுப்பட்ட மனிதர்கள் வேண்டுமானால் சான்றிதழ்கள் கொடுத்துக் கொள்ளலாம்...ஆனால் இயற்கையில் இசை என்பது சப்தம். நீங்கள் விரும்பிய தாளக்கட்டுகளும் இராகங்களும் மட்டுமே இசை அல்ல, உங்களால் விரும்பப்படாத அபஸ்வரங்களுக்குள்ளும் அழகிய ஸ்வரங்கள் ஒளிந்து கிடக்கத்தான் செய்கின்றன. என்ன ஒன்று நமக்கு எது பிடிக்கவேண்டும் என்பதை நாம் எப்போதும் தீர்மானிப்பதில்லை, அதை இந்த சமூகத்தின் கையிலிருந்துதான் நாம் எப்போதும் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
திருட்டுத் தொழிலை விட்டு விட்டு, ஒரு விபச்சாரியோடு சேர்ந்து வாழ முனைபவனின் மனதில் என்ன மாதிரியான எண்ணக் கோடுகள் இருந்திருக்க முடியும்..? வாழ்க்கையின் உச்ச ரகசியமாய், உன்னத உறவாய் தாம்பத்யம் கற்பிக்கப்பட்டிருக்கையில் பல ஆடவர்களுடன் தன் உடலை பகிர்ந்து கொண்டவளின் மனதில் எந்தக் கணத்தில் காதல் என்னும் விதை விழுந்திருக்கக் கூடும்...? உடலை இச்சையோடு ஒருவன் தீண்டுகையில் அங்கே காதல் என்ற ஒன்று சேர்ந்தே இருக்குமா...? இல்லை பிரிந்து கிடக்குமா? வயிற்றுப் பிழைப்புக்காய் உடலின் அவயங்களை வாடகைக்கு விட்டுப் பிழைப்பவளுக்குள் பூக்கும் காதல் பரிசுத்தமானதுதான் என்று சொல்லாமல் சொல்ல முனைந்திருக்கும் இந்த தப்புத்தாளங்கள் எனக்குள் மேலே சொன்ன அத்தனை கேள்விகளையும் தப்பாமல் கேட்டது.
உடலைப் பலருடன் பகிர்ந்து கொண்டதாலேயே அவள் யாரையும் காதலிக்கத் தகுந்தவளில்லை என்ற சமூகத்தின் சாக்கடைச் சிந்தனைகளையும், கற்பாறைப் புத்திகளையும் உடைத்து எறிய முயன்றிருக்கும் இயக்குனர் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ நேற்படுமெனில் என்ன மாதிரியான முடிவினை எடுப்பார் அல்லது நான் அந்த இடத்தில் இருந்தால் என்ன மாதிரியான அனுபவமாய் அது இருந்திருக்கும் என்ற ஒரு கேள்வியும் என்னை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. குறைந்த பட்சம் கற்பனையாகவாவது எழுதிப் பார்க்க வேண்டும் என்றும் தோன்றியது. நிர்ப்பந்தத்தின் பெயரால் ஏற்படும் உறவுகளுக்கும் நேசத்துக்கும் யாதொரு பந்தமுமில்லை என்ற மனோதத்துவ தீர்வினை தப்புத்தாளங்கள் சரியாகத் திரையில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது.
எத்தனையோ ஆண்களின் தீண்டல்களைக் கடந்து அவள் முதல் முதலாய் கருவுற்ற கணத்தில் முகத்தில் படரும் சந்தோஷ ரேகைகள் அதுவரை அவள் வாழ்ந்து வந்த வாழ்க்கைக் கரைகளை எல்லாம் கண நேரத்தில் அழித்துத்தான் போட்டு விடுகிறது. சரிதா இயல்பிலேயே நல்ல நடிகை, திருத்தமான அழகும் கூட.....! அழுகையையும், சிரிப்பையும் பிசைந்து உணர்வுகளை வெளிப்படுத்தி திரைக்கு வெளியே நமது மனதுக்குள் வெகு லாவகமாய் வந்து விடக்கூடிய அபார ஆற்றல் கொண்டவர். இந்தப் படத்தில் சரசுவாகவே வாழ்ந்திருப்பார்....ரஜினியும் தான்..!
சமூகத்தின் பார்வையில் முரண்பட்டுப் போயிருந்த இரண்டு உயிர்கள் காதல் என்னும் ஒரு கோட்டில் இணைந்து தங்களின் நேரான இயக்கத்தை சமூகத்தின் முரண்பட்ட கோட்பாடுகளுக்கு இணையாகக் கொண்டு வந்து வாழ முற்படும் போது இந்த சமூகம் அவர்களை சக மனிதர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. ரெளடி ஒரு விபச்சாரியை மணந்து கொண்டு தங்களைப் போலவே நடிக்க வருவதை எந்த சமூகம் இந்த உலகத்தில் ஏற்றுக் கொள்ளும் சொல்லுங்கள் பார்க்கலாம்...?
