விதி தொடங்கும் பாதை
இரவு பெய்த மழையில் பூமி குளிர்ந்து கணபதி மாநகர் அழகாய் விடிந்திருந்தது. கணபதி மாநகரின் வடக்குப்பகுதியில் முதல் வீடாக காட்சி அளித்தது ஹரியின் வீடு. ஹரி அலாரம் அடித்துக்கூட கேட்காதவாறு தன் போர்வையை இழுத்துப்போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தான்.
"டேய் ஹரி கண்ணா, மணி ஏழு ஆச்சு, இன்னும் என்னடா தூக்கம்? என்றாள் அவன் தாய் ஜோதி
"இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் ப்ளீஸ்மா, என்றான் ஹரி
"எழுந்திருடா, தண்ணி ஹீட்டர் போட்டு வச்சு அரைமணி நேரமாகுது, சீக்கிரம் போய் குளிச்சுட்டு வாடா"என்று தன் கோபத்தை கொட்டினாள் ஜோதி
"ம்ம்.. அப்பா வாக்கிங் கிளம்பிட்டாரா? என்றபடி கட்டிலை விட்டு எழுந்து பாத்ரூமினுள் நுழைந்தான்.
ஹரியின் அப்பா பிரபல தனியார் வங்கியில் கிளை மேலாளராக உள்ளார். அப்பா கொஞ்சம் கண்டிப்பானவர். அதனால், அவர் மீது பயம் அதிகம். ஆனால் ஹரி அம்மா செல்லம். ஹரி கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு B.E, படித்துக்கொண்டிருக்கிறான்.
பாத்ரூம் சென்ற ஹரி பல்துலக்கி, குளித்துவிட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தான்.
"இன்னைக்கு என்னமா டிபன் பண்ணியிருக்க?
"சூடா இட்லியும், கொத்தமல்லி சட்னியும் என்று கூறியபடி பரிமாறத்துவங்கினாள் ஜோதி.
ஹரி சாப்பிட்டு விட்டு வழக்கமாய் வாங்கும் பாக்கெட் மணியை வாங்கிக்கொண்டு புறப்பட தன் புதிய பஜாஜ் பல்சரை ஸ்டார்ட் செய்தான்.
"ஹெல்மெட் எடுத்துபோட்டுக்கடா" என்ற ஜோதியின் பேச்சை காதில்வாங்காமல் பைக்கை தார் சாலையை நோக்கி செலுத்தினான். அடுத்து வரும் விபரீதங்களை உணராதவாறு வேகத்தை கூட்டினான்.
காந்திபுரம் மெயின் ரோட்டில் வாகனங்களின் பெருக்கமும் அதிகரிக்க தொடங்கியிருந்தது. டவுன் பஸ் ஸ்டாண்டைக் கடந்து வ.ஊ.சி பார்க்கினுள் நுழைந்த ஹரி பூச்செடிகளை கடந்து மரத்தின் அருகே உட்கார்ந்திருந்த அவன் காதலி ப்ரியாவை நோக்கி, அருகில் சென்று அமர்ந்தான்.
ப்ரியா ஹரி படிக்கும் அதே கல்லூரியில் இரண்டாமாண்டு B.E.ct படிக்கிறாள்.
"ஏண்டா லேட்! டைம் எவ்ளோனு பாரு, வழக்கமா நான் லேட்டா வருவேன்'னு சொல்லிட்டு, நீ லேட்டா வந்திருக்கே? என்று தன் பொய்க்கோபத்துடன் நகர்ந்து உட்கார்ந்தாள் ப்ரியா.
"சாரிடா குட்டி, நைட் பசங்ககூட சின்ன பார்ட்டி" என்றான் ஹரி
"என்ன பார்ட்டி, ட்ரிங்ஸ் பார்ட்டி தானே! நீங்கெல்லாம் திருந்தமாட்டீங்கடா, என்றாள் ப்ரியா
வழக்கமாய் காதலில் வரும் வம்புசண்டைகளை முடித்துவிட்டு பைக்கில் புறப்பட தொடங்கினார்கள் இருவரும், அவர்களின் அன்றைய புரோகிராம்படி மருதமலை கோவில் செல்ல கிளம்பினர்.
ஹரியின் பைக் பார்க்கில் இருந்து மெயின் ரோட்டில் நுழைந்தது. மிதவேகம் மிகநன்று என்ற வாசகம் ரோட்டின் ஓரம் வைக்கப்பட்டிருந்தது. அதைக்கண்டதும் வேகத்தை கூட்ட தொடங்கினான்.
வண்டியின் வேகம் 70 என ஸ்பீடோமீட்டர் காட்டியது. பின்னால் அமர்ந்திருந்த ப்ரியா தன் துப்பட்டாவால் தன் தலையுடன் சேர்த்து முகத்தைப் போர்த்திக் கொண்டாள்.
ஹரி மேம்பாலத்தைக்கடந்து எதிரே வரும் வண்டிகளை கண்டுகொள்ளாமல் ரோட்டின் வளைவுகளிலும் முந்த தொடங்கினான். அவன் எதிரே வந்த ஸ்விப்ட் கார் பலத்த ஹாரன் அடித்துவிட்டு ஒதுங்கி சென்றது.
லாலி ரோட்டை நெருங்கும் நால்சந்திப்பு ரோட்டில் சிவப்புசிக்னல் விழும்முன் வேகமாய் செல்ல தன் வண்டியை துப்பாக்கியில் புறப்பட்ட தோட்டாவாய் செலுத்தினான். ஆனால், பச்சை சிக்னல் அணைந்து சிவப்பு சிக்னல் ஒளிர்ந்தது. வாகனங்கள் புறப்படத்துவங்கும் ஒரு சில நொடிகளில் சிக்னலை கணநேரத்தில் கடந்தான். முன் சென்ற வண்டியை கடக்க உச்ச வேகத்தில் செல்லும் போது எதிரே வந்த லாரி தன் பைக்கை நோக்கி வருவதை உணர்ந்தவனாய் இடப்பக்கம் வருவதற்குள்,
படார்.. பட் என்ற பேரிரைச்சலுடன் பைக் லாரியின் முன்புறத்தில் மோதி உதிரிபாகங்களுடன் அவனும் அவன் காதலி ப்ரியாவும் தூக்கி எறியப்பட்டனர். ஹரிக்கு தலையில் ஹெல்மெட் அணியாததால் அடி பலமாக பட்டதால் இரத்த வெள்ளத்தில் இறுதி மூச்சை விட்டான். அவன் காதலியை அடிப்பட்ட காயங்களுடன் ஆம்புலன்ஸ் தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடல் விரைகிறது.
சாலை விதிகளை மதிக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. சாலைவிதிகளை மதித்து விபத்தில்லா சமுதாயம் காப்பது அனைவரின் கடமையே.