கருப்பு நெருப்பு

கொத்திக் கொத்திக்
களைத்த மரங்கொத்தி
விசிறும் குயிலின் குரல்.

அக்கிரகாரத்தில் புறப்பட்டு
சேரிக்குள் நுழைந்தது
மழைநீர்.

அப்பா கட்டிய வீடு.
ஆசையாய் வருடிப்பார்த்தேன்
விலைபேசி முடித்தபின்.

மரத்தடியில் கிளிஜோசியம்
வேடிக்கைப் பார்க்கும்
மரத்துக்கிளிகள்.

தாய்மடியை முட்டும்
பால் குடிக்கும் கன்று
பசித்தவனுக்குப் பாடம்.

மிதித்து விடாதே
கசங்கிவிடப் போகிறது
பூவின் நிழல்.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Jul-13, 11:54 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 75

மேலே