இறவாக்காதல் (7)

.....இறவாக் காதல்.......
(பாகம் 7 )

கவிதாவுக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் மிக மிகத் திருப்தியாக இருந்தது, அவர்கள் ஏற்பாட்டில் களம் கண்ட பயிற்சிப் பட்டறை சிறந்த முறையில், ஆக்கப்பூர்வமான வெற்றியில் நடந்தேறியது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. மாணவர்கள் நல்கிய ஒருமித்த ஒத்துழைப்பும், அவர்களின் உழைப்பு வீணாகிவிடவில்லை என்ற பெருமிதத்தையும் கொடுத்தது. மாணவர்களின் பெற்றோர்களுடன் அவர்களை அனுப்பிவிட்டு, எஞ்சிய கடமைகளை முடித்து கவிதா வீடு வந்து சேருகையில் மாலை மணி 6 ஆகிவிட்டது.

"அம்மா, களைப்பாக இருக்குமா.. சூடாக தேநீர் கிடைக்குமா?" மாணவர்களிடம் சட்டாம்பிள்ளைத்தனம் செய்த மகள், தாயிடம் குழந்தையாய் கெஞ்சினாள். அதே வேளையில் அம்மாவின் முகத்தில், ஓர் ஆர்வம், ஒரு கிண்டலான மென்னகை, எதையோ சொல்லணும்,,, ஆனால் சொல்ல முடியாது போன்ற பாவனை தொங்கியிருப்பதைக் கண்டாள். "அம்மாமாமாமா......" நீட்டி முழக்கி கூப்பிட்டாள் தாயை. எதையோ சொல்ல நினைக்கிறீர்கள் தானே.. எங்கு சட்டுபுட்டென்று சொல்லுங்க பார்க்கலாம்" தாயிடம் வினவினாள். " நான் சொல்வதைக் கேட்டால் நீ மூச்சடைத்து போயிடுவாய்" தாய் மெல்ல ஆரம்பித்தாள். "அப்படியென்றால்... மூச்சடைத்து என்றால், நான் செத்துவிடுவேனே அம்மா, பிறகெங்கே நீங்க சொல்வதைக் கேட்பது? எதையோ சொல்லி வந்ததும் வராததுமாய் என் உயிரை விட சொல்றீங்களா அம்மா"?....... "சீ என்ன வார்த்தை சொல்கின்றாய், உன்னிடம் போய் சொல்ல வந்தேனே? அம்மா கோபமாய் வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டு வெளியே போய் உட்கார்ந்து விட்டார்கள்.

"அச்சச்சோ உண்மையில் அம்மா மனம் புண்படுபடி பேசிவிட்டோமோ?" குற்ற உணர்வில் தாயைப் பின் தொடர்ந்து ஓடினாள். தோட்டத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த தாயின் பின்னால் சென்று, தன் இரு கைகளையும் மாலையாக்கி, கழுத்தில் போட்டு அணைத்தபடி, கன்னத்தில் முத்தமிட்டாள். "அம்மா,,,,, என் செல்ல அம்மா, என் தங்க அம்மா, சும்மா விளையாட்டுக்கு உங்களை வம்பிழுத்தேனம்மா... இப்படி கோபமான முகம் உங்களுக்கு கொஞ்சமும் பொருந்தவேயில்லையம்மா... " மகள் கொஞ்சியபடியே கெஞ்சினாள். தாயின் முகம் தெளிந்தது. முகத்தில் சிரிப்புடன் மகளை அப்படியே இழுத்து அருகில் அமர்த்திக் கொண்டாள். " கவிதா இன்று ஒரு முக்கியமான அலைபேசி அழைப்பு வந்தது. யாரோ கண்ணனாம், கவிதா இருக்காளா என்று கேட்டான். அப்படியாரும் இங்கில்லை என்று சொல்லி அழைப்பை வெட்டி விட்டேன்" குறும்பாக அம்மா கூறியதைக் கேட்ட கவிதாவுக்கு மெய்யாகவே மூச்சடைத்துதான் போயிற்று. கண்ணன் அழைத்தாரா..? அம்மா இல்லையென்று அழைப்பை துண்டித்தார்களா..? " அம்மா என்ன சொல்கிறீர்கள்? கண்ணன் யாரென்று உங்களுக்கு தெரியாதா? இத்தனை வருடங்களாக கண்ணனுக்காக காத்திருக்கென்று உங்களுக்கு தெரியாதா? எந்நிலை நன்கு தெரிந்திருந்தும் இப்படி செய்து விட்டீர்களே அம்மா" கவிதா பொரிந்து தள்ளினாள்.

