சொந்தம்
தத்தைமொழி சத்தமிடும் வித்தகியாள் சித்தம்
..தத்திவரும் சுத்திவரும் சித்திரமாய் நித்தம்
தித்தித்திடும் உத்திதரும் முத்துஇதழ் முத்தம்
..தொத்தமிட எத்தனிக்கும் ரத்தினம்மேல் பித்தம்
புத்திதனில் அத்தசாமம் சித்தசன்தன் யுத்தம்
..புத்தனவன் பத்திரத்தை பொத்தலாக்கும் வித்தம்
கத்தியோதம் உத்தியோகம் கத்திவிழி எத்தும்
..கொத்தமல்லிக் கொத்துவாச முத்தமோத்மக் கொத்தம்
** ** **
இட்டமுடன் தொட்டணைக்க வட்டமிடுந் திட்டம்
..இட்டவளின் கட்டழகுப் பெட்டகத்தைத் தட்டும்
அட்சிகளின் அட்டகாசம் கட்டவிழ்ந்த கட்டம்
..அட்டவதானி முட்டாளாய் கொட்டாவி விட்டு
கெட்டுநிற்கும் பட்டாங்கு. புட்பவதி மொட்டு
..கொட்டமுடன் கொட்டுவாளாய் கொட்டுகின்ற
..கொட்டு
நட்டப்படும் தட்பமனம் தட்டழிந்து திட்ட
..நுட்பச்சிலை அற்பமென்று கற்பனைக்குள் வாட்டும்
** ** **
நந்தவனம் சிந்துமெழில் சொந்தமென வந்து
..நொந்தமனம் வெந்தநிலை சுந்தரமாய் தந்து
பந்தியிட புந்திதனை பிந்திடாமல் ஈந்து
..பந்தபாச தந்திதனை உந்திதந்து முந்தி
சந்திக்கும் அந்திக்கொரு வந்தனங்கள் ஏந்தி
..செந்தமிழின் சந்தமென சிந்தடிகள் சிந்தி
குந்தகங்கள் குந்தாமல் குந்தனமென பிந்து
..கந்தருவம் தந்திட்டால் சந்தனந்தான் சொந்தம்.