விதியுடன் ஒரு சந்திப்பு. (சுதந்திர தின வாழ்த்துக்கள்).
பறவை நாகத்தினைப் போலே
பாரினைக் கலக்கி வீழ்த்திய
கறங்குடை சப்பை மூக்கர்
சரணே என்று தாழ்ந்த
நிறமுடை நல்ல நாளில்
விடுதலை வருவது நிஜமென
மறத்துடன் போரில் வென்ற
மொளண்டு பாட்டன் சொன்னார்..
இந்திய விடுதலைச் சட்டம்
பதினெட்டு சூலைத் திங்கள்
அந்திம நேரந் தன்னில்
அரசியார் ஒப்புதல் செய்ய
சிந்திய குருதியின் பயனாய்
சிறப்புடை சிங்க இலட்சனை
வந்து அதனின் தலையில்
பொருந்தி பெருமை பெற்றது
செந்நிற கோட்டை மீது
செயமெனக் கொடி பறக்க
செங்கையில் மாதர் பலரும்
மழலையர் குலப் பட்டாளம்
பங்கயம் போலே பூத்த
பரிசாம் நல் விடுதலையை
அங்கும் இங்கும் எங்கும்
ஆவலாய் வர வேற்றனரே.
அரசியல் சட்டப் படியே
அமைந்த முதல் அமைப்பில்
சுரமது கூடும் வகையில்
சுந்தர நேரு எழுந்து
பரந்த நம் பாரத நாட்டில்
விரிந்தது விடுதலை இன்று
விதியுடன் ஓர் சந்திப்பு
நிகழ்ந்தது இவ்விரவில் என்றார்.
முழுவதும் நம்மை நாமே
அரசு ஆள வேண்டி
பழுதுடை ஆட்சி என்று
பறங்கியர் தன்னை விரட்டி
கொழுது கொண்ட மக்கள்
நல்லதோர் வெள்ளி இரவில்
தொழுதிடப் பெற்றோம் விடுதலை
தூய நம்தேசம் வாழ்க!..