காயும் ஈரம்..4 (21-ஆம் நூற்றாண்டின் புதுச்சேரியின் சிறந்த சிறுகதை

“ஒண்ணுமே – எதுவுமே செய்யாமெ இருந்தாக்கூட இம்சை தான் சாமா. பொறுத்து பொறுத்து ரெண்டு வருஷம் ஒட்டினேன் அவரோடு, இந்த படித்துறைப் பிள்ளையாரை சேவிக்கும் போது ஒரு கல்யாணம் காட்சினு போகும் போதெல்லாம் அந்த பெண்டுகளின் பேச்சு தாங்காம ஒரு நாள் அம்மா என் கிட்ட கேட்டா ,********** “கனகா நீ சந்தோஷமா இருக்கிறியோ? ஏன் ஒண்ணுமே விசேஷமே இல்லையடி? எதையும் மனசிலே வைச்சுண்டு அவதிப்படாதேடி… கொட்டித் தீர்த்திடு உன் ஆம்பிடையானிட்ட – கட்டிக்க மட்டும் இல்லேடி புருஷன் கொட்டித் தீர்த்துக்கவும் தான். மனசுலே பூட்டி பூட்டி வைச்சேள்ன்னா புத்தி பேதலிச்சுடும்டி…..!!!!.”*************

“ஆனாலும் பகவான் அவரை அப்படி அற்ப ஆயுசுலே இழுத்திண்டு இருக்க வேண்டாம் கனகா.” சாமா வருத்தத்துடன் கூறினான்…

‘ஆசைகளைத் தீர்த்துக்காத , தீர்த்து வைக்காதவாளுக்கு ஆயுசு எதுக்கு சாமா – ஒரு நாள் ராத்திரி அம்மா சொன்னாளேனிட்டு யோசனையிலே கிடந்தவள் அப்படியே தூங்கி போயிட்டன்! ஏதோ சொப்பனம் கண்டு எச்சகுபிசகா துணி கலைஞ்சு அப்படியே அசதியிலோ அவதியிலோ காலை அந்த புண்ணியவான் மேலே போட்டுட்டேன்! என்ன எழுப்பி விட்டு அமங்களமான நாழிகையின்னு சொல்லிட்டு முற்றத்து கிணற்று ஜலத்தில் முழுக்குப் போட்டுட்டு தீட்டுக் கழிச்ச மனுசனைப் பத்தி நீ கேள்விப் பட்டு இருக்கியோ?’

‘பாவம் கனகா நீ! எனக்கே என்னமோ மாதிரி ன்னா இருக்கு. உன் ஆம்படையான் ஏன் அப்படி இருந்திருக்கணும்...என் மேலே நீ ப்ரியமா இருந்தியே அதனாலத்தானோ.’

‘அதில்லை சாமா. சாஸ்திரமாம் மடியாம் என்ன இழவோ? குளிச்சிட்டு வந்த புண்ணியவானிடம் அம்மா சொன்ன மாதிரி சங்கோஜயில்லாம, -புருஷன் கிட்ட என்ன சங்கோஜம் வேண்டிக் கிடக்கு, - பேசினேன்.************** “ஏன்னா ஊரில் பெண்டுகள் எல்லாம் நான் மலடியோனிட்டு அரசல் புரசலா பேசறது காதில் விழுந்து நேக்கு சங்கடமாய் இருக்கு. நான் மலடியா இல்லையானு இன்னும் தெரிஞ்சுக்காம... இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி? நான் ஏதும் நோக்கு பாவம் பண்ணிட்டேனோ? நேக்கு ஒரு குழந்தை வேணும்னா! வெட்கம் இல்லாம் கேக்குறேனே, ஒரு பெண் முந்தானை விரிச்சா மட்டும் போறாதுன்னா, மாராப்பும் நீக்கி ஒரு குழந்தைக்கு பாலூட்டணும்னா! அப்போதான் அவளோட ஜன்மம் ஜன்ம சாபல்யம் பெற்று் பூர்த்தியாகும்.” **************

