இறவாக்காதல் (9)
......இறவாக்காதல்.....
( பாகம் 9 )
அறைக்குள் சென்ற கவிதா, விறுவிறுவென்று நாளைக்கு பள்ளிக்கு கொண்டுச் செல்லும் ஆவணங்களை சரி செய்து எடுத்து வைத்தாள். அனைத்தையும் செவ்வென முடித்த பின், அவள் எப்போதும் எழுதும் கவிதைப் புத்தகத்துடன், கண்ணனின் அழைப்பிற்காக காத்திருக்கும் வேளையில் புத்தகத்தின் பக்கங்களை ஆவலுடன் வருடினாள். புத்தகத்தின் முகப்பில் "எனது இனிய நட்பே" என்று எழுதி, கீழே 9வயதில் அவள் பிறந்த நாளில், கண்ணனையும் அவளையும் அருகருகே நிற்கவைத்து அவள் அப்பா எடுத்திருந்த புகைப்படத்தை ஒட்டியிருந்தாள். புகைப்படத்தினை வருடிய அவள் விரல்கள் தானாகவே கீழே "எனது இனிய கண்ணனுக்கு " என்று எழுதின..
கண்ணனின் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தவள் " கண்ணா இப்போது உங்கள் முகம் எப்படியிருக்கும்... பார்க்க ஆவலாகயிருக்கின்றதே" என்று தமக்குள் கேட்டுக் கொண்டாள். அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கையில், குறுகுறுவென்று மனதில் ஒரு கவிதை துளைத்துக் கொண்டு வந்தது. விறுவிறுவென்று பக்கத்தைத் திருப்பி, மடமடவென்று மனதில் தோன்றியதை எழுதினாள்...
கவிதாவின் கண்ணனே......!
ஏதேதோ பேசணும் என்று ஆவலோடு
ஓடி வந்தேன் உன்னைத் தேடி......
ஏங்கிய ஏக்கங்களை எல்லாம், ஒரு
இறுக்கமான அணைப்பில்
விளக்கிட வேண்டும் என்ற துடிப்போடு
ஓடி வந்தேன் உன்னைத் தேடி.....
ஆனால்....
உன்னை அருகினில்,,
மிகமிக அருகினில்,,
சந்தித்ததும்........... ஸ்தம்பித்துவிட்டேன்...
பேச்சிழந்து, செயலிழந்து,
நாணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றேன்....
மணி நேரங்கள் மெளனங்களில்,
கரைகின்றனவே.....
மாற்றுவழி தெரியவில்லை....
என்னிலை நன்கு புரிந்திருந்தும்,
புரியாதவன் போல் என்னையே
பார்க்கின்றாயே மாயக்கண்ணா......
என் இதயசாளரங்களை மெல்ல திறக்கின்றேன்,
நுழைந்து விடு.........
என்னுள் கலந்துவிடு.....
ஆனந்த பைரவியை ஆராதிப்போம்....
கவிதையில் ஏக்கத்தை கொட்டி முடிக்கவும், அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
அழைத்தான் கண்ணன். ஏனோ தெரியவில்லை.. அவன் குரலைக் கேட்ட மாத்திரத்தில் அவளுள் ஒருவித இனங்காண முடியாத இன்ப அதிர்வுகள் ஏற்பட்டன. "கவி சாப்பிட்டாயா.. இப்போது எங்கிருக்கின்றாய்" ஆவலுடன் கேட்டான் கண்ணன். "எனதறையில் இருக்கின்றேன்.." கவிதா பதிலளித்தாள்." அலைபேசியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு வாயேன்" கண்ணன் சொன்னான்." ஏன் என்று கேட்டாள் அவள். "இந்த பெண்ணிலவிடம் தூது விட அந்த வெண்ணிலவை அனுப்பியுள்ளேன்... வாயேன் வெளியே" என்ற கண்ணனின் கெஞ்சலில் மயங்கிபோய் பதில் ஏதும் பேசாமல் வெளியே வந்தாள்.
