வெப்பம் தணிய விழை!

பெண்ணீயம் பற்றிப் பெருமையாகப் பேசினாலும்
மண்ணின் மரபுகள் மாறவில்லை! - இன்றளவும்
இப்போதும் வாடும் முதிர்கன்னி மூச்சிலுள்ள
வெப்பம் தணிய விழை!

விண்ணையும் தாண்டும் விலைவாசி கூடுகிற
மின்வெட்டும் கட்டண ஏற்றமும் - எந்நாளும்
குப்பத்தில் வாழுகின்ற கூலி வயிறுகளின்
வெப்பம் தணிய விழை!

மரங்கள் வெட்டாதே ஏரிகுளம் காத்து
வரமாம் விளைநில வீடுதவிர் ! - கார்புகை
எப்போதும் மட்டுப் படுத்துக ஏகபூமி
வெப்பம் தணிய விழை!

நண்பா உனக்கொரு நன்பாவை நல்குவேன்
உன்பால் வருவோர்க் குதவிடு - மண்மீது
எப்போதும் ஏழைச் சிரிப்பில் இறைகண்டு
வெப்பம் தணிய விழை!

வெ. நாதமணி,
19/08/2013.

எழுதியவர் : வெ. நாதமணி (19-Aug-13, 10:25 pm)
பார்வை : 71

மேலே