நிராயுதபாணியின் கோபங்கள்
பசித்தவனை பசிக்கவிட்டு
கொழுத்தவனை கொழுக்கவிட்டு
சமூக ஏற்றதாழ்வுகளை
சிதையாமல் காக்கும்
அரசியல் வியாதிகள் இந்த அரசியல்வாதிகள் .
மனிதத்தை மனிதர் மறந்ததால்
வெறுத்து மனவருத்தத்தோடு
வெளியேறிவிட்ட இறைவனை தேடாமல்
விட்டுச்சென்ற வீடாம் கோயிலை
கும்பிட்டு செல்லுதிங்கே
கூட்டங்களாய் பக்தியுடன் .
விக்கியபடி வறியவனவன்
வாசலில் நின்றிருக்க
வயிற்றுச் சோற்றுக்கு
உறுதிபெற்ற மனிதருக்கே
கோயிலுக்குள் அன்னதானங்கள் .
துன்பங்களின் துரத்தலை
தூளாக்கத் தெரியாத
தன்னம்பிக்கையற்ற மனிதர்கள்
தடைகளை தகர்ப்பவன் இறைவனென
முன்னிறுத்தி வாய்ப்புகழ்ந்துவிட்டு
அவன் முதுகுக்குப்பின் பாடப்படும்
லாவணிகளில் அரண் தேடி
அலைகின்றனர் .......தோல் தடிக்க .
ஆலயக் கருவறையில் ஓங்கிஒலிக்கும்
வேத முழக்கத்து ஆர்த்திடும் ஓசையில்
வாசலில் நின்று பீறிட்டு அழும்
வாடிய முகம் கொண்ட குழந்தையின்
வாட்டிய பசியின் ஓலமது
வாகாய் மறைக்கப்படுகிறது நடைமுறையில் .
சாதிச்சொல்லி மனிதர்களை
மறுதலிக்கும் மகத்தானோரின்
தோட்டத்து தனிவீட்டின்
கட்டில்களில் ஜமாபந்தி
நடத்தப்படும் நியாயம் மட்டும்
நீதிதேவதைக்கே புலராத நீதியோ ?
தொட்டால் பட்டுவிடும்
தீட்டுக்கள் எல்லாம் அங்கு
காமத்தீயால் கழுவப்பெறுகிறதோ ?
இருபத்தோராம் நூற்றாண்டின்
இணையற்ற முன்னேற்றமே
தேசியத் தலைவர் எல்லாம்
சாதியத் தலைவர் என
சந்ததிகள் சிந்தனையில்
சரித்திரப்படுத்தப்பட்டதே !
மதங்களும் மடங்களும்
வணிகப்பட்டதன் அடையாளங்களாய்
ஸ்ரீலோல குருமார்களின்
நித்திய ஜாம லீலா வினோதங்கள் .
ஒன்றான பரம்பொருளை
பலவாக பெயர்வைத்து
சுயசிந்தனை சூனியமான
தம்பிகளுக்கு இனாமாய் புகட்டிடும்
அண்ணன்களை தாங்கி நிற்க
அந்நிய நாட்டு பணமது
அதிரடியாய் வரும் வரையில்
அற்பர் எல்லாம் கூட இங்கு
ஆன்மீகக் காவலரே !
தன் மதக் கருத்தினில் தோய்ந்த
தன்மையோ தொன்மையோ
முள்முனை அளவில் கூட
முகர்ந்து அறியா மனிதர்களே
முந்தி இங்கு ஓடிடுவர்
புது மதத்தில் புண்ணியம் தேடி .
புகுந்த வீட்டில் மதமெனும்
புது உடைமட்டுமே புதிதென்பதை
அடித்து துவைக்கும் மனச்சலவையில்
அடுத்தடுத்த காலம் காட்டிவிடும் .
இனம் அழிக்கப்பட்ட
இருட்டான காலங்களில்
இருவிழி மூடிக்கொண்டுவிட்டு
முன்கை நீட்டப்படாததர்க்கு
முழங்கையை குற்றம் சொல்லிவிட்டு
முக்காடுகளுக்குள் ஒளிவதால் அவர்தம்
மூடத்தனம் மன்னிக்கப்படுமோ
மாண்ட தமிழர் மனக்கேள்வி மன்றத்தில் .
தேகம் பெறுகின்ற
போகம் பெரிதெனக்கருதும்
புனலின்ப மனிதர்கள்
புலம்பெயர்தலின் வலி உணர
வாய்ப்பொன்று விதித்திட்டால் மட்டுமே
வாழ்வாங்கு வாழ்ந்திடுவான்
இறைவன் இனி இப்பூமியில் .