சர்வ சாவாதநமா. என்னைப் பார்த்து சொன்னார் அந்த புண்ணியவான் “யாக சாலைக்கு போகனும் நாளையோட உற்சவர் மூலவர் ஆராதனை முடிந்து விக்கிர ஆராத்தி செய்யணும்” என்று சொல்லி கிளம்பி போயே போயிட்டார்

“போனவர் தான் திரும்பி பொணமா ஆத்துக்குள்ள வந்தாரே.... ஆனாலும் ஆரம்பிச்சு அந்த யாகத்தைத்தான் எப்படியெல்லாம் சிரமப்பட்டு முடிச்சார் தெரியுமா, யாகம் முடிஞ்ச கையோட உன் தோப்பானரைத்தான் பார்க்க போனார்.’ நான் தான் ஆத்துக்கு வெளியே நின்னுண்டு இருந்தேனே..”

‘ஆம்பிடையாளை ஆலிங்கனம் செஞ்சு அவ வக்ரத்தையும் தாகத்தையும் தீர்த்து வைக்காம ஆராதனையால விக்ரத்தையும் யாகத்தையும் திருப்தி படுத்துற ஆம்பிடையானால என்ன பிரயோசனம்.? அதுக்கு சன்னியாசம் வாங்கி இருக்கலாமோன்னா. ஒரு குழந்தைப் பெற்றவுடனேயே பெரும் பாலும் பெண்டுகளுக்கு புருஷ சுகத்லே ஒரு திருப்தி ஏற்பட்டு விடறது தெரியுமோ! சாமா எனக்குன்னு ஒரு குழந்தை பொறந்து இருந்தா இப்போ என்னை தங்களுடைய வக்கிரத்துக்கு இவாளெல்லாம் உட்படுத்தியிருக்க மாட்டாளாளோனோ..?”

’”‘எப்படி நோக்கு இப்படியெல்லாம் வியாக்யாணாமா பேச முடியறது கனகா... நிசத்தை செல்லணும்னா... நீ ஏதோ சரீர பசிக்கு அலையற பொம்மனாட்டி மாதிரின்னா மத்தவாளுக்கு தோனிடும்”

‘அப்ப நோக்கு..எப்படி புரியரது சாமா…?’

‘நேக்கு உன்னுடைய இம்சை புரியர்து உன்னோட அம்மா சொன்னது ரொம்ப வாஸ்தவம். எதுக்கும் ஒரு வடிகால் வேணும் தான். நன்னா யோசிக்க தெரிஞ்சவா உன்னோட வியாக்யானத்தை ஏத்துப்பா ஆனா உன்னோட அண்ணா மன்னியெல்லாம்?’வழியின்றி புலம்பினான் சாமா!!!

‘அவாளுக்கு சொத்து பணம் கிடச்சுட்டா போறும் வேற ஒண்ணுந் வேண்டாம். அனுபவிக்காம இருந்ததை அரை குறையா அனுபவிக்கிறது என்னைக்கும் பிராண சங்கடம் தான் சாமா? நம்பளை பேயா அலைய வெச்சு நாயா சீரழிச்சுடும் ! அந்த கிழட்டு கோபால சாஸ்திரிகளைக் கட்டிண்டு நான் ருசி கண்ட பூனையா அலையறது எவ்வளவு இம்சைத் தெரியுமோ? அதுக்கு தான் கடைசியிலே அந்திம நேரத்திலே உயிலை அம்மா அந்த மாதிரிப் பண்ணினா – என்னிண்ட பேசினா”

‘இருந்தாலும் ஏதோ ஒரு நல்லதுக்குத் தான் அந்த மாதிரி உயிலை உங்கம்மா எழுதி வைச்சிருக்கா கனகா.’

‘என் தோப்பனாரைப் பார்க்கப் போன என் ஆம்படையான் என் அம்மா கிட்ட பேசினது தான் அவ மனசை நோகடிச்சிருக்கும். என் ஆம்படையான் செத்த அன்னைக்கு படுத்தவ ரெண்டு வருஷம் அல்லாடிக் கிட்டு கிடந்தவ கடைசி நேரத்திலேதான் என்கிட்ட சொல்லிவிட்டு காசி தீர்த்தம் வாங்கிட்டு போயிட்டா. என்னம்மா பேசினா அன்னைக்கு என் அம்மா .. .. .

