" வாடா என் தலைவா! "
அடேய் பைத்தியக்காரா!
எங்களை ஏன் பித்துப்பிடிக்கவைத்தாய்?
நேற்றில்லையென்றால் இன்றுவரும்
உன் வாழ்க்கை வருமா?
அவர்களுக்கு நடிப்புதான் பிழைப்பு!
அவர்களின் பிழைப்பே நடிப்பில்தான்!
ஒன்று ஊற்றிக்கொண்டால்
மற்றொன்று வாரிக்கொடுக்கும்
உனக்கு வாழ்வை எதுகொடுக்கும்?
கோடியில் புரள்பவர்கள் அவர்கள்
அதை தெருக்கோடியில் நின்று
வாய்பிளக்க பார்ப்பவன் நீ..
வளரும் வயதில்
பொசுங்கிப் போவதென்ன?
வாய்ப்புகள் காத்திருக்க
விடியலை வீழ்த்துவதேன்?
வண்ணங்கள் நிறைந்திருக்க
வெறும் சாம்பலாவதேன்?
பெற்றவர்களின் நம்பிக்கையை
தூக்கிலிடுகின்றாய்!
அன்பானவர்களின் நெஞ்சில்
கசையடி கொடுக்கின்றாய்!
உன்னை எண்ணியெண்ணி
துடிதுடிக்கவைக்கின்றாய்!
மற்றவர்களின் ஏளனத்திற்கு
வழிசெய்கின்றாய்!
உறவுகளை மறக்கின்றாய்!
நண்பர்களை துறக்கின்றாய்!
உயிரை மாய்க்கின்றாய்!
மனதை உடைக்கின்றாய்!
மதியற்ற முரடனே!
ஒருநாள் கூத்துக்கு
மூச்சை முடக்குவதேன்?
கண்ணுக்குள் கண்ணாக வைத்து
காத்து வளர்த்த உன்னை
மண்ணுக்குள் பிணமாக வைத்து
பார்க்க வைக்கின்றாயே?
அவன் இவன் எவனடா?
நீ தானடா உண்மையில் தலைவன்!
உனக்குள் இருக்கும் உன்னைப்பார்
உன் ஆற்றல் வெடித்துக் கிளம்பும்!
புத்துணர்வோடு வழிதேடு!
புத்தம்புது வாழ்வு மலரும்!
இதய விளக்கில்
நல்லெண்ணம் ஊற்றி
துணிச்சல் திரியிட்டு
தன்நம்பிக்கை வத்திப்பெட்டியை
சிந்தனை தீக்குச்சியால் உரசி
அறிவுச்சுடர் ஏற்று
வாழ்க்கை பிரகாசிக்கும்!..