நெஞ்சழுத்தக்காரி
போன் அடித்துக்கொண்டிருந்தது.சாப்பிட்டுக் கொண்டிருந்த யாமினி வருவதற்குள் அடங்கியது.எடுத்துப் பார்த்தால்.புது எண்.யாரென்றே தெரியவில்லை.சரி வேண்டுமானால் திரும்பவும் வரும் பொது பார்த்துக் கொள்ளலாம் என்று அடுப்படி வேலையில் மூழ்கினாள்.இரவு உணவு முடிந்தது.நாளை காலைக்கு வேண்டியதை இப்போதே எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.மீண்டும் போன் அலறியது.இப்போது கணவன் வேணு தான் எடுத்தான்.
"ஹலோ,என்ன அப்படியா?
நீங்க யார் பேசுறீங்க?
எப்போ?சரி சரி
வறோம்."
என்றவன் ஒரு பதட்டத்துடன் யாமினி பக்கம் திரும்பினான்.என்னாச்சு என்று கேட்டுக்கொண்டே யாமினியும் அருகே வந்தாள்.வேணு யோசித்தான் எப்படி சொல்வது?.ஆனால் சொல்லித்தானே ஆகவேண்டும்.
"யாமினி அதிர்ச்சி ஆகாதம்மா ஊர்ல இருந்து போன்.உன் பெரியப்பா பையன் பேசுனான்.உன் அப்பா தவறிட்டாராம்."
சிறிது நேரம் அசைவில்லை அவளிடம்.வேணு உலுக்கினான் பயத்தில்"யாமினி,யாமினி,.."
"என்னங்க சொல்றீங்க,தீபாவளிக்கு தான பாத்துட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்தோம்?நல்லாத்தான இருந்தார் .இப்போ வந்து மூணு வாரத்துல இப்படி செய்தி வருது?"அழுகையா,கேள்வியா என்று பிரித்தறிய முடியாத உணர்வில் கேட்டாள்.
"ஹார்ட் அட்டக்காம்.இரண்டு தடவை இருமிருக்காறு.அப்படியே சுவர்ல சாஞ்சு உக்காந்ததும் பேச்சு மூச்சு இல்லையாம்.டாக்டர் வந்து பாத்துட்டு முடிஞ்சுருசுன்னு சொல்லிட்டாராம்.
அசையவேயில்லை யாமினியிடம்.ஆனால் இயந்திரகதியில் வேலைகள் நடந்தது.வேணு தான் எல்லாம் எடுத்து வைத்தான்.யாமினி யோசித்தபடியே இருந்தாள்.கண்ணில் ஒரு துளி நீரில்லை.பயந்துவிட்டான் வேணு.அதிர்ச்சியில் என்னமோ ஆகி விட்டதோ என்று கூட யோசித்தான்.
"யாமினி,யாமினி...என்னம்மா அப்படியே உக்காந்துட்ட?போறப்படனும்ல?".
கேட்டதும் பட படவென எழுந்தாள்.அடுப்படிக்குள் ஓடினாள்.எல்லாம் எடுத்து அடுக்கி சரி செய்தாள்."என்னங்க,ரேகுலடர மூடிட்டேன்,பின் கட்டு கதவையும் மூடிட்டேன்.கொஞ்சம் செக் பண்ணிட்டு வாங்க.நான் வாசல்ல நிக்குறேன்"என்றபடி சென்றாள்.
அதன் பிறகு ஆட்டோ வந்தது,ஏறி பேருந்து நிலையம் வந்து,ஒரே பஸ்ஸாக ஏறினார்கள்.அமைதியாக கண் மூடினாள்.
அப்பா என் அப்பா எல்லா பெண் பிள்ளைகளுக்கும் அப்பா பிடிக்குமாமே!ஆனால் எனக்கு அப்பா,அம்மா இருவரும் சமமாகத்தான் பிடித்தது.அப்பாவுக்கு எப்படியோ தெரியாது.ஆனால் எந்த சூழ்நிலையிலும் உரிமையாய் பேசியது கிடையாது.கடை,வேலை,சம்பாத்யம் அப்படியே இருந்து விட்டார்.கேட்டது எல்லாம் கிடைத்தது.ஆனால் உக்காந்து பேசியதில்லை.என் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டே வந்தது பின்னாளில் தான் தெரியவந்தது.
ஒரு நாள் அம்மா என்னைக் கூப்பிட்டு "யாமினி பஸ்சுல போகும் பொது வரும்போதோ,இல்ல வெளில போகும்போதோ யாராவது உரசினா சும்மா இருக்காத ஒரு அறைவிட்று.""அம்மா,நேத்து நடந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?""அப்பா சொன்னாரு.பஸ் ஸ்டாண்ட் ல முன்னால அவரு வேகமா பொய் திரும்பி பாத்தாராம் நீ பின்னால நடந்து வந்துட்டு இருந்தியாம் ஒருத்தன் உன்ன உரசிட்டு போனதையும்,நீ அவன மொரச்சதையும் பாத்தாராம்.ஆனால் உன்கிட்ட சொல்ல தயக்கம்.என் கிட்ட சொன்னாரு".