கவிதாவின் தாய் வாய் விட்டு சிரித்தாள் மகளின் புலம்பலைக்கேட்டு. " என்னை சற்றுமுன் சாவு அது இதுவென்று சொல்லி எப்படி மனதை புண்படுத்தினாய், அதற்கு பழிக்குப் பழி இது" என்று சிரித்தபடி சொல்லிய தாய் கவிதாவை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டாள். " கவிமா.. நாம் முன்பிருந்த ஊரில் பக்கத்து வீட்டு ஆசிரியர், நீ ஐயா என்று கூப்பிடுவாயே, அவர் கோலாலம்பூரில் ஒரு கருத்தரங்கிற்கு சென்றிருக்கும்போது, அங்கிருந்த கண்ணன் அவரை அடையாளம் கண்டு பேசி நம்மைப் பற்றி விசாரித்து, அவரிடமிருந்து என் அலைபேசி எண்ணை வாங்கி, எனக்கு அழைத்தது அந்த கண்ணன் தம்பி. உன்னைப் பற்றி விசாரித்தது. விவரம் சொன்னேன். அப்படியென்றால் கவிதா அலைபேசி எண் கொடுங்கள் நான் மாலை 7மணி போல் அவளை அழைக்கின்றேன்" என்றது அந்தத்தம்பி.. அம்மா நீளமாக விவரிக்கையில், தன் மனம் எங்கேயோ மேல்நோக்கி எழும்புவது போன்ற உணர்வு கவிதாவுக்கு. கண்ணன்.... நான் தேடும் கண்ணன்... அல்லும் பகலும் என் உணர்வுகளில், நாடி நரம்புகளில் ஊடுருவி என்னை நிலைக்கொள்ளாமல் தவிக்க வைக்கும் என் கண்ணன் வந்து விட்டாரா... தனக்குள் இத்தனைக் கேள்விகளையும் ஒரு சேரக் கேட்டுக் கொண்டிருந்த கவிதாவை, தாயார் சொடக்குப் போட்டு நனவுலகிற்கு திசை திருப்பினார்.

"அம்மா" ஆனந்தத்தில் தாயாரை இறுக்கி அணைத்துக் கொண்டாள் கவிதா. சட்டென்று கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் மணி பார்த்தாள். மாலை மணி 6.45 காட்டியது. "ஐயோ! இன்னும் 15 நிமிடங்களில் அவர் வந்திடுவாறே, நான் இன்னும் குளிக்கவில்லையே?' பதறியபடி விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள் கவிதா. கவிமா.. கவி.. கண்ணன் வருவதாக சொல்லவில்லை, அலைபேசியில் அழைப்பதாகத் தான் சொல்லியது" அம்மாவின் குரல் அவள் பதற்றத்தை சற்று நிதானப்படுத்தியது. ஆமாம்.. சரிதானே.. அதற்கென்ன அவர் அழைக்கும் போது இப்படியா அழுக்கு முகத்துடன் இருப்பது, என்னவோ அலைபேசியில் இவள் முகத்தைக் கண்ணன் பார்த்து விடக்கூடும் என்ற எண்ணத்துடன் கொஞ்சம் அளவிற்கு மீறிதான் அலட்டிக் கொள்கின்றாய் என்று அங்கலாய்க்கும் மனதை அடக்கியபடி குளியலறைக்கு சென்றாள். "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே.. இன்பத்தில் ஆடுது என் மனமே" என்ற திரைப்படப்பாடலை பாடியபடி குளித்து வந்தாள். பூஜையறைக்குச் சென்று "இறைவா என் வேண்டுதலை நிறைவேற்றி விட்டாய், கண்ணனின் மனதில் நான் எந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றேன் என்று தெரியவில்லை. ஆனால் என் மனம் முழுவதும் அவர்தான் இருக்கின்றார். அவரை மீண்டும் என்னுடன் பேசவைப்பதற்கு மிக்க நன்றி" கைக்கூப்பி வணங்கினாள். அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்று ஒதுக்குப்புறமாக அமர்ந்தாள். இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்த ரம்யமான அந்திமாலைப் பொழுதில் கண்ணனின் அழைப்பிற்காக காத்திருந்தாள்.

நீளும் நினைவுகள்..........!

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (20-Aug-13, 10:36 am)
பார்வை : 160

மேலே