மாம"நாய்"

"சீ" தனம்....
தன்னைத் தானே
தூற்றிக் கொள்ளும்
ஒரே சொல்.

வேதனம் பெறாத
வெறுங்கைகள்
சாதனம் பெறுவது
வேதனை.

இங்கு...
சொந்த "மாதிரி"ப்
பெண்ணுக்குக்
கைக்கூலி
வேறு
எந்த மாதிரிப்
பெண்ணுக்கும்
கையில் கூலி.

வேலைக் காரிக்கு
மட்டும்
மாதம் ஊதியம்
வேலையில் கரிசனம்
காட்டும்
மனைவியிடம்
மொத்த வசூல்

இல்லறத்தில் இன்பம்
இருவருக்கும் சமன்
ஈடுபட்ட பிற்பாடு
மனைவிக்கு பெரும்பாடு.

உன் உணவு
வாந்தியாய்
ஊண் உணவு
இன்றியே
வாய் வயிறு
வெறுமையில்
வாயும் வயிறுமாய்
மனைவி

உள் வைத்த
உன் பிள்ளை
உருவாகும் அதிசயம்
சீதனமாய் தீனிட்ட
மாமனின் கையன்றோ.

கருவைக் கொடுத்துவிட்டு
தெருவில் விளையாட்டு
நெருப்பைக் கொடுத்துவிட்டு
எரியுது கொழுந்துவிட்டு

ஒருபக்கம் படுக்க
மறுபக்கம் கடுக்கும்
எப்போ நீ வந்தாலும்
உனக்குணவு இருக்கும்

உன்
குறட்டையின்
குண்டுவெடிப்பிலும்
கண்ணயர்ந்த உன்மனைவி
சிசுவின் சிணுங்களில்
விழித்த மாயம்
இன்னும் புரியல.

கஷ்டப்பட்டு பெற்றெடுத்தும்
இஷ்டப்பட்டு உன்பெயரை
தன்பிள்ளைக்கு முதலெழுத்தாய்
பெற்றுக்கொடுப்பவள் அத்தாய்

வேதனையில் பங்கில்லாத
வெறுவாய் உனக்கு
சாதனையில் பங்கென்று
பெறுவாய் எதுக்கு?

உன் ஆண்மைக்கு
ஆதாரமாய்
ஆண்மகன் தந்தமைக்கு
ஆயிரம் பொற்காசுகள்
அளித்தாலும் அடங்கிடுமா?

உனக்கொரு மகள்
பிறந்து
உன்னைப் போல்
ஒருவன் வந்து
உனக்குள்ள பொருள்
இழந்து
நாதியற்ற மாம"நாய்"
நீ நிற்கும் காலமது
வரத்தான் போகிறது.

எழுதியவர் : kutty (7-Aug-13, 8:00 pm)
பார்வை : 109

மேலே