ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
2013 ஆடி 18 மாலை
இடியாய் ஒரு சேதியை
செவியில் இறக்கிவிட்டு
இறந்து போனது காற்று
எழுத,படிக்க தெரியாதவர்களை கூட
தாளம் போட வைத்த
தமிழ் கவிஞனொருவனை
யாருக்கும் தெரியாமல் வந்து
கூட்டிப்போயிற்று கூற்று!
ஐம்பது ஆண்டுகளாய்
தமிழுலகை தன்
கவியழகால் ஆட்டிப்படைத்த
வாலிப கவிஞன்
எழுதியது போதுமென
எமனிடம் சென்றுவிட்டான்
பதினைந்தாயிரம் பாடல்களுக்கும்
பல்லாயிரம் கவிதைகளுக்கும்
பிரமனானவன்
பரமனிடம் போய்விட்டான்
நோய்வாய்ப்பட்டு கிடந்தவன் - நாளை
தீ வாய் பட்டு இல்லாமல் போனாலும்
தீவாய் சுற்றியிருக்கும் இவன்
தேனாய் வடித்த பாடல்கள்
அரை நூற்றாண்டாய்
திரையுலகையாண்ட
திரையிசைக் கவிஞன்
இமைக்கதவுகளை மூடிவிட்டான்
இனிமேல் திறப்பதேயில்லை என்பதாய்!
ஐயா வாலி!
நீங்கள் வாழி வாழி என்றீர்கள் தமிழை
இன்று காலி செய்துவிட்டீர்கள் உயிரை
உங்கள் வயதைக்கடந்தும்
இங்கே பலபேர் வாழ்கிறார்கள்
உங்கள் எழுத்தை கடக்க
இன்றும் எவருமில்லை
இனியும் எவருமில்லை
கவிராஜனுக்கு ராஜன்
ரங்கராஜன் தான் .