இந்த சமூகத்தின் தேவை திருந்திய அல்லது திருத்தமான மனிதர்கள் கிடையாது. அதற்கு எப்போதும் தம்மைச் சுற்றி குறைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் தேடிப்பிடித்து அதில் குற்றம் கண்டு பிடித்து அங்கே தங்களின் நாட்டாமை நகங்களை வைத்து கீற வேண்டும். இதுதான் இந்த சமூகத்தின் தேவை. ஒழுக்க நெறிகளைப் போதிக்கிறேன் என்று நீதி வழங்கும் நிகழ்ச்சி ஒன்று 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற பெயரில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார்கள்.
அதில் ஒரு நிகழ்ச்சியில் 24 வயது பையன் ஒருவனுக்கு 45 வயது கொண்ட பெண்ணோடு உறவு ஏற்பட்டு விடுகிறது. அந்தப் பெண்ணின் கணவர் இறந்து போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. 24வயது பையன் ஏதோ ஒன்றில் ஈர்க்கப்பட்டு எல்லாவிதத்திலும் அந்தப் பெண்ணோடு ஒன்றிப் போய் விடுகிறான். சமூகத்தின் முன்பும் அவனைப் பெற்றவர்கள் முன்பும் ஒரு குற்றவாளி ஆகி விடுகிறான். அந்தப் பெண்ணும் குற்றவாளி ஆகி விடுகிறார். நிகழ்ச்சியை நடத்துபவர் மட்டுமன்றி அதை பார்த்துக் கொண்டிருக்கும் அத்தனை பேரின் நேர்க்கோட்டுச் சிந்தனையிலும் இது தவறாகத்தான் தெரிகிறது.
நீங்கள் பிரிந்து சென்று விடுங்கள் என்று தீர்ப்பு சொல்லும் அந்த நீதிபதிக்கு சமூகம் போட்டு வைத்திருக்கும் வரைமுறைக் கோடுகள் மீதுதான் அக்கறையே அன்றி....அந்த பையனுக்கும் பெண்ணுக்கும் இடையே வளர்ந்து நிற்கும் நேசத்தைப் பற்றி ஒரு கவலையும் கிடையாது. இது எப்படி சரி ஆகும்... ?
சரி தவறுகளை நிர்ணயம் செய்ய எதன் உடனும் எதையும் நாம் ஒப்பீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லைதானே? ஒருவர் செய்யக் கூடிய செயலால் வேறு எந்த மனிதருக்கும் பாதிப்பில்லை எனும் போது அது எப்படி தவறாகும்? மேலும் சரி தவறுகளை நிர்ணயம் செய்வது சூழல்கள்தானே அன்றி...விதிமுறைகள் கிடையாது. கண்கள் இல்லாதவனுக்கு கனவுகள் எப்படி வரும் என்று கேட்பவர்களுக்கு, கண்கள் இல்லாதவர்களின் உலகத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்று தெரிய வேண்டுமானால் நிஜத்தில் இன்னொரு பிறவியில் அவர்கள் குருடராய் பிறந்தால்தான் முடியும்....
அப்படி இல்லாமல் எதைச் சொன்னாலும் அது, அது போலத்தான் இருக்குமே அன்றி அது, அதுவாக இருக்காது. தப்புத்தாளங்களில் கூட அப்படித்தான் சமூகம் ஒரே சீராய் நடித்துக் கொண்டிருக்கையில் தங்களின் சூழலின் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களின் வாழ்க்கையில் எதேச்சையாய் ஒரு பூ பூத்து விடுகிறது. அந்தப் 'பூ' இந்த சமூகம் நடித்து, நடித்து பெறுவதற்காய் தவம் கிடக்கும் ஒரு அரிய 'பூ'. அந்தப் பூ எப்போது நாடகத்தன்மை ஒழிந்து போகிறதோ அப்போதுதான் பூக்கும் என்பதை இந்த சமூகம் ஒரு போதும் அறிந்திருக்கவில்லை. அந்தப் பூவுக்காகத்தான் இவர்களின் ஒழுக்க நெறிகளே சமைக்கப்பட்டது. ஆனால் ஒரு போதும் அவர்களின் வாழ்க்கையில் 'பூ' பூக்கவே இல்லை. அப்படி பூக்காமல் இருப்பதற்கு காரணம் இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒழுக்க முறைகள்தான் என்று ஒரு போதும் அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை.
உனக்கு என்னை மட்டும், எனக்கு உன்னை மட்டுமே பிடிக்க வேண்டும் என்ற சர்வாதிகாரத்தில் ஒரு ' பூ ' பூத்ததாய் கற்பிதம் செய்து கொள்கிறார்களே அன்றி ஒரு போதும் அப்படி ஒரு பூ அவர்களின் வாழ்க்கையில் பூப்பதே இல்லை.
தப்புத்தாளமாய் ஒரு பூத்து விட....பொறாமைக்கார சமூகத்தால் மிதித்து நசுக்கி அந்தப் ' பூ ' சிதைக்கப்படுவதோடு....படம் முடிந்து விடுகிறது. படம் முடிந்து வெகு நேரம் ஆகியும் ஸ்தம்பித்துக் கிடந்த மனதில் தோன்றியது ஒன்றுதான்.....
ஏன் பாலசந்தர் சார் இப்போதெல்லாம் இப்படி படம் எடுப்பதே இல்லை...?அல்லது ஏன் அவரை மாதிரி மாதிரி படம் எடுக்க இப்போது ஆளே இல்லை...? ....என்பது மட்டும்தான்....
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
