மாணவ சமுதாயமே திரண்டு வா !
அனைவருக்கும் வணக்கம் !
தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழகத்தில் ஈழ விடியலுக்காகவும், தமிழகத்தின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். மாணவர் சமுதாயம் எந்த அரசியல் கலப்புமற்று களத்திலே பல இன்னல்களை இன்முகத்துடன் சந்தித்து தமிழனின் வீர உணர்வை பறைசாற்றுகின்றனர். மேலும் பல மாணவர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் சீர்க்கேடுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்காக எங்களை தட்டிக்கேட்க அழைக்கின்றனர். தமிழனுக்கு துரோகம் செய்ததற்காக பாரத பிரதமரை இந்த மண்ணில் கால்வைக்காதே ! தமிழகத்தை நாசப்படுத்திய நஞ்சுக்குப்பியே உள்ளே வராதே ! என்று கூறி கருப்புக்கொடி காட்டி விரட்டியடிக்கும் தீரர் கூட்டமாக தமிழ் உணர்வோடு களத்தில் தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு நிற்கிறது.
சினிமா , கிரிக்கெட் எல்லாம் பொழுதுபோக்கு என்று கூறி அதிலே மூழ்கி சீரழியும் மாணவர்களே போதையின் பிடியிலும், கலாச்சார சீர்கேட்டிலும் அழிவை நோக்கி பயணிக்கின்றனர். வீரம் என்று கூறி பெண்களை சீண்டுவதும், சாதிய சண்டைகளை பள்ளி பருவத்திலே வளர்த்தெடுப்பதும் மாணவ சமுதாயத்துக்கு வீரமாகுமா ? நாட்டுப்பற்றிலே வாஞ்சிநாதனும் , திருப்பூர் குமரனும், கவியிலே பாரதியும், ஈகையிலே பாரியும் , நீதியிலே மனுநீதி சோழனும், அரசாட்சியிலே வீரம் விளைந்தோங்க ஆட்சி நடத்திய சேரன் செங்குட்டுவனும் , கலையிலே பல்லவர்களும் , ராஜராஜ சோழனும் உலவிய மண் அல்லவா நம் தமிழ் மண் !
உலகுக்கே நீதி கூறும் திருக்குறளை படைத்த வான்புகழ் கொண்ட வள்ளுவனும் வாழ்ந்த பூமியல்லவா ! கற்பிற்கு இலக்கணமாக , மதுரையை தீக்கிரையாக்கி பெண்ணியத்தை நிலைநாட்டிய கண்ணகி வாழ்ந்த பூமியன்றோ ! வீர மங்கையாக சுதந்திரத்தை நாடி , வெள்ளையனை நடுநடுங்க விரட்டியடித்த வீரத்தாய் வேலு நாச்சியார் வாழ்ந்த பூமியல்லவா !
கல்லும் , மண்ணும் தோன்றும் முன்னே மனிதன் தோன்றி நாகரீகத்தை உலகுக்கே அறிமுகப்படுத்தி மனிதநேயமும் , கொடையுள்ளமும் கொண்டு வாழ்ந்த இந்த தமிழ் இனம் , அதில் வாழும் மாணவ சமுதாயம் மொழியை மறந்து , நாகரீகத்தை காற்றில் உலவ விட்டுவிட்டு , புற்றீசலை போல சிலகாலம் வாழ்ந்து அடிமைத்தனத்தைக்கூட அறியாமல் நாட்டை விற்பது நியாயமாகுமோ ?
தமிழின் சிறப்பை அறிந்து , பார்போற்ற வாழ்ந்த இனத்தை மீண்டும் கரையேற்ற, முழு சுதந்திரத்தையும் தமிழுக்கும் , தமிழனுக்கும் பெற்றுத்தர வீரமுடன், நற்கல்வியுடன், மனித நேயத்துடன் இணைந்து தமிழை காப்போம். தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பில் இணைந்து தமிழ் ஈழத்தையும், தமிழன் மானத்தையும் காக்க மாணவ சமுதாயமே திரண்டு வாரீர். போர்க்களம் அமைப்போம் ! புதிய உலகை படைப்போம் !
சசிகுமார்
மாநில துணை அமைப்பாளர்
தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு