எனக்கான இரவுகள்....
யாரும்
பாதுகாத்திருக்க விரும்பாமல்...
தூக்கி எறிந்த
ஒரு துண்டுப் பிரசுரமென...
என் முன்னே விரிந்து கிடந்தது
இந்த இரவு.
சிறுமிகளின் பாண்டி ஆட்டத்திற்குப் பின்...
சிறுவர்களின் கிட்டிப் புல் விளையாட்டிற்குப் பின்...
விலங்குகளும் வீடடைந்த பின்...
அந்தியைக் கடந்து...
நிலமெங்கும் விழுந்து விட்ட இந்த இரவு...
பயத்தின் நிழலாய் விரிந்துகிடக்கிறது...
இந்த ஊரெங்கும்.
உதிர்ந்த பூக்களை நினைத்தபடி...
செடிகள் பனி நீர் சிந்த...
சாபத்தின் வெம்மையில்
சுருள்கிறது இரவு
யாரும் அறியாமல்.
இராஜா...இராணிக் கதைகளும்...
நிலவின் அழைப்புக்களும்...
சிறு விளையாட்டுக்களும் முடிந்து...
குழந்தைகள் தூங்கி விட...
அலுப்பு மிகுந்த மூச்சுக்களுடன்...
அடுக்களைகள் சார்த்தப்பட...
வழியறியாத வழிப்போக்கனென
திண்ணை தேடித் திரிந்த...
ஒரு இராப் பிச்சைக்காரனென...
எல்லா வீடுகளின் முன்னாலும்
விரிந்து கிடந்தது இரவு.
நெருக்குதல்களும்...
உளைச்சல்களும்...
இரவைத் துண்டாடியபடி இருக்க...
பெரும் கருணையாய்...
இரவின் உயிர்ப்பாய்...
அந்தக் குளத்தில் சிரிக்கத் துவங்கியது..
ஒரு அல்லிப் பூ.