என் அப்பாவா அடிக்கச் சொன்னது?பழமைக்கும்,புதுமைக்கும் இடையே இருப்பவர்.அவர் வளர்ந்த சூழ்நிலையில் பெண் பிள்ளைகளிடம் ஒரு தூரத்தை வளர்க்கச் செய்தது.அது மகளாகவே ஆனாலும்.
வீடு வந்து சேர்ந்தோம்.இரவு 2 மணி.என்னைப் பார்த்ததும் அழுகுரல் அதிகரித்தது.நான் நேராக அப்பாவிடம் சென்றேன்.எப்போதும் போல இருந்தார்.அதே சந்தனம்,வேட்டி கட்டி உறங்கிக்கொண்டிருந்தார்.
பக்கத்தில் உக்கார்ந்தேன் கைகளைப் பார்த்தேன்.எனக்கு செடியை அறிமுகப்படுத்திய கைகள்.வேர்,தண்டு,பூ,இல்லை என்று.பின்னாளில் என் நோட்டுக்கு காக்கி அட்டை போட்ட கைகள்.இப்போது மரத்துப்போய் கட்டையாய்.
அம்மா அருகே வந்தாள்"பாருடி எப்படி இருந்த மனுஷன் திடீர்னு ஏமாத்திட்டு போயிட்டாரே!".என்று ஆரம்பித்தாள்.சிறிது நேரத்தில் அடங்கி விட்டு "நீ பதினாறு விசேஷம் வரை இங்கேயே இரு"என்றாள்.பதிலாய் தலை ஆட்டினேன்.
விடிந்தது.ஒவ்வொருவராய் வந்தனர்.யாரோ சொன்னார்கள்"எல்லாரும் வந்தாச்சுல்ல சாயங்காலமே எடுதுறாம்ல?".சரி என்பது போல சலசலப்பு.தொடர்ந்து எல்லாம் நடந்தது.யார் யாரோ வந்தார்கள்.என்னை கட்டிப் பிடித்து அழுதார்கள்.பதில் சொல்லத்தோணவில்லை.காதில் விழுந்தது"பெரிய நெஞ்சழுத்தக்காரியா இருப்பா போல?ஒரு சொட்டு கண்ணீர் வரலையே"என்று.
"கடைசியா பாத்துக்கோங்க"சொன்னதும் அழுகுரல் அதிகரித்தது.அம்மா அழுது புரண்டு கொண்டிருந்தாள்.என்னைப் பார்த்து"அழுடி,வாய்விட்டு அழு.மனச இப்படி கல்லா வச்சுருக்காத அழு"என்றாள்.ஏனோ வரவில்லை கண்ணீர்.ஆனால் மனசு மட்டும் "அப்பா அப்பா "என்று ஓலமிட்டது.
முடிந்தது.அப்பாவை எடுத்துச் சென்றார்கள்.அண்ணன் போனான் கொள்ளி வைக்க.இப்போது எல்லாருக்கும் நான் வித்தியாசமாய்த் தெரிந்தேன்.வினோதமாய்ப் பார்த்தார்கள் அழவில்லை என்று.கிளம்பினேன் வெளியே.
"ஒரு மணி நேரமா இந்த யாமினியைக் காணோம்!எங்க போனா?"தேடும் குரல்கள் வாசலில் கேட்டது.
என்னைப் பார்த்ததும் சப்தநாடியே அடங்கியது அனைவருக்கும்.அம்மா அலறியபடி வந்தாள்"என்னடி இந்தக் கோலத்துல வந்து நிக்குற?"அதற்குள் ஒரு வயதான பாட்டி என்னிடம்"நம்ம 'இது'ல சுமங்கலிகள் மொட்டை போடக்கூடாதும்மா .ஆகாது"என்றாள்.எனக்கு கேட்கத் தோன்றியது யாருக்கு ஆகாதென்று.இன்னொருத்தி"மொட்டை போட்டு தான் பாசத்த நிரூபிக்கணுமா என்ன?".எப்படி சொல்வேன் நான் உள்ளுக்குள்ளே அழுததை.அப்பா என்னையும் ஆணுக்கு சமமாக தானே வளர்த்தார்,படிக்க வைத்தார்.
ஒவ்வொரு முறையும் விளையாடப் போகும்போது அம்மா பயப்படுவாள்."பொட்டப்புள்ள அடி பட்டா கூட பவுன் போடணும்"என்று.அப்பா தான்"நீ சும்மா இரு"என்று அடக்கியவர்.ஆயிரம் பேர் இருக்கும் சபையில் தலை நிமிர்ந்து தைரியமாய் நடக்கச் சொல்லித்தந்தவர்.என் வளர்ச்சியின் போது ஆணுக்கு நிகராய் வளரச் செய்த என் அப்பாவுக்கு நான் ஆணாய் வழியனுப்ப விரும்பினேன்.
புரிந்து கொள்ள சக்தியில்லாதவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியப்போவது இல்லை.அவர்கள் வரை "அழுவது"மட்டுமே துன்பத்தின் வெளிப்பாடு.
இப்போதும் யாரோ பின்னால் சொன்னார்கள்"பெரிய நெஞ்சழுத்க்காரியா இருப்பா போல".....