இயக்குனர் மணிவண்ணனைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள்....!
இயக்குனர் பாரதிராஜா:
ஒரு ராஜா கதை இருக்குமே... வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. ஆனா, அரண்மனையின் நளபாக விருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்கனு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க! பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!'' என்று 19.06.2013 விகடனில் பாரதிராஜா மிகக் கீழ்த்தரமாகக் கூறி வருத்தப்படுகிறார்.
நடிகர் சத்யராஜ்:
மணிவண்ணனின் உடன்பிறப்பாகவே இருந்த சத்யராஜ், ‘மணிவண்ணன்... தமிழ் சினிமாவின் தனித்துவமான கலைஞன்! இவ்ளோ வெரைட்டியா நடிச்சுட்டு சான்ஸ் இல்லாம டைரக்டர் ஆகக் கூடாதுனு சொல்லி, 'நூறாவது நாள்’ படத்துல என்னை வில்லனா நடிக்கவெச்சார். அதுதான் இப்போ இருக்கிற சத்யராஜுக்கு வாழ்க்கை கொடுத்துச்சு! மணிவண்ணன் இல்லாம நடிகர் சத்யராஜ் இல்லை. இனிமே, இந்த சத்யராஜ் எப்படி இருக்கப்போறான்னு தெரியலை!'' என்று 26.06.2013 விகடனில் ஆதங்கப்படுகிறார்.
கவிப்பேரரசு வைரமுத்து:
வாழ்வின் உயரம் எது? என்ற 24.07.2013 ஆனந்த விகடனின் கட்டுரையில் இயக்குனர் மணி வண்ணனின் மறைவு குறித்த கேள்விக்கு கவிப்பேரரசு வைரமுத்து, ''அவரும் நானும் ஒரே படத்தில் அறிமுகம் ஆனவர்கள். சிக்கனமான சிந்தனையாளர். பேசு வதைவிட அதிகம் சிந்தித்தவர். அலைகள் ஓய்வதில்லை உரையாடல், அவருக்குள் ஒரு கவிஞன் இருப்பதையும் காட்டியது. ஒரு சிந்தனையாளன், ஒரு கவிஞன், ஒரு குழந்தை என்று மரணம் மூன்று பேரைக் கொன்றுவிட்டது!'' என்று உணர்ச்சி வசப்படுகிறார்.
மூன்று பேரும் மணிவண்ணனுடனான தொடர்புகளையும், மனதளவில் ஏற்பட்ட பாதிப்புகளையும் கூறுகிறார்கள் என்றாலும், வயதில் முதிர்ந்த பக்குவப்பட்ட பாரதிராஜா மேற்படி கூற்றைத் தவிர்த்திருக்கலாம்.