மன்னித்தேன்.. ! பிதாவே என்னை மன்னியும்..!

அம்மா சொன்னாள்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
குப்பை தொட்டியில்..!

அப்பா சொன்னார்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
சித்தியின் கொடுமையில்..!

சித்தி சொன்னாள்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
கள்ளகாதலுக்கு சாட்சியாய் ..!

காதலி சொன்னாள்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
இன்னும் பிரம்மச்சாரி..!

மனைவி சொன்னாள்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
முன்னாள் கணவன்...!

கணவன் சொன்னான்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
தாசிகளின் வீதியில்..!

மகள் சொன்னாள்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
கரு கலைக்கும் ஏமாளி..!

மகன் சொன்னான்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
முதியோர் இல்லத்தில் ..!

நண்பன் சொன்னான்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
இழந்தேன் சகோதரியை..!

தொழிலாளி சொன்னான்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
அவனிடமே தொழிலாளி..!

கடவுள் சொன்னார்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
இப்போது கல்லறையில்..!

இன்னும் இருக்கிறதாம்
மீதியாய் மன்னிப்புகள்
என் கல்லறை தோட்டம்
தெரியாததால் தப்பித்தேன்..!

இவர்களை மன்னித்தேன்
மன்னித்ததால் பிதாவே..!
என்னை மன்னித்துவிடும்..!

குமரி பையன்

எழுதியவர் : குமரி பையன் (11-Aug-13, 8:44 pm)
பார்வை : 128

மேலே