.*****************. “கனகா நோக்கு ஒரு குழந்தை பொறக்கணும்டி நான் பகவான் கிட்டே போய் நேரிலே சேவிச்சுக்கிறேன். உன் தோப்பனாரைப் பார்க்க வந்த உன் ஆம்படையான் என்னைப் பார்த்தான் என்னம்மா பேசினான் தெரியுமா? நீ பேசினதை எல்லாம் சொன்னான். கல்யாணம் ஆன முணாவது வருஷந் தான் தனக்கு ஜாதக ரீதியா வாரிசு உண்டு அதுக்கு முன்னாடியே என்றால் தனக்கு துர் மரணம் சம்பவிக்கும்னு சொன்னான். அதிர்ந்து போனேன். பரிகாரம் ஏதும் கிடையாதா மாப்பிள்ளைன்னு நான் கேட்டதற்கு இனி மேலும் தான் காத்திண்டு இருந்தா எல்லாமே பரிகாசமா ஆகிடும் மாமின்னு சொன்னான். எப்போ ஒரு பெண் பாய் போட வாய்திறந்து கூப்பிட்டாளோ அப்புறமும் காத்திண்டு இருக்கிற ஆம்பிளை ஒரு ரெண்டும் கெட்டானாகத்தான் இருப்பான் என்று சொன்னான். தன்னை ஆசிர்வாதம் பண்ணச் சொல்லி என்னை நமஸ்கரித்து எழுந்து வாசலைத் தாண்டினவன் கீழே விழுந்தான்.... அல்பாயுசு... ஸ்தலத்திலேயெ முடிஞ்சுப் போனான். ஒண்ணு மட்டும் ஸ்படிகமா தெரியரதுடி கனகா . 25 வயசில் எல்லாத்தையும் அடக்கிக்கணும்னா கஷ்டம்தாண்டி. கட்டை வேகர வரைக்கும் உறுதியா நம்ப இருந்தாலும் நம்மோட உடம்பு ஒத்துழைக்கனும் – கூட இருக்கிறவா ஒத்தாசைப் பண்ணணும் .ஒரு பெண் தாம்பத்தியமே இல்லாம தகிச்சுப் போறது இருக்கே அந்தக் கொடுமை இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்டி. நான் உன்னோட அம்மாடி. நீ மறு கல்யாணம் பண்ணிக்க . முதல் ஆம்படையானைத்தான் உனக்கு புடிச்சியிருக்கான்னு நாங்கள் கேக்கல்ல! ஆனால் ரெண்டாவது புருஷனை உன் மனசுக்கு எந்த மாதிரி நீயே தேர்ந்தெடுத்துகடி..நானும் இந்த ரெண்டு வருஷமா உன் தோப்பனாரை எப்படி எல்லாம் கேட்டேன். மனுஷன் இத்தூண்டுக் கூட மசியலே. ஒரு நாளைக்கு நீ உணர்ச்சிகளின் உந்தலுக்கு ஆளாகி அப்போ இந்தக் குடும்பத்தின் மானமே சந்தி சிரிக்கிறத்தை விட ஆரோக்கியமா ந்ன்னா மறுவிவாகம் பண்ணித்தான் வைக்கனும் நோக்கு .உன் அண்ணன் மன்னியெல்லாம் பணம் காசுன்னு அலையறவா. உன் தோப்பனார் காலத்திற்கு பிறகு நீ எப்படி இருப்பே அவாளோடு? என் தோப்பனாரின் சொத்து எல்லாம் என் பேரியிலேயேதான் இருக்கு அதான் நான் ஜட்ஜ் மாமாகிட்ட சொல்லி உன் பெயருக்கு உயில் எழுதிவைச்சிட்டேன். ஆனா நோக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரிசு வந்தாதான் உன் அண்ணாவுக்கு சொத்துல பாக்யதை உண்டுன்னு எழுதிட்டன். இந்தா உயிலை வைச்சிக்கோ! கனகா நோக்கு ஒரு குழந்ததை பொறக்கணும்டி...*******************************
..
..... ‘போய் சேர்ந்தாள் என் அம்மா.!!!

