எங்கும் தமிழே எதிலும் தமிழே

அமிழ்தென்னும் பெயர் கொண்ட அருந்தமிழாய்,
உம்மை அறிந்தோருக்கு அழிவில்லா புகழாய்,
சேரர் சோழ பாண்டியரின் செல்ல மகளாய் ,
சங்கம் வளர்த்திட்ட முத்தமிழாய் ,

உயிராய், மெய்யாய், உயிர்மெய் காக்கும் ஆயுதமாய் ,
தவழும் மழலையின் தாய்மொழியாய்,
தாய்மகளின் தாலாட்டாய் ,
சீரிளமை குன்றாத கன்னித்தமிழாய்,

ஏட்டினில் பிறந்து பாட்டினில் வளர்ந்து
முப்பாலும் புகட்டுகின்ற
உலக பொதுமறையாய் ,
வள்ளுவனின் வாய் மொழியாய்,

தேன் தமிழாய் , தீன் தமிழாய்,
திகட்டாத தெள்ளமுதாய்,
நாவினிக்கும் நற்றமிழாய்,
இளைஞர்களின் காவியமாய் ,
பழமொழியாய்,முதுமொழியாய் ,

பள்ளியில் பயிற்றுவிக்கும் பைந்தமிழாய் ,
சித்தம் போற்றும் மாமருந்தாய் ,
இறையோனை துதிபாடும் பொற்றமிழாய் ,
வழக்குரைக்கும் வாய்மொழியாய் ,

இலக்கியமாய் , இலக்கணமாய், இயற்தமிழாய் ,
இசைத்தமிழாய்,எம்மொழியாய்,
எங்கள் செம்மொழியாய்,
உம்மை இணையத்திலும், எங்கள் இதயத்திலும் இணைத்திட்டோம்.
இனி கணினியும் தமிழ் கவி பாடும் ..
இனி எங்கும் தமிழே ! எதிலும் தமிழே !

- அழகர்சாமி சுப்ரமணியன் (அ. சு )

எழுதியவர் : அழகர்சாமி சுப்ரமணியன் (11-Aug-13, 10:56 am)
பார்வை : 2146

மேலே