திசை மாறுமோ? தொடர் 1

1. நெய்தல் நிலம் .

நீரெழுந்து முன்னலைந்து
நிலவொளியில் மின்ன
நெய்தல்நில மங்கையர்தம்
நீள்விழிக்கு ஒப்ப
கூரெழுந்த மீன்கள்தம்மைக்
கொண்டுவந்த குமரர்
கொட்டியபின் கொள்ளுணவை
கோலமகள் ஆக்க

தேரெழுந்த தெய்வவளம்
திலங்கு மதிமாதர்
தெரியுமசை விழிகளினால்
தேடிவலைவீசி
நேரெழுந்த மார்பினரை
நிச்சயமாய்கொண்ட
நினைவதனில் ஆழ்ந்து கயல்
நீர்மகளின் கண்போல்

ஆருயிராம் அன்பர்தமை
ஆழியிடை கவரும்
அழகுதனில் குமரர்மனம்
அள்ளியதோ வென்று
பாருறங்கும் போதிலென்ன
பண்புகொண்டு நின்றார்
பாய்மரத்தைக் காற்றலைக்கும்
பாடெனநாம் ஆக

சேருருளும் சிற்றலைகள்
சிந்துநகை யோசை
சில்சிலென்று மோதியெழும்
சிறுதுளியின் கொஞ்சல்
நாருதிர்ந்த பூவெனவே
நள்ளிரவின் திங்கள்
நடைபயிலும் அலைமிதக்கும்
நளினஒளிப் பூக்கள்

தூரஎழும் அலை யணைந்து
தொட்டிலென ஆட்ட
துள்ளுகயல் படகருகில்
துடித்த விழிபோலும்
நீரலைகள் நீலவண்ணச்
சேலையெனக் காணும்
நெஞ்சிலிளங் காற்றணைந்து
நேசமொழிபேசும்

பேரரிய இன்பமதைப்
பெற்றனரோ என்றே
பெண்ணிவளின் நோவறியாப்
பின்னிரவில் நின்றார்
ஊரறியும் இவள்நிலைமை
உளமறியா தென்ன?
உன்செயலே என்றுவிழி
யொத்த கயல் தூக்கி

நீரெடுத்து தீயிடையில்
நிறுத்தியதில் இட்டு
நெஞ்சமதில் வஞ்சமதன்
நிலையழித்த மாதர்
சீரெழுந்த உணவுடனே
சிந்தை கொளும் அன்பை
சேர்த்தெடுத்தும் உண்ண இடும்
செந்தமிழர் பாவை

யாரெடுத்துப் போட்டவிதி
அத்தனையும் மாற்றம்
யாழிசைத்த பூமியிலே
வாளெடுக்க வைத்தார்
வேரெடுத்த பகைவளர
வெறுப்பெடுத்து நாளும்
விளைநிலத்தில் பயிர் வளர்க்க
வெட்டியழிப் போராய்

பாரெடுத்த பகையுணர்வில்
பாவியிவர் நேசம்
பறிகொடுத்த சுதந்திரத்தின்
பயன்விளைவு நாசம்
நேரெதிராய் வாழ்வுமுறை
நிர்க்கதியென் றாக்கி
நிலைமையதிற் சீரழிவும்
நேர்மைவழி மாற்றி

போரெனவே இவருடலம்
பூமிகடல் உண்ண
போனநிலை ஆழியலை
பார்த்தழுமோ ஓடி
கோரமிட்ட கீழ்மையினைக்
கொள்ளமனங் குமுறி
கோவெனவே ஓலமிட்டுக்
கொள்ளுங்கடல் இதுவோ!

********************

எழுதியவர் : கிரிகாசன் (21-Aug-13, 4:51 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 89

மேலே