சொத்துக்காக ஒரு கிழத்தை என் தலையிலே கட்டி வைச்சு என் பெண்மையைக் கொச்சப்படுத்திட நினைச்ச அவாளை நான் தண்டிக்கணும் சாமா.’

‘ஆனா அவா என்னை ஏத்துப்பாளோ? நான் வெறும் த்தாஸ்து... ஸ்வாக... த்தானே கனகா’

‘நான் தான் ஏத்துக்கனும் அதான் முக்கியம். சாமா எந்த வயசிலேயும் மனசும் உடம்பும் நரம்பு கொண்ட பிடில் மாதிரி ஒண்ணா இருந்தாத்தான் சுரம் நன்னா வரும் ஒண்ணு சரியில்லாம முரண்டுப் பிடிச்சாலும் அபஸ்வரம் தான் மிஞ்சும். இதோ இன்னும் சித்த நேரத்திலே நன்னா விடிஞ்சுடும். அப்புறம் நம்மைப் பார்த்த உடனேயே அவா கதைக் கட்டி பேசுவா காலையிலேயே வீடு களேபாரமா இருக்கும். ‘சாமா நோக்கு பிராமணார்த்தம்னா என்னனு தெரியுமோன்னோ? செத்தவா ஞாபகமா பிரத்யட்சமா நேரிலேயே அவா வந்திருக்கிறதா ஒரு பாவனை பண்ணிண்டு இருக்கிறவா மனசை திவ்வியமா குளிர வைக்கிறது தானே.’

‘ஆமா... ஆமா... நான் தான் இந்த ஊர்ல அதை செய்துண்டு வர்றேனே உன் ஆம்படையான் செத்த போது கூட நான் தானே பிராமணார்த்தம் செய்...’ சாமா முடிக்கவில்லை .

புரிந்துவிட்டது அவனுக்கு.

************************செத்தவா ஞாபகமா பிரத்யட்சமா நேரிலேயே அவா வந்திருக்கிறதா ஒரு பாவனை பண்ணிண்டு இருக்கிறவா மனசை திவ்வியமா குளிர வைக்கிறது தானே.’….கனகாவின் குரல் அவன் மனசில் முட்டி மோதி குத்தி கிழித்தது***********

பிள்ளையார் அருகில் இருந்த அரசவேம்பு இணைப்பில் இருந்த குங்குமம் சாமாவால் இப்போது ஒரு பொட்டாக கனகா நெற்றிக்கு குடியேறியது.

நமஸ்கரித்து எழுந்த கனகாவிடம் சாமா சொன்னான , “கனகா ஈரம் காய்ந்துப் போயிட்டுது விடிஞ்சுட்டுது வா போவம், எங்காத்துக்கு’”

அந்த அகரஹாரத்தின் அகங்கார அய்யர்வாள் மத்தியில் ஒரு மேற்குடி .தலித்திற்கும்
மேற்குடிக்கும் கலப்பு மணம் நடந்து முடித்ததை இன்னமும் அமர்த்தலாக அரசமரத்தடி பிள்ளையார் ‘சிவனே’ என்று பார்த்துக் கொண்டிருந்தார்..

. அவர் சிரசு மீது ஒரு வயதான பிராமணன் ஒரு குடம் நீருற்றி “பிள்ளையாரப்பா என் மகளை சீக்கிரம் கடையேத்தப்பா “ என்று வேண்டிக் கொணடார்.

இனிமேல் பிள்ளையார் மீதுள்ள ஈரம் காய வேண்டும்! !!!!!!…
.
இப்போது நன்றாக விடிந்து விட்டது…!!’

எழுதியவர் : அகன் (19-Aug-13, 8:56 pm)
பார்வை : 417

மேலே