முழுநிலா வானத்தைக் கிழித்துக் கொண்டு தன் ஒளிக்கீற்றுகளைப் பூமிக்கு அனுப்பியபடி இருந்தது. நிசப்தமான இரவில் இளமையாய் நிலவு, இனிமையாய் கண்ணனின் குரல்.. அப்படியே மெய்மறந்து உட்கார்ந்துவிட்டாள். வாழ்க்கை சிலகணங்கள் அப்படியே உறைந்து போய்விட்ட மாதிரி ஓர் உணர்வு." இன்று பௌர்ணமியா?" இவ்வளவு அழகாக இருக்கின்றதே. வானில் இருக்கும் பௌர்ணமி அழகா, அல்லது கண்ணனுடன் பேசுவதால் பௌர்ணமி அழகாக தோன்றுகின்றதா" தனக்குள் பட்டிமன்றம் நடத்தினாள் அலைபேசியில் அவளுக்காக கண்ணன் காத்திருப்பதை மறந்தபடி.... பொறுமையிழந்த கண்ணன் அழைப்பைத் துண்டித்துவிட்டு, மீண்டும் அழைத்தான்.
திடுக்கிட்டு தன் நினைவுக்கு திரும்பிய அவள், அவசர அவசரமாக அலைபேசியை உயிர்ப்பித்தாள். "கவி.... என்னாச்சு... ? "ஒன்றும் இல்லை" வெளியில் வரச்சொன்னால், அந்த நிலவுக்கே போய்விட்டாயா?' கண்ணன் கிண்டலடித்தான். "கவி..., இந்த நிலவைச் சாட்சிவைத்து உன்னிடம் ஒன்று கேட்கவா? கண்ணனின் கேள்விக்கு 'கேளுங்க'என்று பதிலளித்தாள். சிறுவயதில் நீ சொன்ன மாதிரி என்னைத் திருமணம் செய்து கொண்டு என்னோடு வாழ்வாயா? கண்ணனின் கேள்வியில் பதட்டம், ஆர்வம், தாபம்,என்று அனைத்து உணர்வுகளும் ஒன்றாக தொனித்ததை உணர்ந்தாள் கவிதா.
"இந்தக் கேள்விக்கு பதிலை என்னால் அலைபேசி வழி கூறமுடியாது. நீங்கள் நேரில் வந்தால்தான் சொல்வேன்" கவிதா அடம்பிடித்தாள். கண்ணனும் அரைமனதுடன் சம்மதித்தான். இன்று நிறைந்த பௌர்ணமி. அதுபோல் அடுத்த பௌர்ணமியில் உன்னைச் சந்திக்கின்றேன் என்றான் கண்ணன்."அதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கின்றதே கண்ணா.." தவிப்போடு பதிலளித்தாள் கவிதா. 'என்ன கவிமா, 12வருடங்கள் காத்திருந்த உன்னால் ஒரு மாதம் காத்திருக்கமுடியாதா.. என்னாலும் முடியாதுதான், இருந்தாலும் அன்றுதான் உன்னை சந்திக்கணும் என்று மிகவும் ஆசைப்படுகின்றேன் கவிதா'.... "ஏன் அப்படி என்ன அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நாள் அது?" கவிதா சிணுங்கியபடி கேட்டாள். அவன் சந்திப்பைத் தள்ளிப் போடுவதில் அவளுக்கு சிறிதும் இஷ்டமில்லை.
"கவிதா, அன்றுதான் என் தேவதை பிறந்தநாள். முதன்முதலில் இந்த அழகு தேவதையை அவள் பிறந்தநாளில் சந்திக்க ஆசைபடுகின்றேன்" கண்ணன் சொன்ன பிறகுதான் அடுத்தமாதம் தனக்கு பிறந்தநாள் என்ற நினைவே வந்தது அவளுக்கு. அவன் அன்பினில், அக்கறையில் மனம் நெகிழ்ந்தாள். அவன் எண்ணப்படி அன்றே சந்திக்கலாம் என்ற உறுதிமொழியுடன், இனிய இரவு இருவரையும் சூழட்டும் என்ற வாழ்த்துடன் அலைபேசியை அணைத்தார்கள். ஒரு இன்பமான, நிம்மதியான, குளுமையான உணர்வு இருவருள்ளும் ஊடுருவியது. தன் அறையில் வந்து அமர்ந்த கவிதாவுக்கு மனங்கொள்ளாத மகிழ்ச்சி நிரம்பியது. தலையணையை இறுக அணத்தபடி இன்னும் ஒருமாத இடைவெளியை ஓட்டனுமே என்ற ஏக்கத்துடன் விழிகளை மூடினாள் சந்தோஷத்திற்கு அவள் வாழ்வில் ஆயுள் குறைவு என்பதை உணராமல்.......
விரைவில் சந்திப்போம்......!